ஞாயிறு கொண்டாட்டம்

இறையருள் தந்த பேராற்றல்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், திருச்செந்தூர் சண்முகர்,காஞ்சி காமாட்சி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, மைசூர் சாமுண்டீஸ்வரி, திருப்பதி வெங்கடாஜலபதி உட்பட பிரபலமான கோயில்களின் மூல மூர்த்திகள்

சி.வ.சு. ஜெகஜோதி

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், திருச்செந்தூர் சண்முகர், காஞ்சி காமாட்சி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, மைசூர் சாமுண்டீஸ்வரி, திருப்பதி வெங்கடாஜலபதி உட்பட பிரபலமான கோயில்களின் மூல மூர்த்திகள் அனைத்தையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் அற்புதமான பாக்கியம் ஒருவருக்கு கிடைத்தது என்றால் நம்புவோமா...

நம்பவே முடியாத அளவிற்கு பல திருக்கோயில்களில் மூலவராக உள்ள இறைத்திருமேனிகளை அப்படியே தத்ரூபமாக வரைந்திருக்கிறார் ஓவியர் ஆ.மணிவேலு.நேரில் சென்று பார்த்தாலும் மிக அருகில் சென்று பார்க்க முடியாத இறையுருவங்களை நெருக்கமாக பார்த்து பரவசமடையும் படியும்,பார்த்தவுடன் சிலிர்த்துப் போகும் வகையிலும் மணிவேலுவின் ஓவியங்கள் அவரது தொழில் நுட்பத்தை கம்பீரமாய் பிரதிபலிக்கின்றன.

இவர் வரைந்த ஓவியங்கள் கண்காட்சி காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவர் மணி மண்டபத்தில் கடந்த ஜூலை 26- ஆம் தேதி தொடங்கி வரும் செப்டம்பர் மாதம் 20 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இக்கண்காட்சியை சென்னையில் உள்ள "டாட். ஸ்கூல் ஆப் டிசைன்' கல்லூரி ஏற்பாடு செய்திருந்தது.அம்மணி மண்டபத்திலேயே சாதுர்மாஸ்ய விரதத்தை அனுஷ்டித்து வரும் காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஓவியக்கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.

ஒரே நேரத்தில் அத்தனை கோயில்களின் மூல மூர்த்திகளையும் நேரில் சென்று பார்த்தது போன்ற உணர்வு கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.இது ஓவியர் மணிவேலுவுக்கு இறைவன் தந்த பேராற்றல் என்று தான் சொல்ல வேண்டும் என்றும் அவரை விஜயேந்திரர் பாராட்டினார்.சென்னை பொழிச்சலூர் அகத்தீஸ்வரர் நகரில் வசித்து வருபவர் ஓவியர் ஆ.மணிவேல்(80)மிகச்சிறந்த சிற்பக் கலைஞரான தன் தந்தை ஆறுமுகத்துக்கு தனது 15- ஆவது வயதிலேயே உதவியாளராக இருந்துள்ளார். அப்பா ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டிருந்ததால் இவருக்கும் ஆன்மிகத்தின் மீது ஒரு இனம் புரியாத பற்று ஏற்பட்டிருக்கிறது.தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன் வாழ்வையே ஓவியத்துக்காகவே அர்ப்பணித்திருக்கிறார்.தெய்வீக ஓவியங்களைத் தவிர வேறு எதையுமே வரைவதில்லை என்ற மன உறுதியோடு சுமார் 500-க்கும் மேற்பட்ட இறைவனின் திருமேனிகளை மட்டுமே வரைந்து தனது கலைப்பணியை இன்று வரை தொடர்ந்து வருகிறார்.ஓவியக்கண்காட்சி நடந்து வரும் மணிமண்டபத்தில் ஓவியரை சந்தித்து பேசினோம்:

""என் தந்தை ஆறுமுகம் மிகச்சிறந்த சிற்பக் கலைஞர். எனது 15 -ஆவது வயதிலிருந்து அவருக்கு உதவியாக இருந்து கோயில் கோபுர சிற்பங்கள்,தேர் வேலைகள் மற்றும் வாகனங்கள் செய்தல் ஆகியனவற்றை கற்றுக்கொண்டேன். கோயில் கோபுரங்களுக்கு பொம்மைகள் செய்து கொண்டிருந்த என்னை "கலைமகள்' மாத இதழில் ஓவியராக இருந்த எம்.எஸ்.குமாரசாமி என்பவர் எனக்கு ஓவியம் கற்றுக் கொடுத்தார்.நான் முதல் முதலில் கோட்டோவியமாக வரைந்த விநாயகர் ஓவியத்தை தீபாவளி மலரில் (1979) வெளியிட்டார்.அதைப் பார்த்ததும் நான் அடைந்த உற்சாகத்துக்கு அளவே இல்லை.

தொடர்ந்து கோட்டோவியங்கள் வரைந்து கொடுக்கலாமே என்ற எண்ணத்திலிருந்த போது "ஞானபூமி' என்ற ஆன்மீக மாத இதழையும் நடத்தி வந்த "இதயம் பேசுகிறது' ஆசிரியர் மணியனை  ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்க நேர்ந்தது.அவர் என்னிடம் தனது மாத இதழுக்கு மாதம் ஒன்று வீதம் ஒவ்வொரு மாதமும் கோயில்களில் உள்ள மூலவர்களை அப்படியே தத்ரூபமாக வரைந்து கொடுக்க முடியுமா என்று கேட்டார்.நானும் சம்மதம் தெரிவித்தேன்.கோயில் கருவறைக்கு அருகில் அமர்ந்து இறைத்திருமேனிகளை வரையும் அனுமதியை பல கோயில்களில் அவர் பெற்றுத் தந்தார்.ஒரு மாத இதழுக்கு தேவையான படத்தை 3 மாதங்களுக்கு முன்பே வரைந்து கொடுத்து விட வேண்டும்.ஒரு படம் வரைய குறைந்தது 2 மாதங்களாவது ஆகும்.அப்படியே வரைந்தும் கொடுத்தேன். பலரும் பாராட்டினார்கள்."ஞானபூமி' மாத இதழுக்காக நான் முதல் முதலில் வரைந்து கொடுத்த ஓவியம் மேலூர் திருவுடையம்மன்.

கோயில் மூலஸ்தானத்தை படம் எடுக்கக் கூடாது என்பார்களே..

கோயிலில் மூலவர்களை புகைப்படம் எடுக்கக்கூடாது.கருவறைக்கு மிக அருகில் போகவும் கூடாது.கருவறைக்கு அருகில் உள்ள நடையில் அமர்ந்து பக்தர்கள் அதிகம் வராத நேரங்களில் பைனாகுலர்,பூதக்கண்ணாடி கருவிகளின் மூலம் தெய்வங்களின் உருவத்தை முதன் முதலில் ஒரு ஸ்கெட்ச் போட்டுக் கொள்வேன்.எந்தத் திருவிழாவிற்கு என்ன வகையான ஆபரணங்களை அணிகிறார்கள் என்பதையும் கோயில் பூஜகர்கள் மூலமாக பார்த்துக்கொண்டு அவற்றையும் ஸ்கெட்ச் போட்டுக் கொள்வேன்.ஆபரணங்களையும் தொடவோ,படம் எடுக்கவே மாட்டேன்.

தெய்வத்திருமேனிகளின் உயரம், அகலம்,உடல் அமைப்புகள், அணிந்துள்ள உடைகள் மற்றும் ஆபரணங்கள் இவையனைத்தையும் கோட்டோவியமாக முதலில் போட்டுக்கொண்டு வீட்டுக்கு வந்து வரையத் தொடங்கி விடுவேன்.கலை நுணுக்கத்தைப் பொறுத்து ஒரு படம் வரைய 2 அல்லது 3 மாதங்கள் கூட ஆகலாம். இதுவரை சுமார் 500-க்கும் மேற்பட்ட படங்கள் வரைந்திருக்கிறேன்.இதைப்பார்த்து விட்ட பல கோயில்களின் நிர்வாகிகள் கோயில்களில் உள்ள மண்டபங்களை அலங்கரிக்க சுவாமி படங்களை வரைந்து கேட்பார்கள்.நான் பல கோயில்களுக்கும்,பல நிறுவனங்களுக்கு காலண்டருக்காகவும் வரைந்து கொடுத்திருக்கிறேன்.

காஞ்சி மடாதிபதிகள் ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் எனது இல்லத்துக்கே (1995)வந்து என்னை ஆசீர்வதித்த நிகழ்வு எனக்கு கிடைத்த மாபெரும் பாக்கியம்.எந்த ஓவியக்கல்லூரியிலும் படிக்காத எனக்கு காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாசியின்படி இது இறையருள் தந்த பேராற்றல் என்று தான் சொல்ல வேண்டும்.

ஓவியங்களை வரையும் விதம் பற்றிச் சொல்லுங்கள்....

பெரும்பாலும் இரண்டரை அடிக்கு 2 அடியிலான படங்களைத் தான் அதிகமாக வரைவேன்.முதலில் இதே அளவில் ஒரு பிளைவுட்டில் பூச்சி அரிக்காத திரவியங்கள் தடவப்பட்ட ஒரு துணியை மேலாக ஒட்டி விடுவேன். பின்னர் அத்துணியின் மேலாக வரைய வேண்டிய பேப்பரை ஓட்டுவேன்.இதை கென்ட் பேப்பர் என்பார்கள். தண்ணீரில் ஊற வைத்தாலும் ஒரு குறிப்பிட்ட நேரம் வரை ஊறாது.நான் பயன்படுத்தும் துணி,பேப்பர், வாட்டர் கலர் இவையனைத்துமே வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும்.நான் வரையும் ஓவியங்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மங்காது.வெளிநாட்டில் கிடைக்கும் விலையுயர்ந்த வண்ணங்களையே பயன்படுத்துவேன்.வைத்தீஸ்வரன் கோயில் முத்துக்குமாரசாமி,திருக்கடையூர் அபிராமி, காஞ்சி காமாட்சி,கொள்ளூர் மூகாம்பிகை என 500க்கும் மேற்பட்ட படங்களை தத்ரூபமாக வரைந்துள்ளேன்.

ஒரு ஓவியம் வரைந்து முடிக்க எவ்வளவு செலவாகும்?

1978 முதல் ஓவியம் வரைகிறேன்.1995- இல் ஒரு ஓவியம் வரைய ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை செலவாகும்.இப்போது இரண்டரை அடிக்கு 2 அடி அளவிலான ஓவியத்துக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவாகிறது.எந்த ஓவியத்தை வரையத் தொடங்கும் போதும் நல்ல நாளில்,நல்ல நேரத்தில் தான் வரையத் தொடங்குவேன்.குளிக்காமல் சுவாமி படங்களை வரையவே மாட்டேன்.படத்தை வரைந்து முடிக்கும் வரை விரதம் இருப்பதும் வழக்கம்.

எந்தப்படத்தையும் தத்ரூபமாகத்தான் வரைய வேண்டும் என்பதற்கு காரணம் எதுவும் இருக்கிறதா?

ஒரு முறை என் தந்தை அவரது கையில் ஒரு அழகான செவ்வந்திப்பூ ஒன்றை வைத்திருந்தார். அந்தப்பூவை நான் கையில் வாங்கிப் பார்த்த போது அதிர்ச்சியடைந்தேன்.ஏனெனில் அது உண்மையான பூ இல்லை எனத் தெரிய வந்தது.

என் தந்தை சிற்பி என்பதால் செவ்வந்திப்பூ போல மரத்தில் செய்து,அதற்கு வண்ணமும் கொடுத்திருந்தார். பூவின் இதழ்களில் இருந்த கலைநயமும்,தொழில் நுணுக்கமும் என்னை வெகுவாக கவர்ந்தது. அதன் பின்னரே எதையும் தத்ரூபமாகத்தான் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் ஆழமாக வேரூன்ற வைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

இந்தியா-அமெரிக்கா இடையேயான இடைக்கால வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு

சிரி... சிரி...

அசத்தல்...

SCROLL FOR NEXT