ரயிலில் இரு சம்பவங்கள்!
ஏ.கே.செட்டியார் "காந்தி' ஆவணப்படத்தை இயக்கி தயாரித்த தமிழர். "குமரிமலர்' என்ற இலக்கிய இதழை நடத்தியவர்.
ஏ.கே.செட்டியார் "காந்தி' ஆவணப்படத்தை இயக்கி தயாரித்த தமிழர். "குமரிமலர்' என்ற இலக்கிய இதழை நடத்தியவர். உலகம் சுற்றிய தமிழர் என்ற பெயரும் இவருக்கு உண்டு. அவர் தொகுத்த தமிழ்நாடு பயணக்கட்டுரைகள் (நூற்றாண்டுகளுக்கு முன்பு) நூலிலிருந்து இரண்டு ரயில் சம்பவங்கள்:
தில்லியில் இருந்து வெளிவரும் "ராயல் வீக்லி' என்ற பத்திரிகையில் ஓர் அன்பர் பின்வருமாறு எழுதுகிறார்:-
பல ஆண்டுகளுக்கு முன் கோடைக்கால விடுமுறையை உத்தேசித்து ஸர்.டி. முத்துசாமி ஐயரும் வேறு மூன்று ஹைகோர்ட் ஜட்ஜுகளும் உதகமண்டலத்திற்கு சென்று கொண்டிருந்தார்கள். ரெயில் முன்னிரவு புறப்பட்டு மறுநாள் காலை உதகமண்டலம் செல்கிறது.
Advertisement
ஸர். முத்துசாமி முதல் வகுப்பு கம்பார்ட்மெண்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். பாதி ராத்திரியில் ஒரு ஸ்டேஷன் வந்து நின்றது. ஓர் ஆங்கிலோ இந்திய ஸ்டேஷன் மாஸ்டர் இவரை தட்டி எழுப்பி ""இந்தக் கம்பார்ட்மெண்டைக் காலி செய்யுங்கள். ஓர் ஐரோப்பிய கனவான், தமது மனைவி சகிதம் இந்த கம்பார்ட்மெண்டில் பிரயாணம் செய்ய வேண்டும்'' என்றார்.
ஸர். முத்துசாமி ஐயர் இதென்னவென்று ஆச்சரியப்பட்டு கொண்டிருக்கையில், ""சீக்கிரம். வண்டி இங்கே அதிக நேரம் தாமதிக்காது. ஐரோப்பிய கனவான் காத்துக் கொண்டிருக்கிறார்'' என்று ஸ்டேஷன் மாஸ்டர் மீண்டும் துரிதப்படுத்திவிட்டு ஐரோப்பியரைப் பார்த்து ""நீங்கள் வண்டியில் ஏறுங்கள் நான் சாமான்களை ஏற்றுகிறேன்'' என்று கூறினார்.
""முதலில் அவர் வெளியே வரட்டும்'' என்றார் ஐரோப்பியர். முத்துசாமி ஐயர் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டார். முதல் வகுப்பு கம்பார்ட்மெண்டில் வேறு எங்கும் இடமில்லாமையால், இரண்டாவது வகுப்பு கம்பார்ட்மெண்ட் ஒன்றில் போய் அமர்ந்தார்.
அதற்கு முன்னர் ""முதல் வகுப்பு பிரயாணிகளை நடுத்தூக்கத்தில் தொந்தரவு செய்யக்கூடாதென்று ஒரு விதி இருப்பது உங்களுக்கு தெரியுமா?'' வென்று ஸர்.முத்துசாமி ஐயர், ஸ்டேஷன் மாஸ்டரை நோக்கிக் கேட்டார்.
அதற்குள் ஐரோப்பியர் ""இந்த விதியெல்லாம் ஐரோப்பியருக்கேயன்றி இந்தியருக்கல்ல'' வென்றார்.
மறுநாள் காலை போத்தனூர் ஜங்ஷன் வந்து சேர்ந்தது. மூன்று ஐரோப்பிய ஹைகோர்ட் ஜட்ஜுகளும், பிளாட்பாரத்திற்கு வந்து தமது சகோதர ஜட்ஜ் எங்கேயென்று பார்த்தார்கள். ஸர்.முத்துசாமி ஐயர் இந்த கம்பார்ட்மெண்டில் ஓர் ஐரோப்பியர் இருந்ததைப் பார்த்தார்கள். அவர் இவர்களைப் பார்த்து சலாம் செய்து கொண்டு வெளியே வந்தார். அவர் ஒரு ஜில்லா ஜட்ஜ்.
""ஸர்.முத்துசாமி ஐயர் இந்த கம்பார்ட்மெண்டில் இருந்தாரே எங்கே?'' என்றார் ஹைகோர்ட் ஜட்ஜுகளில் ஒருவர்.
""ஸர் .டி. முத்துசாமியா '' என்று ஜில்லா ஜட்ஜ் திடுக்கிட்டுப் போனார். பாதி ராத்திரியில் நடைபெற்ற சமாசாரங்களையெல்லாம் சவிஸ்தாரமாகக் கூறினார். ஹைகோர்ட் ஜட்ஜுகள் அவரை கடிந்து கொண்டார்கள்.
பின்னர் இவர்கள் அடுத்த கம்பார்ட்மெண்டில் சென்று பார்க்கையில் அங்கே மற்றொரு பிரயாணியின் குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு சீராட்டி கொண்டிருந்தார் ஸர்.முத்துசாமி ஐயர். ஹைகோர்ட் ஜட்ஜுகளைப் பார்த்ததும், குழந்தையை எடுத்துக்கொண்டு வெளியே பிளாட்பாரத்துக்கு வந்தார்.
ஹைகோர்ட் ஜட்ஜுகளில் ஒருவர் ஸர். முத்துசாமி ஐயரைப் பார்த்து ""நேற்றிரவு தங்களை அவமானப்படுத்திய இவர் ஒரு ஜில்லா ஜட்ஜ். அவர் தங்கள் மன்னிப்பை கோரி நிற்கிறார்'' என்றார்.
""இது ஓர் அற்ப விஷயம். இதை மறந்துவிட வேண்டும்'' என்று கூறி ஜில்லா ஜட்ஜைப் பார்த்து, ""ரெயில்வே விதிகளுக்கு நேற்றிரவு நீங்கள் வியாக்கியானம் செய்தீர்களே அதே மாதிரி நீதி ஸ்தலத்தில் அமரும்போது வியாக்கியானம் செய்யாதீர்கள்'' என்று கூறினார் ஸர். முத்துசாமி ஐயர் தனவணிகள் இரங்கூன்
15-6-1933 பக்கம் 5
சென்னைப் பட்டணத்திலிருந்த செல்வப் பிள்ளை என்கிற ஒரு கனவான் நமச்சிவாயன் என்னும் தன் பரிசாரகனோடு இருப்புப் பாதை வழியாக நாகப்பட்டினம் போக வேண்டுமென்று ஸ்டேஷனுக்கு வந்து நமச்சிவாயத்தின் கையில் தன் பெட்டி பேழை முதலியவைகளைக் கொடுத்து அவனை மூன்றாவது வகுப்பு வண்டியிலேற்றிவிட்டு தான் முதலாவது வகுப்பு வண்டியிலேறிக்கொண்டான்.
ஸ்டேஷனை விட்டு வண்டி கொஞ்ச தூரம் போய் நிற்கையில் செல்லப்பிள்ளை ஜன்னலின் வழியாய் தலையை நீட்டிப் பார்த்து ""ஓ..... நமச்சிவாயம்! இதென்ன ஸ்டேஷன்'' என்றான். நமச்சிவாயம், ""ஐயா நான் இதை அறியமாட்டேன் இது இந்த (கார்டு) வண்டி காவல்காரனைக் கேட்டுச் சொல்லுகிறேன்'' என்று அவனண்டை போய் கேட்டு வந்து ""இது ஆவடியாம்'' என்றான்.
அதைக்கேட்டு செல்வப்பிள்ளை அந்த காவல்காரனை அழைத்து ""இங்கே ஸ்டேஷன் பெயர் எழுதிய ஒரு பலகையடித்திருக்க வேண்டுமே'' என்று கேட்க, அவன்"" இதோ இதோ இந்தத் திறனைக் கோடியிலிருக்கிறது'' என்றான். ""ஆனால் அது வண்டியில் இருக்கிறவர்களுக்கு தெரியும்படி யன்றோ வண்டியை நிறுத்த வேண்டும். இம்மாதிரி வண்டியை நிறுத்தினால் குடியேத்தம் ஸ்டேஷனில் வண்டி நிற்கும் போது எனக்கு எப்படி தெரியும்'' என்று செல்வப்பிள்ளை கேட்க, அந்த விசாரணைக்காரன் ""சரிதான் இது குடியேத்தமன்றே '' என்று அவனுக்கு உத்தரவு சொல்லிவிட்டு ""வா ஏறு'' என்று அந்த வேலைக்காரனை வண்டியிலடைத்துக் கதவைப் பூட்டி குழலை ஊதினான்.
வண்டி புறப்பட்டது மறுபடியும் மற்றொரு ஸ்டேஷனில் வண்டி நிற்கையில், முன்போலவே அவன் நமச்சிவாயத்தை கூப்பிட்டு ""இதென்ன ஸ்டேஷன் குடியேத்தமா?'' என்று கேட்க நமச்சிவாயன் தான் இருக்கிற வண்டியை விட்டு இறங்கி வந்து "" ஐயா! அன்று திருவள்ளூர் என்று சொன்னான். இதற்குள் விசாரணைக்காரன் ஒருவன். வண்டியைவிட்டு இறங்கி பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு ""ஓ அண்ணே இங்கே இறங்க வேண்டியவன் ஒருவன் தானிருந்தான் அவனும் இறங்கி போய்விட்டான். ஏறுகிறவர்கள் ஒருவருமில்லை. நீ தொந்தரை செய்கிறையே, வண்டியிலேறி உட்கார்'' என்றான். அவனுட்காரவே அந்த ஸ்டேஷனைவிட்டு வண்டி போய்விட்டது.
மற்றொரு ஸ்டேஷனிலும் இவ்வாறே நடந்தது. செல்வப் பிள்ளை அதன் பெயர் தெரியாமல் அந்த"" யஜமானனை அழைத்து அப்பா, இதென்ன ஸ்டேஷன்'' என அவன் ""அதெல்லாம் உமக்கென்ன, நீரேன் வருத்தப்படுகிறீர், நானில்லையா அந்தந்த ஸ்டேஷனில் அவரவர்களை இறக்கவும், ஏற்றவும் எனக்குத் தெரியாதா, அது என் வேலை தானே , கூப்பிடாமல் வண்டியிலுட்காரும், அது வரும் போது நான் தெரிவிக்கிறேன்'' என்று சொல்லி தன் வண்டிக்கு போனான்.
2,3 வண்டி தாண்டி போய்க் கொண்டிருக்கையில் மறுபடியும் செல்வப்பிள்ளை அவனைக்கூப்பிட்டு, ""அப்பா மறந்து போகிறையோ அவசியம் தெரியப்படுத்த வேண்டும். நான் உன்னையே நம்பியிருப்பேன்'' என அவன் ""இல்லை இல்லை அப்படியே ஆகட்டும்'' என்று வண்டியை விடச் சொல்லி தன் வண்டியிலேறி உட்கார்ந்தான்.
திரும்பவும் வண்டி புறப்படும் போது செல்வப்பிள்ளை ஜன்னல் வழியாய் நமச்சிவாயனைக் கூப்பிட்டு ""அடா, பெட்டி மறவாதே, ஞாபகம் இருக்கட்டும்''. அவன் ""அப்படியே செய்வேன்'' என்றான். இருவரும் உட்கார்ந்து கொண்டார்கள் வண்டியும் போய்க் கொண்டிருந்தது.
அந்த விசாரணைக்காரன், ""அப்பா அந்த கிழவன் மிக தொந்தரை செய்கிறான். குடியேத்தத்தில் இவன் தவிர இறங்குகிறவர்கள் வேறொருவருமில்லை; ஆதலால் அவனை அவ்விடத்தில் ஞாபகமாயிறக்க வேண்டும்'' என்று எண்ணிக் கொண்டே போனான்.
ஆனால் அவன் அந்த ஸ்டேஷனண்டை போகும் போது இவன் மறந்து போனதுமின்றிச் செல்லப்பிள்ளையும் தூங்கி விட்டான். அப்புறம் அது தாண்டி அரை மைலில் அவன் இந்தக் கிழவனை நினைத்துக்கொண்டு ""ஐயோ மறந்தோமே என்று மறுபடியும் வண்டியை குடியேத்தத்திற்குத் திருப்பிக் கொண்டு வந்து, அவன் அங்கே வண்டியை விட்டு இறங்கி கோபத்தோடு அந்த கிழவனண்டை வந்து கதவை திறந்து அவனை அதட்டி எழுப்பி ""குடியேத்தமையா'' என்றான்.
செல்வப்பிள்ளை குறை தூக்கத்தில் ஒன்றும் தெரியாமல் வெருள வெருள விழிக்கையில் ""ஐயா இது தான் குடியேத்தம் எழுந்திரு'' என்றான்.
அதைக் கேட்டு செல்வப்பிள்ளை தூக்கந் தெளித்து ""நல்லதப்பா நமச்சிவாயன். எங்கே ஓ நமச்சியவாயம், ஏதோ பெட்டி'' என்றான். அதற்கு வண்டி யஜமான் ""உம்முடைய சாமானிருக்கட்டுமையா, அவைகளை நான் சரியாய் கொண்டு சேர்க்கிறேன். நீங்கள் இறங்குங்கள் நேரமாயிற்று'' என்றான். செல்வப்பிள்ளை ""ஏன்? நானா இறங்குகிறது; நானேன் இறங்க வேண்டும்'' என அவன் மனம் கலங்கி ""நீங்கள் ஆவடி முதல் குடியேத்தம் என்று என் கழுத்தையறுத்தீர்களே'' என்றான். அதைக் கேட்டு அந்த கனவான், நான் என் மனிதனை ஞாபகப்படுத்தச் சொன்னேன். நீயாய் வலுவில் வந்து தெரிவிக்கிறேன் என்று சொன்னபடியால் நான் அப்படியேயாகட்டும் என்றேன். அதுவே தவிர இங்கே இறங்குகிறதாய்ச் சொன்னேனா?'' என்றான்.
இவர்கள் எப்படி பேசிக்கொண்டிருக்கையில் நமச்சிவாயன் தன் வண்டியில் இருந்து ஒரு ஊதா வண்ணப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்தான். செல்வப்பிள்ளை அதை வாங்கி திறந்து அதிலிருந்து மருந்தையெடுத்து, அந்த எஜமானனுக்குக் காட்டி, ""அப்பா இது ஒரு மருந்து; இது என் மகன் என் கையில் கொடுத்து குடியேத்தத்தண்டை மறந்து போகாமல் சாப்பிடும்படி சொன்னான். அதற்காகவே நான் ஞாபகப்படுத்தச் சொன்னது'' என்றான்.
அவன் அதைக் கேட்டு அவன் மேல் கோபம் கொண்டு ஒன்றும் சொல்லாமல் நெருக்கென்று கதவைப் பூட்டி வண்டி விடும்படி ஊதிவிட்டு தன் யஜமானன் பெட்டியைக் கூட வாங்க வொட்டாமல் நமசிவாயத்தை அவன் ஏறியிருந்த வண்டியில் போட்டடைத்தான். வண்டி போய்விட்டது. இது யாருடைய தெரியாமை, அறிவுடையோர்கள் உணர வேண்டும்.
ஜன வினோதினி சென்னை 1874
பக்கம் 147-149