முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

பொறுமையும், எளிமையும் எப்போதுமே அழகு!

சாலிகிராமம் பிரசாத் லேப் எதிரே இருக்கும் டீக்கடைக்கு போனால், எல்லா மேஜைகளிலும் நடிகர்களின் கூட்டம். "டாக்டர்' படத்தில் கவனம் ஈர்த்த காரத்தே கார்த்தி  சிரிக்கிறார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

சாலிகிராமம் பிரசாத் லேப் எதிரே இருக்கும் டீக்கடைக்கு போனால், எல்லா மேஜைகளிலும் நடிகர்களின் கூட்டம். "டாக்டர்' படத்தில் கவனம் ஈர்த்த காரத்தே கார்த்தி  சிரிக்கிறார். சினிமா பந்தா இல்லாமல் மெல்லிய  குரலில் பேசி, ஜில்லென புது லுக் காட்டி அமர்கிறார். 

பிரபலத்தின் வாரிசு... பெரிய சினிமா பின்னணி... இதுவெல்லாம்தான் நடிப்பதற்கான தகுதிகள் என்ற நிலை இப்போது இல்லை....

பெரிய அதிர்ஷ்டம் எனக்கும். எங்கெங்கோ கிராமங்களில் இருந்து சினிமா, மீடியா, இலக்கியம், அரசியல் என லட்சியங்களோடு சென்னைக்கு கிளம்பி வந்தவர்களில் நானும் ஒருவன். மதுரைதான் நமக்கு எல்லாம். படிப்பு, கை நிறைய சம்பளம் என இப்படித்தான் இலக்கு இருந்தது. கல்லூரி வாழ்க்கை எல்லோரையும் இடம் மாற்றி போடும். என்னையும் அப்படித்தான் அது மாற்றி வைத்தது. மத்திய ரிசர்வ் போலீஸ் வேலை. இருந்தாலும் நடிப்பின் மீது ஆர்வம்.

Advertisement

நடிப்பு மீது இருந்த ஆசையால் வேலையை ராஜினாமா செய்துவிட்டேன். அப்போது என் வீட்டில், மற்றும் என் உறவினர்கள் அனைவரும் என்னை பயங்கரமாக திட்டினார்கள், அரசு வேலையை யாராவது விட்டுவிட்டு சினிமாவிற்கு போவார்களா என்று அறிவுரையும் சொன்னார்கள். ஆனால் நான் நடிப்புதான் எனக்கு வேண்டும் என்று வாய்ப்பு தேட துவங்கிவிட்டேன். யாரிடம் போய் வாய்ப்பு கேட்பது என்று தெரியாமல் நேராக நடிகர் சங்கத்திற்கு போய் வாய்ப்பு கேட்டேன்.. அங்கே இருந்த சிலர் போட்டோ கொடுங்கள் விஜய் படம், கமல் படம் இரண்டிலும் நடிக்க வாய்ப்பு இருப்பதாக சொன்னார்கள், மறுநாள் கமல் சார் நடித்த "தசாவதாரம்' படத்திற்கு கூப்பிட்டார்கள்.  உடனேயே கமல் சார் படமா சூப்பர் என்று அடுத்த நாள் ஷூட்டிங் போனேன்.அங்கே போய் பார்த்த பிறகுதான் தெரிந்தது கூட்டத்தோடு கூட்டமாக நிற்க வைத்தார்கள் .கேமரா எங்கே இருக்கு என்று கூட தெரியவில்லை ஏமாற்றம் தான் , தொடர்ந்து ஜிம்பாய்ஸ் ஆகப் போனேன். அதன் பின் சீரியலில் நடிக்க துவங்கினேன். இதுதான் என் பயணம். 

கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு மேலான உழைப்பு. அப்படி ஒரு கஷ்டம். இதில் எந்த மிகையும் இல்லை.  "தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்தேன். அதன் பின் கைதி படம். நீங்களெல்லாம் நின்று பேசுகிற அளவுக்கு வந்ததே பெரிய விஷயம். எளிமையும், உழைப்புதான் எல்லாவற்றையும் விட அழகு. வாய்ப்பு தந்து அரவணைத்த எல்லோருக்கும் சிரம் தாழ்ந்த நன்றி.

அடுத்தடுத்த படங்களை சரியாக திட்டமிடுவது ரொம்பவே கடினம்....

அதை உணர்ந்தே இருக்கிறேன்.எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறுதான் இங்கே உழைக்க முடியும். எதையும் தனியாக செய்ய முடியாது என்பதில் தெளிவு உண்டு.   நீ என்னவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்பது போல், சினிமாவே அமைந்து விட்டது. டாக்டர் படம் ஹிட். அதனால் என்னை கவனிப்
பவர்கள் கொஞ்சம் ஆழ்ந்து பார்ப்பார்கள். அதை பூர்த்தி செய்தே ஆக வேண்டும்.  என்னிடம் எப்போதும் மெனக்கெடல்கள் உண்டு. எதை தொட்டாலும் ஜெயித்து விட வேண்டும் என்ற வேட்கை இருக்கும். கல்லூரி படிக்கும் போதே, சினிமாவுக்காக என்னை தயார்படுத்திக் கொண்டே வந்தேன். முக்கியமாக சினிமாவை புரிந்துக் கொண்டதும் இதற்கு ஒரு காரணம். ஒரு செயல் ஒரு மனிதனை அழகாக்கணும். அதை எனக்கு செய்து கொடுத்திருக்கிறது இந்த சினிமா.  எல்லோருக்கும் நன்றி. 

தொடக்கத்தில் கதைதான் முக்கியம் என்பவர்கள், பின்னாளில் கமர்ஷியல் சினிமாக்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள்....

நல்ல சினிமா பற்றி நிறைய கனவுகள் உண்டு. கலைஞனின் கனவில் அவனுடைய பங்களிப்பு பாதிதான். ரசிகர்களின் ஒத்துழைப்பில்தான் நல்ல கனவுகள் நிறைவடையும்.  ஹீரோ, ஹீரோயின் என்பதைத் தாண்டி, கதை இருந்தால்தான் அந்த படத்துக்கு வெற்றி கை கூடும். இந்த மாற்றம்தான் சினிமாவுக்கு முக்கியமானது. ஹாலிவுட்டில் இது எப்போதோ வந்து விட்டது. இங்கே இப்போதுதான் நடந்துக் கொண்டு வருகிறது. பெரிய ஸ்டார், சின்ன ஸ்டார் என எந்த வித்தியாசத்தையும் ரசிகர்கள் பார்ப்பதில்லை. கதை இருந்தால் போதும்... இந்த நிலை இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்தால், எல்லாமே மாறி விடும். எனக்கும் அப்படித்தான். கதைதான் முக்கியம். இதுதான் கதை என தீர்மானமாக பிடித்து விட்டால், அந்த கதையில் எந்த கதாபாத்திரத்தையும் ஏற்று விடுவேன். ஓடுகிற படத்தில் இருப்பதை விட, கதை உள்ள படத்தில் இருக்கவே ஆசைப்படுகிறேன். இந்த நிலைப்பாடு கடைசி வரை இருந்தால் அழகான வெற்றிகளின் பட்டியல் தொடரும். 

அடுத்தடுத்த பயணம்....

எனது 14 வருட சினிமா முயற்சியில் என் திறமையை பார்த்து வந்த முதல் போன் கால் இயக்குநர் நெல்சன் செய்ததுதான். அதை என்னால் இன்றும் மறக்க முடியாது.  டாக்டர் படத்தில் கோவாவில் வரும் காட்சிகளில் நான் வட இந்தியர் போல் நடித்திருப்பேன் .அதனால் என்னை நிறைய பேர் வட இந்தியர் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான் பச்சை தமிழன் .எனது சொந்த ஊர் மதுரை தான் என்பதை இங்கே அழுத்தமாக சொல்லிக்கொள்கிறேன். தொடர்ந்து நிறைய இயக்குநர்களிடமிருந்து அழைப்பு வருகிறது. அது இதுவரை நான் பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் மறக்கடிக்க செய்துவிட்டது.  என் நடிப்பு திறமையை வெளிப்படுத்தக் கூடிய கதாப்பாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பேன். 

விக்ரம், சூர்யா, அஜித், விஜய் என எல்லோர் கூடவும் நடிக்க வேண்டும்.  அவர்கள் எதிர்க் கொள்ளாத விமர்சனங்கள் இல்லை. பேர், புகழ் என இப்போது சினிமா தருகிற வெளிச்சத்துக்கு அந்தப் பக்கம், யாராலும் எதிர்கொள்ள முடியாத ஒரு பக்கம் இவர்களுக்கு  உண்டு. சினிமா உலகத்தில் விதவிதமான குணாதிசயங்கள் நிறைந்த மனிதர்கள் வந்துப் போய்க் கொண்டே இருக்கிறார்கள். அந்த ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான கலைஞர்கள் மத்தியில் விநோதமான, விசித்திரமான வாழ்க்கையை கடந்து வந்து ஜெயித்தவர்கள்.  என்னை மாதிரி வளர்ந்து வருகிற ஒவ்வொருத்தருக்கும் இவர்களின் வாழ்க்கை பெரிய உதாரணம். அவர்களின் பொறுமையும், எளிமையும் எப்போதுமே அழகு.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments