ஞாயிறு கொண்டாட்டம்

பசுமை மனிதர்!

இன்றைய சுற்றுப்புறச் சூழல் மாசுபட்டிக்கும் நிலையில் வீட்டைச் சுற்றிலும் சிறிய வனத்தை உருவாக்கி ஆண்டு முழுவதும் தூய்மையான ஆக்சிஜனை சுவாசித்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த ஜஸ்வந்த் சிங்.

சுதந்திரன்

இன்றைய சுற்றுப்புறச் சூழல் மாசுபட்டிக்கும் நிலையில் வீட்டைச் சுற்றிலும் சிறிய வனத்தை உருவாக்கி ஆண்டு முழுவதும் தூய்மையான ஆக்சிஜனை சுவாசித்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த ஜஸ்வந்த் சிங்.

சென்னை கிழக்கு முகப்பேர் திருவள்ளுவர் நகரில் மூன்று தலைமுறைகளாக வசித்து வரும் ஜஸ்வந்த் சிங் நான்கு கிரவுண்ட் மனையில் கட்டப்பட்ட வீட்டைச் சுற்றி சிறிய காடு ஒன்றை உருவாக்கியுள்ளார். அந்தக் காட்டில் பாரம்பரிய சந்தன மரங்கள் , மருத்துவக் குணமுள்ள செம்மரங்கள், அரிதான தில்லை போன்ற மரங்களுடன் சுமார் முந்நூறு மூலிகைச் செடிகளையும், பூச் செடிகளையும், பழங்கள் தரும் மரங்களையும் உருவாக்கி வீட்டினுள் வெப்பம் உணராமல் ஜில்லென்று வாழ்ந்து வருகிறார்கள் ஜஸ்வந்த் சிங்கும் அவருடைய குடும்பத்தினரும்.

"பசுமை மனிதர்' ஜஸ்வந்த் மனம் திறக்கிறார்:

""தாத்தா முதல் நாங்கள் கட்டடம் கட்டித்தரும் பொறியாளர்களாக இருக்கிறோம். நான்காவது தலைமுறையான எனது மகன் கூட கட்டடப் பொறியாளர்தான். தாத்தா சென்னைக்கு 1940-இல் வந்துவிட்டார். இந்த வீட்டிற்கு எங்கள் குடும்பம் வந்த போது எனக்கு வயது இருபது. நான் பிறந்தது படித்தது எல்லாம் சென்னையில்தான். அதனால் நான் சென்னைவாசிதான். சிறு வயதிலேயே வீட்டைச் சுற்றிலும் செடிகள் மரங்கள் வளர்க்க வேண்டும் என்ற புரிதல் இருந்தது. அதனால் தொடக்கத்தில் துளசி செடிகளை வளர்க்க ஆரம்பித்தேன். முப்பது ஆண்டுகளில் இந்தச் சின்ன வனத்தை உருவாக்க முடிந்தது.

இந்தியா முழுவதிலும் மரங்கள் , செடிகளைச் சேகரித்திருக்கிறேன் . அதனால் சுவாசிக்க மாசில்லாத காற்றுக்கு உத்திரவாதம் கிடைத்திருக்கிறது. வீட்டின் தேவைகளுக்குப் பற்றாக்குறையில்லாமல் தண்ணீர் கிடைக்கிறது. வீட்டிற்குக் காய்கறிகள், பழங்கள் கிடைக்கின்றன. இதைவிட வேறு என்ன வேண்டும்..?

எங்கள் சொந்த ஊர் பஞ்சாபில் ஜலந்தர் நகருக்குப் பக்கம். அங்கே விடுமுறைக்குப் போகும் போது "சென்னையில் குடிக்கத் தண்ணீர் குடுவைகளில் காசு கொடுத்து வாங்குகிறோம்.." என்று சொல்வோம் "அப்படியா..' என்று அதிசயமாகக் கேட்பார்கள். இப்போது சுவாசிக்க, கூடிய சீக்கிரம் ஆக்சிஜன் சிலிண்டரை விலை கொடுத்து வாங்க வேண்டியது வரும் என்று சொன்னால் அவர்கள் ஆச்சரியமாகப் பார்ப்பதில்லை. மாசுபட்டிருக்கும் ஐசஈதஅஐவஅ சுற்றுப்புறச் சூழ்நிலையில் அது நிகழும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று நான் சொன்னதை ஆமோதித்தார்கள். அந்த அளவுக்கு மக்களுக்குச் சுற்றுப்புறச் சூழ்நிலை குறித்துப் புரிதல் வந்திருக்கிறது.

எனக்கு திருக்குறள் மிகவும் பிடிக்கும். திருக்குறள் மனப்படமாகத் தெரியும். திருக்குறளில் சொல்லாதது எதுவுமே இல்லை. அதனால் வீட்டில் இருக்கும் "மா' மரத்தில் திருவள்ளுவர் உருவத்தைச் செதுக்கி வைத்திருக்கிறேன். இந்தச் சின்ன வனம் குறித்துக் கேள்விப்பட்டு, வனத்தைப் பார்க்க கல்லூரி பள்ளி மாணவர்கள் வருகிறார்கள்.

"செம்மரம்' வீட்டில் வளர்க்க அனுமதி உண்டா என்று கேட்பார்கள். இப்போது செம்மரம் (சிவந்த சந்தன மரம்) வீட்டில் வளர்க்க அரசு அனுமதி உண்டு. ஆனால் வளர்ந்த பிறகு வெட்ட அனுமதியில்லை. வெள்ளை சந்தன, சிவந்த சந்தன மரங்களின் எண்ணிக்கையைப் பெருக்கி வருகிறேன் . மருத்துவக் குணம் உள்ள தில்லை மரம், கற்பூர மரம், சீனியை விடப் பல மடங்கு இனிப்புள்ள செடியும் உண்டு.

தமிழ் நாட்டின் மாநிலப் பூவாகச் சொல்லப்படும் செங்காந்தள் பூவும் உண்டு. அருமையான புல்வெளியில் நடந்தால் பச்சை கம்பளத்தில் நடப்பது போல இருக்கும். வனத்தைக் காலை மாலை ஒரு முறை சுற்றி வந்தால் போதும் புத்துணர்ச்சி நாள் முழுவதும் நீடிக்கும் .

"பிரம்ம கமலம்' என்ற பூச்செடி எங்களுடைய வனத்தில் உள்ளது. ஹிமாலயத்திலிருந்து கொண்டு வரப்பட்டது . பிரம்மாவின் கையில் இருப்பதாலும் தாமரை போன்ற தோற்றம் உள்ளதாலும் இந்தப் பெயர் வந்தது . "பிரம்ம கமலம்' ஆண்டிற்கு ஒரே ஒருமுறை இரவில் மட்டும் பூக்கும். அப்போது இந்த வனமே மணக்கும். அந்தக் காலத்தில் மை ஊற்றி எழுதும் பேனா இல்லாததால், மையைத் தொட்டுத் தொட்டுத்தான் எழுதுவார்கள். அதற்கு ஒரு வகை பழத்தை நசுக்கிப் பயன்படுத்தினார்கள். அந்தப் பழம் உருவாகும் மரம் என்னிடம் உள்ளது. சாமியார்கள் கையில் ஏந்தும் திருவோடு உருவாகும் மரம் என்னிடம் உள்ளது. இந்தத் திருவோடில் விஷம் கலந்த உணவு வைக்கப்பட்டால், விஷம் முறிந்து விடுமாம்.

சீனி துளசி சாதாரணச் சீனியைவிட 250 மடங்கு இனிப்பு அதிகம். அந்த இலைகளை உலர வைத்து போடி செய்து சீனி போலப் பயன்படுத்தலாம். சர்க்கரை குறைபாடுள்ளவர்களுக்கு இது கை கண்ட மருந்து. இந்தச் செடியை தேவைப்படுபவர்களுக்கு மட்டும் விற்று வருகிறேன். வேறு எந்தச் செடியும் விற்பனைக்கு இல்லை.

தில்லை இலையைப் பறித்தால் அதன் காம்பிலிருந்து பால் சுரக்கும். அது குஷ்ட நோயைக் குணப்படுத்துமாம். ஆனால் தவறுதலாக அந்தப் பால் கண்ணில் விழுந்து விட்டால் பார்வை போய்விடும். அந்தக் காலத்தில் சிதம்பரத்தில் இந்தத் தில்லை மரங்கள் பெருகிக் கிடந்தன. இப்போது ஒன்றிரண்டு உள்ளனவாம். செங்காந்தள் பூ பார்க்க கண்ணைக் கவர்ந்தாலும் விஷமுள்ளது. பாம்பு விஷத்தை செங்காந்தள் முறிக்குமாம்.

வீட்டின் மொட்டை மாடியில் காய்கறித் தோட்டம். தேனீ வளர்ப்பும் நடக்கிறது. தேனீ வளர்ப்பது தேனுக்காகவும் மகரந்த சேர்க்கை நடை பெறுவதற்காகவும் . தேனீக்கள் காரணமாக மகரந்த சேர்க்கை நடைபெற்று காய்கள் பிறகு பழங்கள் உருவாகின்றன. பழ மரங்கள், இதர மரங்கள் இருப்பதால் பல வகைக் குருவிகள் மரங்களில் வசிக்கின்றன. பகல் நேரத்தில் பறவைகள் எழுப்பும் சத்தம் காட்டில் இருப்பது போன்ற உணர்வைத் தரும்.

நாங்கள் வளர்க்கும் செடிகளுக்கும், மரங்களுக்கும் இயற்கை முறை உரம்தான். அதற்கான வழிமுறைகளை நாங்கள் கடைபிடிக்கிறோம். சொட்டு நீர்ப்பாசனம் மூலம் தண்ணீர் செலவைக் குறைக்கிறோம். மொட்டைமாடியில் ஒரு புறத்தில் சோலார் பேனல்களை அமைத்து மின்சாரம் தயாரித்துப் பயன்படுத்துகிறோம். பயோகேஸ் தயாரித்து அதில் உருவாகும் எரிவாயுவையும் சமையலுக்குப் பயன்படுத்துகிறோம்.

பெரிய மாமரத்தின் மேல் ஒரு குடிலை அமைத்திருக்கிறேன். அங்கே இருபது நபர்கள் அமர்ந்து விருந்து உண்ணலாம். எனக்கு நன்றாகச் சமைக்கவும் வரும். தனியார் தமிழ் சேனல் ஒன்றில் சமையல் நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கிறேன்.

சென்னை வர்தா புயல் ஏற்பட்ட போது இந்த வனத்திற்குச் சிறிய அளவில்தான் சேதம் ஏற்பட்டது.

வீட்டில் பொருத்தப்பட்டிருக்கும் ஏசிகளிலிருந்து விழும் தண்ணீரை சேகரித்து மரம் செடி கொடிகளுக்கு ஊற்றுகிறேன். செடிகளை எங்கும் எதிலும் வளர்க்கலாம். தொட்டிகளை விலைக்கு வாங்கித்தான் வளர்க்க வேண்டும் என்பதில்லை. வீட்டில் பயன்பாடில்லாமல் இருக்கும் எந்தப் பொருளையும் தொட்டியாக்கிவிடலாம்.

இங்கு வரும் அனைவர் இடத்திலும் "வீட்டுக்கு ஒரு தோட்டம் அவசியம் ... காலத்தின் கட்டாயம்' என்று வலியுறுத்துவேன், 2019-இல் சென்னையில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை. அக்கம் பக்கத்தவர்களுக்கு நாங்கள் தண்ணீர் வழங்கினோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்' என்கிறார் ஜஸ்வந்த் சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!

SCROLL FOR NEXT