பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழர்களின் வீரத்தைப் பறைசாற்றும் விளையாட்டு இது.
"ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் இருந்து முதலாவது காளையை பாளையக்காரன் அவிழ்த்துவிட்டதும் அதற்கடுத்து இரண்டாவது காளையாக தனது பாளையத்தைக் காப்பற்றியவர்கள் காளையை அவிழ்த்துவிட வேண்டும். கோயில்களில் தீர்த்தம் முதலில் பாளையக்காரருக்கும் அடுத்து 2-ஆவது தீர்த்தமாக பாளையத்தைக் காப்பாற்றிய நாட்டாண்மைக்கும் செய்ய வேண்டும். 5 ஊர்களில் வரிவசூல் செய்துகொள்ள உரிமையும் நிலமானியம் கொடுத்தது...' என்ற வரலாற்று செய்திகள் இடம்பெற்ற செப்புப்பட்டையம் அண்மையில் கிடைக்கப் பெற்றது. இது உத்தேசமாக கி.பி.1775-ஆம் ஆண்டு என கணக்கிடப்பட்டுள்ளது. தாடிச்சேரி இராமதாரி என்பவரின் வாரிசுகளிடம் உள்ளது. பழனி பாலமுருகன் என்பவர் மூலம் செப்பேட்டின் நிழற்படம் பெறப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது.
"மன்மத ஆண்டு ஆடி மாதம் 18-ஆம் தேதி' எனத் துவங்கும் இச்செப்பேட்டின் முதல் பக்கத்தில் 33 வரிகளும் இரண்டாம் பக்கத்தில் 15 வரிகளும் எழுதப்பட்டுள்ளன. வழக்கு மொழி கலந்து எழுத்துப் பிழைகளுடன் இருக்கிறது.
18-ஆம் நூற்றாண்டின் காலத்தில் பாளையக்கார நாயக்கர் ஆட்சியில் நடந்த ஒரு போர் குறித்து அறிய இந்தச் செப்பேடு உதவுகிறது.
தேனி மாவட்டத்தில் உள்ள வெள்ளாக்குறிச்சியிலிருந்து திருமால் சேர்வை, சின்னாஞ்சேர்வை ஆகியோர் தாடிச்சேரி என்னும் ஊருக்கு வந்து குடியேறினர்.
மேவாவீசைக்காரன் மசூரான் பன்னிபறத்தைவெட்டி, வட தேசத்திலிருந்து வந்து குடியிருக்கும் தாடிச்சேரி இருக்கும் பாளையப்பட்டையைக் கைப்பற்ற நினைக்கிறான். இந்த விவரத்தை சகோதரர்கள் அறிந்து வடதேசத்தானுடன் போரிட்டு, பாளையத்தைக் காப்பாற்றினர்.
சகோதரர்கள் இருவரும் படையைத் திரட்டி வெடி சிமிட்டாக்களைக் கொண்டு மசூரானுடன் போர் செய்ய, படையிலிருந்த பெரியகருப்ப தேவன், சின்ன கருப்பதேவன், பூலித்தேவன் ஆகிய மூவரும் இறந்து போயினர். இரண்டு சேர்வைக்காரர்களும் கோபமடைந்து மசூரான் குதிரையையும் குத்தி அதன் காலையும் வெட்டினர். அவனை வரட்டாற்று வரையில் விரட்டி, கண்டமநாயக்கனூர் முற்றத்தில் வைத்து கையை வெட்டி எடுத்து விட்டனர்.
பாளையக்காரராக இருந்த திருமலை போடி நாயக்கர் இருவரையும் அழைத்து, ""என்ன வேண்டும்'' என்று கேட்டார். இதற்கு இருவரும், "வெள்ளமனுஷன் சேருவைக்காரன் கூட்டத்தைச் சேர்ந்த நாங்கள் இருக்கும் கிராமம் தாடிச்சேரிக் கோட்டை என்பதாகும். தப்புக்குண்டுபட்டி காட்டுநாயக்கன்பட்டி உட்பட ஐந்து ஊர்களுக்குத் தாம்பிரப்பட்டயம் வேண்டும்'' என்றனர்.
இதையடுத்து, சின்னாஞ்சேர்வைக்காரன் நாட்டாண்மைக்காரன் என்ற பட்டம் பெற்றார். திருமால்சேர்வைக்காரருக்குப் பட்டயம் அளித்து நிலம் தானம் தரப்பட்டது. இதைத்தவிர ஐந்து கிராமத்தில் வரி வசூல் செய்து நாயக்கரிடம் செலுத்தவும் மேலே சொன்ன பொங்கல் -சங்கராந்தி தீர்த்த உரிமைகளும் வழங்கப்பட்டன.
பட்டையம் எழுதியவர்- வீராசாமி ஆசாரி எனவும், திருமலைகண்டம நாயக்கன், திருமலைமோடிநாக்கர் ஆகியோர் ஒப்பமிட்டுள்ளதும் குறிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செப்பேட்டின் காலம் அநேகமாக, திப்பு சுல்தான் திண்டுக்கல் வந்திருந்தபோது நடந்த நிகழ்வாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
18-ஆம்நூற்றாண்டில் பாளையக்காரநாயக்கர் ஆட்சி நிர்வாகத்தை அறிந்து கொள்ள இச்செப்பேடு உதவுகிறது.
மதுரை திருமலை நாயக்கருக்கும் மைசூரு படைக்கும் இடையே நடைபெற்ற மூக்கறுப்பு போர் போல் இங்கே தண்டனையாக கை எடுக்கும் போர் நடந்துள்ளதைக் காண்கிறோம்.
மசூரான் என செப்பேட்டில் குறிப்பிடப்பட்டிருப்பது மைசூர்காரரையே குறிப்பிடலாம் எனக் கருத வேண்டியுள்ளது. இச்செப்பேட்டின் மூலம் அக்கால போர் குறித்தும் தெய்வ நம்பிக்கை குறித்தும் அறிய முடிகிறது. எதிரியைக் "கையைவெட்டுவது' என்பது ஒருதண்டனை முறையாக இருந்துள்ளது. கை எடுக்கும் படைப்பிரிவில் சேர்ந்து இறந்தவருக்கு நீத்தார்பட்டியாக நிலம் வழங்கும் உரிமையும் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1529-இல் மதுரை ஆட்சிப் பொறுப்பை ஏற்ற விஸ்வநாத நாயக்கர் பாளையப்பட்டுகளை வலிமை மிக்கதாக ஆக்கினார்.
கலைமாமணி ச. கிருஷ்ணமூர்த்தி, தொல்லியல் ஆய்வாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.