கரோனா: மிஞ்சிப் பரவும் மனிதநேயம்
உலகை அச்சுறுத்தி கொண்டு இருக்கும் கரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
உலகை அச்சுறுத்தி கொண்டு இருக்கும் கரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆதரவற்றோர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குப் பல தன்னார்வலர்கள் பல்வேறு வகையில் உதவி செய்து வருகின்றனர். அவர்கள் எங்கு என்ன செய்தார்கள் என்று பார்க்கலாம்.
சென்னை தண்டையார்பேட்டை சேர்ந்தவர் வினோத்குமார். ஆட்டோ ஓட்டுநரான இவர் அன்றாடம் 150 பேருக்கு உணவு தயார் செய்து வழங்கி வருகிறார்.
""ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து வீட்டில் தான் இருந்து வருகிறேன். முதலில் 3 கிலோ அரிசி மட்டும் உணவாக தயார் செய்து வழங்கினேன். ஏன் நாம் இதனை இன்னும் பலருக்கு செய்யலாமே என்ற எண்ணம் உருவானது. அதற்கு முதலில் சரி என்று சொன்னவர் என்னுடைய மனைவி இந்துமதி. உணவு சமைப்பதற்கு அவர் தான் துணையாக இருந்தார். அன்றாடம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகிறது.
Advertisement
நான் உணவு வழங்குகிறேன் என்று தெரிந்ததும் என்னுடைய நண்பர்கள் கோபிநாத், மணி, ரவி ஆகியோரும் எனக்கு உதவி செய்ய வந்தார்கள். உணவு சமைத்தவுடன் பார்சல் செய்து பீச் ரோடு, திருவல்லிகேணி பகுதியிலுள்ள சாலையோரம் வசிப்பவர்களுக்கு வழங்கி வருகிறோம். ஆட்டோ ஓடவில்லை வருமானம் இல்லையென்றாலும், இந்த உணவு சமைத்து சாலையோர வாசிகளுக்கு வழங்குவது ஆத்ம திருப்தி அளிக்கிறது'' என்கிறார் வினோத்குமார்.
சேலம் இளைஞர் குழுவை சேர்ந்த 15 பேர் தங்களே உணவு தயாரித்து மாவட்டம் முழுவதும் இலவசமாக உணவு விநியோகம் செய்து வருகிறார்கள்.
தற்போது 144 தடை உத்தரவினால் அரசின் நிபந்தனைகளை ஏற்று மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெற்று மேலும் மதியம் மற்றும் இரவு இரண்டு வேளை உணவளிக்கத் துவங்கினோம்...
முதலில் 80 நபர்கள் மட்டுமே இருந்தார்கள் 144 தடை உத்தரவால் கடைகள் அடைக்கப்பட்டதால் அதில் உணவகம் மற்றும் பல்வேறு தொழில்களில் கூலி வேலைப் பார்த்த நபர்களும் பலரும் சாலையோரம் தங்க ஆரம்பித்தார்கள். அதன் விளைவாக 400 நபர்கள் சாலையில் இருந்தார்கள்.... பின்பு 10 நாட்கள் கடந்த நிலையில் வீட்டில் இருக்கும் மக்களும் சாலைக்கு சென்றால் உணவு கிடைக்கும் என்று தெரிந்து கொண்ட நிலையில் அவர்களும் சாலையில் அமர துவங்கினார்கள்...
தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தினமும் உணவுக்காக சாலையோரம் காத்துகொண்டு இருக்கிறார்கள்... அவர்கள் அத்தனை பேருக்கும் உணவளித்துப் பசி தீர்ப்பதே எங்கள் ஆசையாக இருந்தது முதல் நாள் 10 கிலோ அரிசியில் துவங்கி தற்போது 75 கிலோ முதல் 100 கிலோ வரை எங்கள் அறக்கட்டளை அலுவலகத்திலே சமைத்து வருகிறோம்....
இதனைத் தொடர்ந்து பல இடங்களில் ஏழை நடுத்தர மக்கள் உணவு பொருட்கள் கிடைத்தால் சமைத்து உண்ணுவோம் என்றும் பசியோடு இருக்கிறோம் என்றும் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்கள் சேலம் மாநகரில் கருகல்பட்டி பகுதியில் பஞ்சாதங்கி ஏரிக்கரை பகுதியில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பசியோடு இருக்கிறோம் என்று வீடியோ வெளியிட்டார்கள்... அந்த வீடியோ வெளியான அதே நாளில் 12 மணி நேரத்தில் எங்களிடம் நாங்கள் சமைக்க சேகரித்து வைத்து இருந்த பொருட்களை முதல் கட்டமாக ரேஷன் கார்ட் இல்லாத 50 குடும்பங்களுக்கு வழங்கினோம்...
கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் உணவகம் நடத்தி வரும் கணேஷ்குமார் மற்றும் அவரது ஊழியர்கள் இணைந்து தினந்தோறும் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். தினமும் தக்காளி சாதம், தயிர் சாதம், பிரியாணி ஆகியவற்றை உணவகத்தில் தயார் செய்து, நகரில் வழங்கி வருகின்றனர்.
குடிக்க தண்ணீரும் வழங்க கோரிக்கை வைத்த காரணத்தினால், தற்பொழுது உணவு மட்டுமின்றி, குடிதண்ணீரும் வழங்கி வருகின்றனர். கணேஷ்குமார் மற்றும் அவரது ஊழியர்களின் முயற்சியைப் பார்த்த அந்த உணவகத்தின் வாடிக்கையாளர்களும், உணவு தயாரிக்க உதவி செய்து வரு
கின்றனர்.
கடலூரில் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து சாலையோரம் , ரயில் நிலையம், பேருந்து நிலையம் தங்கியிருந்தவர்களை அரசுப் பள்ளியில் தங்க ஏற்பாடு செய்ததுடன் அவர்களுக்குப் பல தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து மூன்று வேளையும் உணவு வழங்கி வருகிறார்கள்.
திருச்சியில் அம்மா உணவகங்கள் திறந்திருந்தாலும் பலர் அங்கு செல்ல முடியாத நிலையிலும் தெரியாமலும் உள்ளனர். அவர்களின் பசியைப் போக்கும் வகையில் திருச்சியைச் சேர்ந்த பல்வேறு தன்னார்வலர்கள், நல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.
கடந்த மூன்று நாட்களாக இலவசமாக உணவுப் பொட்டலங்களை விநியோகம் செய்து வரும் மனிதம் அமைப்பின் தினேஷ்குமார். குறிப்பாக சாலையோர மனநோயாளிகள், மாற்றுத் திறனாளிகள் உதவி கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள். அவர்களைக் கண்டறிந்து உணவு வழங்கி வருகிறார் தினேஷ்குமார். உணவு வழங்க அரசு சில கட்டுப்பாடுகளை விதித்த நிலையில்
சுகாதாரத்துறையினருக்கு தகவல் அளித்து, அவர்களின் அனுமதியோடு, உணவு வழங்கி வருவதாக தன்னார்வலர் தினேஷ் தெரிவிக்கிறார்.
எங்கள் சேவை மக்களின் முழுப் பசியைத் தீர்க்கும் வரை தொடரும் என்கிறார்கள் .