ஞாயிறு கொண்டாட்டம்

படிக்காத மேதைக்கு "பத்மஸ்ரீ' 

அலி மனிக்ஃபேன்னுக்கு ஒன்றல்ல இரண்டல்ல..

சுதந்திரன்

அலி மனிக்ஃபேன்னுக்கு ஒன்றல்ல இரண்டல்ல.. ஆங்கிலம், தமிழ் , ஹிந்தி, அரபி, லத்தீன், ஃபிரெஞ்ச், ரஷ்யன், ஜெர்மன், சிங்களம், சம்ஸ்கிருதம் போன்ற 15 மொழிகளில் எழுதவும், வாசிக்கவும், தெரியும். பல விஞ்ஞானிகளுக்கு அயல்நாட்டு மொழிகளைப் பேசவும் எழுதவும் வாசிக்கவும் கற்றுக் கொடுத்தவர்.

படித்தவர்களுக்குப் படித்த பாடத்தில் நல்ல ஞானம் இருக்கும். அந்தத் துறையைத் தாண்டி வேறு துறைகளில் ஞானம் அவ்வளவாக இருக்காது. ஆனால் அவருக்கு கடல் உயிரியல், கடல் ஆராய்ச்சி, புவியியல், வானியல், தொழில்நுட்பம், சுற்றுப்புறச் சூழல், தோட்டக்கலை போன்ற துறைகளில் ஆழ்ந்த அறிவும் அனுபவமும் உண்டு.

மத்திய அரசு வேலைக்காக ராமநாதபுரம் வட்டத்தில் மண்டபம் அருகே மரைக்கார்பட்டினம் வந்தபோது, "வேதாளை‘ என்னும் கிராமத்தில் ஓலை வேய்ந்த வீடு கட்டி, மின் இணைப்புக்காக 1964-இல் அவர் விண்ணப்பித்தார். மின் இணைப்பு கிடைக்காததால், பொறுமை இழந்து பனை மரத்தில் காற்றாடியை நிறுவி வீட்டிற்குத் தேவையான மின்சாரத்தைச் சொந்தமாகவே உற்பத்தி செய்ய ஆரம்பித்துவிட்டார்.

விறகு அடுப்பின் வெப்பம் மூலம் இயங்கும் குளிர்பெட்டியையும் வீட்டு தேவைக்காக உருவாக்கினார்.

சொந்த தேவைக்காக மோட்டாரைப் பொருத்தி சைக்கிளை "மொபெட்' ஆக அறுபதுகளில் மாற்றி அமைத்தார். பொதுவாக இரு உருளை வண்டியில் இணைக்கப்பட்டிருக்கும் மோட்டார் பின் சக்கரத்தை மட்டுமே இயக்கும். இவரது வாகனத்தில் மோட்டார் வண்டியின் முன் சக்கரத்தை இயக்கும்.

பெட்ரோல் தீர்ந்து விட்டால் அடுத்த பெட்ரோல் நிலையம் வரை போக கால்களால் அழுத்தி மிதித்து ஓட்டும் வசதியையும் வைத்திருந்தார்.

தனது வாகனத்தை உருவாக்கியதும், அந்த மிதிவண்டியில் மகனுடன் வேதாளையில் இருந்து டெல்லி வரை சென்று திரும்பி வந்தார். அந்த மிதிவண்டிக்கு அவர் காப்பு உரிமையும் பெற்றிருந்தார்.

1200 ஆண்டுகளுக்கு முன் மாலுமி சிந்துபாத் உலகை கப்பலில் சுற்றி வந்த கதையால் ஈர்க்கப்பட்ட அயர்லாந்தைச் சேர்ந்த சாகச வீரர் டிம் செவேர் அதே போல ஒரு பாய்மரக் கப்பலை உருவாக்க ஆள்களைத் தேடிக் கொண்டிருந்தார். இவர் அதற்கான வழிமுறைகளைத் சொல்லிக் கொடுத்ததுடன். பொருத்தமான மரங்களைக் கேரளத்திலிருந்து மஸ்கட் நாட்டிற்குத் தச்சுத் தொழிலாளிகளுடன் அனுப்பி வைத்தார்.

அந்தக் காலத்தில் பாய்மரக்கப்பல்களில் பலகைகளை இணைக்க மர ஆணிகளையோ உலோக ஆணிகளையோ பயன்படுத்தமாட்டார்கள். தேங்காய் நார்களால் செய்யப்பட்ட கயிறுகளைக் கொண்டு பலகைகளைக் கட்டுவார்கள். கப்பலில் கடல் நீர் புகுந்துவிடாமல் இருக்க, உள்நாட்டில் உருவாக்கப்படும் பிசின் கொண்டு துளைகளை, பலகை இணைப்புகளில் உள்ள இடைவெளிகளை அடைப்பார்கள்.

கயிறுகள் உப்பு நீரில் இற்றுப்போகாமல் வேறு பிசின்களைப் பயன்படுத்துவார்கள். இந்த முறையில் கப்பல் கட்டும் எல்லா தொழில் நுட்பங்களையும் விளக்கமாகச் சொல்லிக் கொடுத்தாலும், தொழிலாளிகளால் கப்பலை உருவாக்க முடியவில்லை. இறுதியில், இவரை மஸ்கட் வரை வந்து கப்பலை உருவாக்குங்கள் என்று கேட்டுக் கொண்டதும் மஸ்கட் சென்று கப்பல் கட்டுமானத்தை ஓராண்டு காலம் மேற்பார்வை செய்து "சோஹர்' என்ற 90 அடி நீளமுள்ள பாய்மரக் கப்பலைக் கட்டி முடித்தார். டிம் செவேர் 22 பயணிகளுடன் ஓமனிலிருந்து சீனா வரை பாய்மரக் கப்பலில் பயணம் செய்தார். அந்த கப்பல் ஒரு வரலாற்று சின்னமாக ஓமனில் இப்போதும் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது.

இனி ஓடாது என்று முடிவு கட்டி மூலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றை விலைக்கு வாங்கி இஞ்சினை சுத்தம் செய்து பெட்ரோலிலும் மண்ணெண்ணெய்யிலும் மாறி மாறி ஓடும்படி மாற்றம் செய்து குடும்பத்துடன் தென் இந்தியாவைச் சுற்றி வந்தார்.

திருநெல்வேலியில் வள்ளியூரின் வெளியே யாரும் குடியிருக்காத முள் மரங்கள் கூட முளைக்காத 17 ஏக்கர் பொட்டல்காடு ஒன்றை விலைக்கு வாங்கி இவர் வடிவமைத்த சொட்டு நீர் பாசனம் மூலம் பல்வகை மரங்களை வளர்த்தார். அதற்கு "டு நத்திங் ஃ பார்ம்' (ஈஞ சஞபஏஐசஎ ஊஅதங) என்று பெயரும் வைத்தார். பொட்டல்காட்டில் பசுமை பூத்திருப்பதைப் பார்த்து காலப்போக்கில் அந்தப் பகுதியில் மக்கள் வீடு கட்டி வாழத் துவங்கி இன்று "அற்புத நகராக' மாறிய அற்புதத்தைத் செய்தவர்.

இத்தனை விந்தைகளை, அதிசயங்களைச் செய்ய அவர் பொறியியல் படிக்கவில்லை. பட்டப்படிப்பும் படிக்கவில்லை. பாலிடெக்னிக்கிற்கும் செல்லவில்லை. வெறும் ஏழாம் வகுப்பு மட்டும் படித்தவர். தனது தீவில் கலங்கரை விளக்க அலுவலகத்தில் எடுபிடியாகப் பணிபுரிந்தவர். தனது இளமைக்காலத்தைத் தமிழ்நாட்டின் மண்டபம் அருகே மரைக்கார்பட்டினத்திலும், திருநெல்வேலியை அடுத்துள்ள வள்ளியூரிலும் செலவழித்தவர்.

பூர்விகம் லட்சத்தீவுகளில் ஒரு தீவு ஆன "மினிக்காய்'. "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று வாழ்ந்த அலி மனிக்ஃபேன்னுக்கு இந்த ஆண்டு "பத்மஸ்ரீ' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தனது மகள்கள் மகனுடன் அரபியில் பேசும் அலி, தமிழகம் கேரளத்தில் ஏற்பட்ட குடும்ப உறவுகளால் வீட்டில் உறவினர்களிடம் தமிழும் மலையாளமும், மினிக்காய் தீவின் மொழியான "மஹல்'லும் பேசுவார். விருந்தினர்கள் வந்தால் வீட்டில் அனைவரும் ஆங்கிலத்தில் உரையாடுவார்கள். தான் மட்டும் இல்லாமல், தனது வாரிசுகளையும் பல மொழிகள் பேசும் வல்லமையை அலி கற்பித்திருந்தார்.

73 ஆண்டு கால ஆராய்ச்சி பாரம்பரியம் உள்ள மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிந்த பல நூறு விஞ்ஞானிகளுக்கு இதுவரை கிடைக்காத பெருமை, அந்த நிலையத்தில் கடைநிலை ஊழியராகப்பணி புரிந்த அலி மனிக்ஃபேன்னுக்கு "பத்மஸ்ரீ' விருது மூலம் கிடைத்துள்ளது.

""பொதுவாக எதில் விருப்பம் இருக்கிறதோ அதை ஆழமாகக் கற்றுக் கொள்ளுங்கள். ஆர்வமும் விடா முயற்சியம் இருந்தால் நினைக்காததும், கனவு காணாததும் கைகூடும்'' என்று சொல்லும் அலிக்கு 82 வயதாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

திருப்பூரில் சதித் திட்டம்! தில்லி குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களா? 8 பேரை கைது செய்த தில்லி போலீஸ்!!

SCROLL FOR NEXT