தெரியுமா?
நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பின்பு எத்தனையோ உயிர்களை களப்பலி கொடுத்து 1956-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ஆம் நாள் திருவிதாங்கூர் தமிழ்ப்பகுதிகள் தாய் தமிழகத்துடன் இணைந்தன.
கன்னியாகுமரி பெயர் வரக் காரணம்
நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பின்பு எத்தனையோ உயிர்களை களப்பலி கொடுத்து 1956-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ஆம் நாள் திருவிதாங்கூர் தமிழ்ப்பகுதிகள் தாய் தமிழகத்துடன் இணைந்தன. இணைந்த இப்பகுதிகளை நெல்லையோடு சேர்க்க வேண்டும் என்று அன்றைய தமிழக அரசு விரும்பியது. ஆனால் தமிழகப் போராட்ட தியாகிகள் அனைவரும் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தி வெற்றி கண்ட நேசமணி பெயரால் நேசமணி மாவட்டம் என்று பெயர் சூட்ட விரும்பினர். ஒரு பகுதியினர் நாஞ்சில் மாவட்டம் என்று பெயர் சூட்ட விரும்பினர்.
நாகர்கோவில் மற்றும் கோட்டாற்றிலுள்ள மக்கள் ஒன்று கூடி நாகர்கோவில் மாவட்டம் என்று பெயர் சூட்ட விரும்பினர்.
ஆனால் குமரித் தந்த நேசமணியோ, இவற்றை பொருட்படுத்தாமல் இந்தியாவின் வடக்கே இமயமலையைப் போன்று தெற்கே குமரி எல்லை என்று வழக்கில் இருக்கிறது எனவே கன்னியாகுமரி மாவட்டம் என்று பெயர் சூட்டினால் இம்மாவட்டத்தின் பெயரும் உலகெங்கும் தெரியவரும் என்று எண்ணியே கன்னியாகுமரி மாவட்டம் என்று பெயர் சூட்ட விரும்பினார். இதற்காக சென்னைக்கு சென்று அன்றைய முதல்வர் பெருந்தலைவர் காமராஜரை நேரில் சந்தித்தார். கன்னியாகுமரியின் முக்கியத்துவத்தை உணர்ந்த பெருந்தலைவர் காமராஜரும் மார்ஷல் நேசமணியின் கோரிக்கையை ஏற்று கன்னியாகுமரி மாவட்டம் என்றே பெயர் சூட்டினார்.
(மார்ஷல் நேசமணி குமரியின் தந்தை என்னும் நூலில் இருந்து)
-நாஞ்சில் சு.நாகராஜன்
காபி வந்த கதை
நாம் குடிக்கும் காபி எப்படி வந்தது தெரியுமா?
அபிசீனியா நாட்டைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு செடியில் இருந்த காய்களை தின்ற ஆடு புது உற்சாகத்துடன் துள்ளளாட்டம் போட்டு குதித்தது. இதைக் கண்டு பிரமித்த தொழிலாளி தானும் அந்த காய்களைப் பறித்துச் சாப்பிட்டார். உற்சாகமும் சுறுசுறுப்பும் ஏற்பட்டது.
வீடு திரும்பியதும் அந்த காயின் மகத்துவம் பற்றி அவர் மற்றவர்களிடம் சொன்னார். இப்படித்தான் காபி கண்டு பிடிக்கப்பட்டு உலகெங்கும் பரவியது.
காபி என்கிற பெயர் அந்த ஆடு மேய்க்கும் தொழிலாளியின் ஊர் பெயரான "கவ்வா' என்பதில் இருந்து மருவி வந்ததாகும்.
-போளூர் ரகுபதி
ஸ்டீவ் ஜாப்சின் கனவு
ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்சின் கனவு திட்டமான "ஸ்பேஸ்ஷிப் கேம்பஸ் 2', கலிஃபோர்னியாவில் சுமார் 2.8 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமையவுள்ளது. இதன் ஒட்டுமொத்த கட்டுமான செலவு 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இங்கு 176 ஏக்கர் பரப்பளவில் கண்ணாடிகளால் ஆன பெரிய சுவர்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. பெரிய அலுவலகங்களில் ஒன்றாகவும் கருதப்படும் இந்த வளாகத்தில் 14,200 ஊழியர்கள் பணிபுரிய முடியும். இதன் தூரம் மட்டும் ஒரு மைலுக்கும் அதிகமாம். இந்த வளாகத்தின் முதன்மை கட்டத்தின் உள்கட்டமைப்புகளுக்கு மட்டும் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளது. 3 லட்சம் சதுர அடியில் இரு பெரிய கட்டங்கள் இந்த வளாகத்தினுள் ஆய்வு மற்றும் தயாரிப்பு பணிகளுக்காக கட்டமைக்கப்படுகிறது.
-ராஜ்
நட்சத்திர குடும்பம்
இங்கிலாந்தின் ஹெர்ட்போர்ட்ஷைர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சூரிய குடும்பத்துக்கு வெளியே 816 நட்சத்திரங்களைக் கொண்ட சூரிய குடும்பத்தைப் போன்றதொரு நட்சத்திர குடும்பத்தினைக் கண்டறிந்துள்ளனர். இந்த நட்சத்திரங்களில் பாதியளவுக்கு புதிய நட்சத்திரங்கள் உள்ளன.
கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக அகச்சிவப்பு கதிர்கள் காமிரா மூலம் ஆய்வு செய்து வந்த ஆய்வாளர்கள் குழு, பூமி போன்றே உயிர்வாழ உகந்த சூழல் நிலவும் நூற்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் அந்த நட்சத்திரக் கூட்டத்தில் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
-ராஜி
மாணவனின் துணிச்சல்
இந்தியாவின் முதல் பிரதமரான நேரு ஜபல்பூர் நகரத்திற்கு வருகை புரிந்த சமயம். நகரத்தின் எல்லா கழிவு நீரும் ஆறு போல ஓடிக் கொண்டிருந்தது. நெüட்ரா பாலம் வழியாகத்தான் அந்த ஆற்றை கடக்க முடியும்.
பிரதமருக்கு துர்நாற்றம் தெரியக்கூடாது என்று "மோக்ரா' என்னும் கோடைக்கால மலரால் பாலத்தை அலங்கரித்தனர். பிரதமர் கார் பாலத்தை கடக்கும் போது ரஜினிஷ் என்னும் கல்லூரி மாணவன் காரை மறித்து ""தயவு செய்து கீழே இறங்கி வாருங்கள். நீங்கள் இந்த மலர்களுக்குப் பின்னால் பார்த்தாக வேண்டும்'' என்றான்.
சுற்றியிருந்த அதிகாரிகள் தடுத்த போதிலும் காரில் இருந்து கீழே இறங்கி வந்து அந்த மலர்களுக்குப் பின்னால் என்ன உள்ளது என்று நேரு பார்த்தார்.
""இந்த இளைஞன் மட்டும் இல்லையெனில் இந்த நகரின் உண்மை நிலையைப் பார்க்காமல் நான் தவறவிட்டிருப்பேன். நீங்கள் இங்கு என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்?'' என்று அதிகாரிகளை பார்த்து கேட்டார்.
அந்த கல்லூரி மாணவனிடம் ""நீ புதுதில்லி வந்தால் என்னை வந்து பார்'' என்றார்.
அன்றிலிருந்து பிரதமர் மாளிகையின் கதவு அந்த மாணவனுக்காக திறந்தே இருந்தது.
ரஜினிஷ் என்னும் இந்த மாணவன் தான் காலப்போக்கில் ஓஷோ என்ற தத்துவ ஞானியாக மாறினான்.
-ஏரல் நா.பரதன்
சியாச்சின் பனிமலை
சியாச்சின் பனிமலை பிரதேசம் உலகில் துருவப் பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ளவைகளில் இரண்டாவது மிகவும் நீளமான பனிமலை பிரதேசம்.
அங்கு குளிர்காலங்களில் மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும். அதனால் அப்பகுதியில் எல்லை பாதுகாப்பு என்பது மிகவும் கடினமான ஒன்று. இதை பயன்படுத்தி பாகிஸ்தான் அந்த பகுதியை தனக்குரியதாக உரிமை கொண்டாடியது.
அப்பகுதியில் உள்ள 900 சதுர மைல்கள் முழுவதுமாக இந்தியா வசம் மீண்டும் வந்தது. தட்பவெட்பநிலை காரணமாக அப்பகுதியில் ஒருவரால் தொடர்ந்து பணியாற்ற இயலாது என்பதால் ராணுவ வீரர்கள் சுழற்சி முறையில் அங்கு பணியாற்றுகிறார்கள்.
இவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் இன்றும் அப்பகுதியில் பணியாற்றுவதை நமது வீரர்கள் மிகப்பெரும் கெüரவமாக கருதுகிறார்கள். அப்பகுதியை பார்வையிட சென்ற முதல் இந்திய பிரதமர் மன்மோகன் சிங். முதல் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம். அப்பகுதிக்காக பாகிஸ்தான் 1990, 1995, 1996 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் நடத்திய தாக்குதல்கள் அனைத்தும் முறியடிக்கப்பட்டது.
பெண்களைப் பாதுகாப்பாக அனுப்பிய எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர் வாழ்வில் பல சுவையான சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றில் சில:
ஒரு சமயம் எம்.ஜி.ஆர் மதுரை காந்தி கலையரங்கத்தில் பேசினார். ஆண்களும், பெண்களும் ஏராளமாகத் திரண்டிருந்தனர்.
எம்.ஜி.ஆர் பேசி முடித்ததும் ஆண்கள் பக்கம் திரும்பி ""நீங்கள் எல்லோரும் அப்படியே இருங்கள். முதலில் தாய்மார்கள் வெளியே செல்லட்டும். அவர்கள் சென்ற பிறகு உங்களுடன் தனியாக சில விஷயங்களைப் பேசப் போகிறேன்'' என்றார்.
பெண்கள் கூட்டம் அமைதியாகக் கலைந்து வெளியே சென்று விட்டது. என்ன பேசப் போகிறாரோ என்று மிகவும் ஆவலுடன் ஆண்கள் காத்துக் கொண்டிருந்தனர்.அப்போது எம்.ஜி.ஆர் ஆண்கள் கூட்டத்தைப் பார்த்து ""கூட்டம் முடிந்துவிட்டது. இப்போது நீங்களும் போகலாம்'' என்றார்.
கூட்ட நெரிசலில் பெண்கள் அகப்பட்டு கொள்ளக்கூடாது என்பதற்காக எம்.ஜி.ஆர் செய்த செயலைப் புரிந்து கொண்ட ஆண்கள் மகிழ்வுடன் கலைந்து சென்றனர்.
ஒரு சமயம் காவல்துறையினர் தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே நடிகர் எம்.ஜி.ஆர் காரில் வந்து கொண்டிருந்தார்.
காரில் அவர் இருப்பதை அறியாத போலீஸ்காரர் அவரது காரை நிறுத்தினார். அப்போது தான் காரின் உள்ளே எம்.ஜி.ஆர் இருப்பதை அவர் பார்த்தார்.
அவர் காரைச் சோதனையிடாமல் ""மன்னிக்க வேண்டும் சார் நீங்கள் போகலாம்'' என்றார்.
அதற்கு எம்.ஜி.ஆர் ""உங்கள் கடமையைச் செய்யுங்கள். எனக்காக உங்கள் கடமையிலிருந்து தவறாதீர்கள் என்றார்.
அதைக் கேட்ட அந்த போலீஸ்காரர் மெய்சிலிர்த்து நின்றார்.
பின்னாளில் தேர்தலில் போட்டியிட்டு தமிழகத்தின் முதல்வரானார் எம்.ஜி.ஆர்.
(மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாறு நூலிலிருந்து)
கோஹினூர் வைரம்
கோஹினூர் வைரம், 105 கேரட் (21.6 கிராம்) எடை கொண்டது. கோஹினூர் என்ற சொல்லுக்கு பாரசீக மொழியில் மலை அளவு ஒளி என்று பொருள். இது இந்தியாவில், ஆந்திர மாநிலத்தின் குண்டூர் அருகே உள்ள கொல்லூர் எனும் கிராமத்தில் இருந்து வெட்டியெடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. 5000 ஆண்டுகள் பழைமையான இந்த வைரம் பல கைகள் மாறி 1793-இல் பாரசீக மன்னன் நாதிர்ஷா கைக்குப் போனது. அவரே இந்த வைரத்துக்கு கோஹினூர் வைரம் என்று பெயரிட்டார். அதன்பின்னர் பஞ்சாப் சிங்கம் என்று அழைக்கப்பட்ட ரஞ்சித் சிங் கைகளுக்குச் சென்றது. வணிகம் செய்ய வந்து காலனி ஆதிக்கமாக இந்தியாவை மாற்றிய கிழக்கிந்தியக் கம்பெனியின் சர்.ஜான் லாரன்ஸ் இதனைக் கைப்பற்றி, அதை இங்கிலாந்து அரச குடும்பத்தினருக்கு பரிசளித்தார். தற்போது, கோஹினூர் வைரம் இங்கிலாந்து ராணியின் கிரீடத்தை அலங்கரித்து வருகிறது.
குப்பை உணவு
பிட்சா முதலான ஜங்க்ஃபுட் உணவுகளுக்கு மவுசு அதிகமாகி வருகிறது. "ஜங்க்' என்றால் குப்பை என்று பொருள்.
ஜங்க்ஃபுட் தொடர்பாக ஆராய்ச்சி செய்த சுவீடன் ஆராய்ச்சியாளர்கள் ஆண்களை விட பெண்களுக்குத்தான் "ஜங்க்புட்' அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. "ஜங்க்ஃபுட்டில் அதிகக் கொழுப்பு உள்ளதால் சர்க்கரை நோய் கூடுவதற்கு வாய்ப்பு அதிகம். அது போல் பெண்களுக்கு மாதவிடாய் நின்றவுடன் உயர் ரத்த அழுத்தம் மார்பக புற்றுநோய் போன்றவை வரும் வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.