கல்பாக்கம் அதிவேக ஈனுலை நாட்டின் அணுசக்திப் பயணத்தில் ஒரு மைல்கல்: மோடி பாராட்டு!
கல்பாக்கம் அதிவேக ஈனுலை நாட்டின் அணுசக்திப் பயணத்தில் ஒரு மைல்கல் என பிரதமர் மோடி பாராட்டியிருப்பது குறித்து...
புதுதில்லி: கல்பாக்கத்தில் அமைந்துள்ள அதிவேக ஈனுலை, நாட்டின் அணுசக்திப் பயணத்தில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களுக்கு "மனதின் குரல்' (மன்கீ பாத்) நிகழ்ச்சி மூலம் உரையாற்றி வருகிறார்.
அந்த வகையில், 133 ஆவது "மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஆற்றிய உரையில், தமிழ்நாட்டில் கல்பாக்கத்தில் அமைந்துள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் 500 மெகாவாட் மின்னுற்பத்தி திறன் கொண்ட முன்மாதிரி வேக ஈனுலை, 'நிலைமாறு நிலை'யை அடைந்து, நாட்டின் பெருமையை உயர்த்தியதற்காக, நாட்டின் அணுசக்தி விஞ்ஞானிகளை பிரதமர் மோடி பாராட்டினார்.
Advertisement
Advertisement
'நிலைமாறு நிலை' என்பது, ஒரு அணு உலை முதன்முறையாகத் தனக்குத்தானே இயங்கக்கூடிய அணுக்கருத் தொடர்வினையை வெற்றிகரமாக அடையும் கட்டமாகும். இந்தக் கட்டமானது, அந்த அணு உலை முழுமையாகச் செயல்பாட்டு நிலைக்குள் நுழைவதைக் குறிப்பதாகும்.
நாட்டின் அணுசக்திப் பயணத்தில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் என்று பிரதமர் மோடி புகழாராம் தெரிவித்தார்.
இந்த அணு உலை முழுமையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டிய மோடி, ஆற்றலை உற்பத்தி செய்வதோடு மட்டுமல்லாமல், இந்த 'ஈனுலை' எதிர்காலத்திற்கான புதிய எரிபொருளையும் உற்பத்தி செய்கிறது என்றார்.
மார்ச் 2024-இல் இந்த அணு உலையின் மையப்பகுதிக்குள் எரிபொருள் நிரப்பும் நிகழ்வை நேரில் பார்த்ததை நினைவுகூர்ந்தவர், நாட்டின் அணுசக்தித் திட்டத்திற்கு விலைமதிப்பற்ற பங்களிப்புகளை வழங்கிய அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். நாட்டின் விஞ்ஞானிகள் 'சிவில் அணுசக்தித் திட்டத்தை' முன்னெடுத்துச் செல்வதோடு, தேசத்தைக் கட்டமைப்பதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருவதாகப் பிரதமர் கூறினார். இது தொழில்துறை வளர்ச்சிக்கும், எரிசக்தித் துறைக்கும், சுகாதாரத் துறைக்கும் பயனளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவின் சிவில் அணுசக்தித் திட்டமானது, விவசாயம் முதல் நவீன கண்டுபிடிப்பாளர்கள் வரை அனைவருக்கும் உதவியுள்ளதாக அவர் கூறினார்.
காற்றாற்றல் மின்சார உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. இது நாட்டை முன்னோக்கி உந்திச் செல்கிறது என்றும், காற்றாற்றல் துறையில் நாடு சமீபத்தில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
நாட்டின் காற்றாற்றல் உற்பத்தித் திறன் தற்போது 56 ஜிகாவாட்களைத் தாண்டியுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும், கூடுதலாக, ஏறக்குறைய 6 ஜிகாவாட் அளவிற்கான புதிய உற்பத்தித் திறன் சேர்க்கப்பட்டுள்ளது.
காற்றாற்றல் துறையில் நாடு மிக வேகமாக முன்னேறி வருவதாகவும், காற்றாற்றல் உற்பத்தித் திறனில் உலக அளவில் நான்காவது இடத்தில் உள்ளது.
குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட நாட்டின் பல மாநிலங்கள் இந்த துறையில் முன்னோடிகளாகத் திகழ்வதாக கூறினார்.
குஜராத் மாநிலத்தின் கட்ச், பாடன் மற்றும் பனஸ்கந்தா போன்ற பகுதிகளில் பிரம்மாண்டமான புதுப்பிக்கத்தக்க காற்றாற்றல் பூங்காக்கள் உருவாகி வருகின்றன. புதிய வேலைவாய்ப்புகளும், அதற்கான வழிகளும் உருவாவதன் மூலம் இளைஞர்கள் பயனடைந்து வருகின்றனர்.
நாட்டின் வளர்ச்சிக்குச் சூரிய ஆற்றலும், காற்றாற்றலும் இன்றியமையாதவை என்று குறிப்பிட்ட மோடி, மின்சாரத்தைச் சேமித்து, தூய்மையான ஆற்றலைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். மேலும், இத்தகைய முயற்சிகள் நாட்டின் ஒவ்வொரு மட்டத்திலும் அவசியமானவை, ஏனெனில் அவைதான் மிகச் சரியான மாற்றத்தைக் கொண்டுவருகின்றன என்று பிரதமர் மோடி கூறினார்.
Prime Minister Modi termed this a historic milestone in India’s nuclear energy journey. He highlighted that the nuclear reactor is built entirely using indigenous technology.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.