பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி, ஏற்றுமதியில் புதிய உச்சம்: பிரதமர் மோடி பெருமிதம்
இந்தியாவின் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் மீதான உலகளாவிய நம்பிக்கை அதிகரித்து வருவதாக மோடி கூறியது குறித்து...
புது தில்லி: பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் நட்பு நாடுகளுடனான அரசியல் ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் இந்தியா தொடர்ந்து புதிய உயரங்களை எட்டி வருவதாக தனது தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான 'மன் கி பாத்' உரையில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதமாக தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி 'மனதின் குரல்'(மன் கி பாத்) என்ற தலைப்பில் ஒவ்வொரு மாதமும் கடைசி வாரத்தின் ஞாயிற்றுக்கிழமை வானொலியில் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அதன்படி, 136 ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை மக்களிடம் உரையாற்றினார்.
அப்போது, 1999 ஆம் ஆண்டு கார்கில் போரின்போது நாட்டின் எல்லையைக் காக்க தங்கள் உயிரைத் தியாகம் செய்த நமது வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன்.
Advertisement
Advertisement
மக்களின் வாழ்வில் சில நாள்களை நினைவில் கொள்ள நாள்காட்டி தேவையில்லை. இன்று, ஜூலை 26 அத்தகைய ஒரு நாள். 'கார்கில் வெற்றி நாள்' என்றும் இந்த நாள் நம்மைப் பெருமிதத்தால் நிரப்புகிறது. இந்த நாள் நமது வீரர்களின் அசாத்தியமான துணிச்சலை நமக்கு நினைவூட்டுகிறது.
கார்கிலின் உயர்ரமான சிகரங்கள், கடுமையான வானிலை, எதிரிகளின் சவால்கள் என அனைத்து இக்கட்டான ஒவ்வொரு சூழ்நிலைகளையும் நமது வீரர்கள் எதிர்கொண்டு சாதித்துக் காட்டினர்.
இன்றைய இந்தியா தனது வீரர்களை நினைவுகூர்வது மட்டுமல்லாமல், அவர்களின் வீரதீரச் செயல்களையும் புதிய தலைமுறைக்கு எடுத்துரைக்கிறது என்றும், இந்த உணர்வோடுதான் இந்த ஆண்டு ஒரு சிறப்பு 'சௌர்ய விஜய் யாத்திரை' ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் மோடி கூறினார்.
வீரர்களின் துணிச்சலுடன், இந்தியா தனது தொழில்நுட்பத் திறன்களையும் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது என்று பிரதமர் கூறினார்.
சில நாள்களுக்கு முன்பு, உள் நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட 'ஐ.என்.எஸ் மகேந்திரகிரி' போர்க்கப்பல் இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் பயன்படுத்தப்பட்ட பொருள்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமானவை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை.
இது 'ஆத்மநிர்பர் பாரத்' (சுயசார்பு இந்தியா) திட்டத்தின் வளர்ந்து வரும் வலிமையின் அடையாளமாகும் என்று அவர் கூறினார்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) இந்த மாதம் 'பினாகா' மற்றும் இரண்டு நாள்களுக்கு முன்பு 'குஷா' ஏவுகணையையும் வெற்றிகரமாகச் சோதித்தது. இந்த வெற்றி பாராட்டுக்குரியது.
இந்த வெற்றிக்குப் பின்னால் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் கூட்டு விடாமுயற்சி இருப்பதாகவும் மோடி குறிப்பிட்டார்.
பாதுகாப்புத் துறை உற்பத்தி, பாதுகாப்புத் துறை ஏற்றுமதி அல்லது நட்பு நாடுகளுடனான அரசியல் ஒத்துழைப்பு என எதுவாக இருந்தாலும், இந்தியா தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டி வருகிறது என்று அவர் கூறினார்.
இந்த மாதத் தொடக்கத்தில் தான் இந்தோனேசியாவுடன் 'பிரம்மோஸ்' மற்றும் 'அஸ்த்ரா' ஏவுகணைகள் தொடர்பான முக்கிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும், இந்தியாவின் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் மீதான உலகளாவிய நம்பிக்கை அதிகரித்து வருவதையே இது பிரதிபலிக்கிறது என்றும் பிரதமர் கூறினார்.
தனியார் துறையால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ராக்கெட் பற்றிக் குறிப்பிட்ட அவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை 'விக்ரம்-1' வெற்றிகரமாக ஏவப்பட்டதைக் கண்டு ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்வதாகக் கூறினார்.
இந்தியாவின் விண்வெளித் துறைக்கு இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும்; நாம் அனைவரும் இதற்குச் சாட்சியாக இருந்தோம்.
ஒரு காலத்தில் கற்பனை செய்வதற்கே கடினமாக இருந்த ஒன்றை நமது இளம் கண்டுபிடிப்பாளர்கள் சாதித்துள்ளனர் - அவர்கள் குறிப்பிடத்தக்க திறமை, ஆர்வம் மற்றும் பொறுமையை வெளிப்படுத்தியுள்ளனர் என்று அவர் கூறினார்.
நீண்ட காலமாக இந்தியாவின் விண்வெளித் துறை தனியார் துறைக்குத் திறக்கப்படாமல் இருந்ததாகவும், இதனால் ஆர்வமுள்ள பல இளைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பை இழந்ததாகவும் மோடி குறிப்பிட்டார்.
இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, நாங்கள் விண்வெளித் துறையைத் தனியார் நிறுவனங்களுக்குத் திறந்துவிட்டோம்; இன்று உலகம் அதன் பலன்களைக் கண்டு வருகிறது, என்று அவர் கூறினார்.
மழைநீர் சேகரிப்புக்கான 'கேட்ச் தி ரெயின்' இயக்கம் குறித்துப் பேசிய அவர், அதன் செயல் மிகவும் எளிமையானது என்றார். அதாவது, மழை எப்போது, எங்கு பெய்கிறதோ அங்கேயே அதைச் சேமிக்க வேண்டும்.
இதற்காக, ஜூலை 4-ஆம் தேதி முதல் நாடு தழுவிய சிறப்பு பிரசாரம் ஒன்று நடைபெற்று வருகிறது. இந்த முன்னெடுப்பின் கீழ், மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீரை அதிகரிக்க செய்வது, பழைய நீர்நிலைகளைச் சீரமைத்தல் மற்றும் மரக்கன்றுகளை நடுதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
விளையாட்டுத் துறையில் ஜப்பான் ஓபன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவுக்கும், லார்ட்ஸ் மைதானத்தில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி பெற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட பிரதமர், இந்தச் சாதனையை எண்ணி ஒட்டுமொத்த நாடும் பெருமைப்படுவதாகவும் அவர் கூறினார்.
எர்ணாகுளத்தின் தெற்கு சித்தூரில் உள்ள ஒரு பள்ளியில் 'சமஸ்கிருத மன்றம்' மூலம் அபிளாஷ் என்ற ஆசிரியர் சமஸ்கிருத மொழியை ஒரு தனித்துவமான முறையில் பிரபலப்படுத்தி வருவதை சுட்டிக்காட்டிய மோடி, இது கற்றலை மகிழ்ச்சியானதாக மாற்றுவதுடன், மக்களுக்கும் விளையாட்டுக்கும் இடையிலான ஆழமான பிணைப்பையும் வளர்ப்பதாக கூறினார்.
அறிவியல் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்திய மாணவர்கள் பெற்ற வெற்றிகள், உத்தரப் பிரதேசத்தின் பிஜ்னோர் பகுதியில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுவினர் 'விதுர் பிரேரணா சுதேசி மூலிகை தேநீர்' தயாரித்தது மற்றும் 'ஏக் பேட் மா கே நாம்' (தாயின் பெயரில் ஒரு மரம்) பிரச்சாரத்தின் மூலம் லட்சக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டது குறித்தும் பிரதமர் பேசினார்.
வரும் ஆகஸ்ட் 7 தேதி 'தேசிய கைத்தறி நாளை' முன்னிட்டு, நெசவாளர்களை ஊக்குவிப்பதன் மூலம் அவர்களைக் கௌரவிக்குமாறு அனைவரையும் மோடி கேட்டுக்கொண்டார்.
Whether it is defence production, defence exports, or political cooperation with friendly nations, India is continuously scaling new heights...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.