சென்னை : களைகட்டியுள்ள இசை விழா
சென்னை சபாக்களில் மார்கழி மாத இசை விழா களைகட்டியுள்ளது. கர்நாடக இசைக் கலைஞர்கள் இசை விருந்தின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் மயங்க வைத்து கொண்டிருக்கின்றனர்.
சென்னை சபாக்களில் மார்கழி மாத இசை விழா களைகட்டியுள்ளது. கர்நாடக இசைக் கலைஞர்கள் இசை விருந்தின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் மயங்க வைத்து கொண்டிருக்கின்றனர். கர்நாடக இசை ரசிகர்களுக்கு மட்டுமல்ல; மூத்த இசைக் கலைஞர்கள், வளரும் இசைக் கலைஞர்களுக்கு டிசம்பர் மாதம் வந்தாலே இனம் புரியாத சந்தோஷம்.
காரணம், சென்னை இசை விழாதான். இந்த இசை விழாவை நேரில் பார்த்து அனுபவிப்பதற்காக, பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும்ரசிகர்கள், பாடகர்கள் சென்னைக்கு வந்து இசை மழையில் நனைகின்றனர். கரோனா தொற்று காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகள் சபாக்களில் இசை நிகழ்ச்சி நடைபெறவில்லை.
அதேசமயம் இணைய வழியில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. என்ன இருந்தாலும் நேரில் இசைக் கச்சேரியை ரசிப்பது போல் இல்லை என இசை ரசிகர்கள் ஆதங்கப்பட்டனர்.
இந்நிலையில் கரோனா தொற்று முடிவுக்கு வந்ததையடுத்து, இந்த ஆண்டு வழக்கம் போல் சபாக்களில் இசை நிகழ்ச்சிகள் களை கட்டியுள்ளன.
மார்கழி மாதம் என்றாலே பக்திக்கும் இசைக்கும் உகந்த மாதம். இந்த மாதத்தில் 30 நாள்களும் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் தனது தோழிகளுடன் அதிகாலை கோயிலுக்குச் சென்று திருப்பாவை நோன்பு இருந்து கண்ணனை வழிபட்டாள். தன்னுடைய பக்தி மூலம் கண்ணனை அடைந்தாள் என்பது ஆன்மிகம் கூறும் தகவல்.
இதேபோல் சிவன் மீது பக்தி கொண்டு மாணிக்கவாசகர் திருவெம்பாவை மூலம் இறைவனைத் துயில் எழுப்புகிறார். சிறப்பு வாய்ந்த மார்கழி மாதம் குளிர் அடிக்கும் மாலை வேளையில் செவிக்கும் கண்ணுக்கும் விருந்து அளிக்கும் வகையில் சென்னை சபாக்களில் கச்சேரிகளும் , நாட்டியங்களும் நடைபெறுகின்றன.
சங்கீத மும்மூர்த்திகள் பிறந்த தஞ்சை மாவட்டம் கர்நாடக இசையின் பிறப்பிடமாகத் திகழ்கிறது. அதனால் தான் தஞ்சையை ஆண்ட மன்னர்கள் இயல், இசைமற்றும் நாட்டியம் போன்ற கலைகளை வளர்த்து வந்துள்ளனர்.
சென்னையில் இசை ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து 1883-ஆம் ஆண்டு "மெட்ராஸ் ஜூபின் ஞானசமாஜம்' என்ற அமைப்பை உருவாக்கி இசை நிகழ்ச்சி நடத்தினர். அது நீண்ட நாள்கள் நடைபெறவில்லை.
1902-ஆம் ஆண்டு மௌனி திருமலாச்சாரி தலைமையில் 50 உறுப்பினர்களைக் கொண்டு ஸ்ரீபார்த்தசாரதி சபா உருவாக்கப்பட்டது. இதில் பஜனை, கதாகாலட்சேபங்கள் நடத்தப்பட்டன. இதன் பின்னர் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இன்றும் இதுவே சென்னையில் மிகப் பழைமையான சபாவாக உள்ளது.
1927-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் கூட்டத்துக்கு வருபவர்களை மகிழ்விக்க, எட்டு நாள்கள் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் கர்நாடக இசை, ஹிந்துஸ்தானிய இசை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இந் நிகழ்ச்சியே சென்னை இசைத் திருவிழாவுக்கு முதல் நிகழ்ச்சி எனலாம். அப்போது தொடங்கப்பட்டது தான் "மியூஸிக் அகாதெமி'. 1928-ஆம் ஆண்டு இது சங்கமாகப் பதிவு செய்யப்பட்டது.
1932-ஆம் ஆண்டில் வயலின் இசைமேதை சௌடையா, கோபால கிருஷ்ண ராவ் இணைந்து இந்தியன்ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியை உருவாக்கி இசை நிகழ்ச்சியை நடத்தினர்.
1933 -ஆம் ஆண்டில் சென்னை இசைவிழாவில் திருப்புமுனை ஆண்டாக அமைந்தது எனலாம். அந்த ஆண்டு மியூசிக் அகாதெமி, இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் ஆகிய சபாக்களில் மிகப் பெரிய அளவில் கச்சேரிகள் நடத்தப்பட்டன. இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி இசை நிகழ்ச்சி நடத்தினார். அவருடைய தாயார் சண்முகவடிவு வீணை வாசித்தார். சௌடையா சகோதரர் குருராஜப்பா வயலின் வாசித்தார். இது மிகவும் பேசப்பட்ட கச்சேரி. இசைவிழாவின் ஆரோக்கியமான போட்டியாக அது அமைந்தது.
அந்தக் காலங்களில் சென்னை சபாக்களில் இசை ஜாம்பவானாக இருந்த அரியக்குடி ராமானுஜம், செம்மங்குடி சீனிவாச அய்யர், ஜி.என். பாலசுப்பிரமணியம், செம்பை வைத்தியநாத பாகவதர், மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர், எம்.எஸ்.சுப்புலட்சுமி, டி.கே.பட்டமாள், எம்.எல்.வசந்தகுமாரி, நாதஸ்வர மேதை டி.என். ராஜரத்தினம் பிள்ளை, காருக்குறிச்சி அருணாசலம், , வயலின் மேதை சௌடையா, துவராம் ரங்கசாமி, புல்லாங்குழல் மகாலிங்கம் போன்றவர்கள் இசை சாம்ராஜ்யம் நடத்தினர்.
பிற்காலங்களில் திருச்சூர் ராமச்சந்திரன், கே.ஜே.யேசுதாஸ், பி.வி.ராஜம் அய்யர், மகாராஜபுரம் சந்தானம், டி.கே. சங்கரநாராயணன், வேதவல்லி, மணி கிருஷ்ணசாமி, சீர்காழி கோவிந்தராஜன், மதுரை சோமு, குன்னக்குடி வைத்தியநாதன், புல்லாங்குழல் ரமணி, டி.என். சேஷகோபாலன் போன்றவர்கள் இசைமழை பொழிந்தனர்.இன்றைய கால கட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் கர்நாடக இசை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது சபாக்களில் இளைஞர்கள் அதிகம் பாடிவருகின்றனர்.
சென்னை இசைவிழாவில் 3,000 இசைக் கச்சேரிகள் நடைபெறுகின்றன. நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, துல்லிய ஒலியுடன் இசைக் கச்சேரிகளை நடத்துகின்றனர்.
மார்கழி இசை விழா சென்னையில் பல சபாக்களில் நடைபெற்றாலும் அடித்தட்டு மக்களால் ரசிக்க முடியாமல் இருந்தது. அக்குறையைப் போக்கும் வகையில் சென்னை பிராட்வே பகுதியில் 1943-ஆம் ஆண்டு ராஜா அண்ணாமலை செட்டியாரால் "தமிழிசை மன்றம்' தொடங்கப்பட்டது. இதில், தமிழிசைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்த மன்றத்தில் தேவாரம் , திருப்புகழ், ஆழ்வார்களின் பாசுரங்கள் பாடப்பட்டன. தமிழ்ப் பண்பாடு, கலாசாரம் தமிழிசை மன்றத்தின் மூலம் வளர்க்கப்பட்டது.
தமிழிசை பாடும் கலைஞர்களுக்கு "இசைப் பேரறிஞர்' விருது வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மார்கழி இசை நிகழ்ச்சிகள் நடத்தும் சபாக்களில் செவிக்கு இசை விருந்து அளிப்பதுடன், தமிழக பாரம்பரிய உணவு வகைகளுடன் அறுசுவை விருந்து படைக்கின்றனர். இதன் மூலம் பாரம்பரிய உணவு வகைகளை இசை ரசிகர்கள் தெரிந்து கொள்கின்றனர். மார்கழி இசை விழாக்கள் மூலம் கர்நாடக இசையும், தமிழிசையும் வளர்க்கப்படுகிறது என்றால் அது மிகையல்ல!