"புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்' என்ற பாடலையும் மறக்க முடியாது. பாடலில் வரும் புல்லாங்குழலையும் அதன் பாரம்பரியத்தையும் நம்மால் விலக்கி வைக்க முடியாது. புல்லாங்குழல் அனைத்துமே சுருதி சுத்தமாக இருக்கும் என்பது கட்டாயமில்லை.
மதுரை தவிட்டு சந்தைப் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணராம் சுமார் நாற்பது ஆண்டுகளாக சுருதி சுத்தமான புல்லாங்குழல்களைச் செய்து வருகிறார். தற்சமயம் தேவைகளின் அடிப்படையில் ஆன்லைனில் விற்று வரும் கிருஷ்ணராம் இசைத்துறையில் தனது பங்களிப்பு குறித்து விளக்குகிறார்.
ஏனைய இசைக் கருவிகளைப் போலவே புல்லாங்குழலுக்கும் பாரம்பரியம் உண்டு. தவிர புல்லாங்குழல் கோகுலக் கண்ணனின் கைகளில் தவழ்ந்தது. துவாரகை கிருஷ்ணன் கையில் புல்லாங்குழல் இணைந்தே வந்ததினால், புல்லாங்குழல் தெய்வீக இசைக் கருவி என்றும் இந்தியாவின் "தாய் வாத்தியம்' என்றும் சொல்லப்படுகிறது.
உலகின் பல பாகங்களிலும் இந்தத் துளைக் கருவி பண்டைக் காலம் தொட்டே பயன்படுத்தப்பட்டு வருகிறது. சங்க இலக்கியத்திலும் "குழல்' எனப்படும் புல்லாங்குழல் இடம்பெற்றுள்ளது. சிலப்பதிகாரத்தில் உள்ள ஆய்ச்சியர் குரவையில் "கொன்றைக் குழல், ஆம்பர் குழல், முல்லைக்குழல்' என்று மூன்று வகைக் குழல்களைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.
தமிழ்க் கடவுளான முருகனுக்கும் புல்லாங்குழலுக்கும் தொடர்பு உண்டு. திருமுருகாற்றுப் படையில், குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன் என்ற வரியில் குழலின் குறிப்பு வருகிறது.
குழலினிது யாழினிது என்ப தம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர் என்ற குறளிலும் குழலை வள்ளுவர் குறிப்பிடும் போது இயற்கை இசைக் கருவியான புல்லாங்குழலைச் சொல்லிவிட்டுப் பிறகுதான் யாழைச் சொல்லுகின்றார். இதிலிருந்து புல்லாங்குழல் அனைத்து தர மக்களுக்கும் தெரிந்த இசைக்கருவியாக இருந்து வந்துள்ளது எனத் தெரிந்து கொள்ளலாம்.
திருவிழா காலங்களில் விற்கப்படும் புல்லாங்குழலை தொடக்கத்தில் செய்ய ஆரம்பித்தேன். முறையாகச் செய்ய வேண்டும்... அதற்காகப் புல்லாங்குழல் வாசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று எனது குருநாதர் வேணுகோபாலிடம் புல்லாங்குழல் வாசிக்கப் பயிற்சி பெற்றேன். பிறகு கச்சேரியில் வாசிக்கும் புல்லாங்குழலை மூங்கிலில் செய்ய ஆரம்பித்தேன். அதை பார்த்த குருநாதர்... "புல்லாங்குழலை சுருதி சுத்தமாகச் செய்வதை நிறுத்திவிடாதே' என்றார்.
புகழ் பெற்ற புல்லாங்குழல் விற்பன்னர் பத்மஸ்ரீ டாக்டர் ரமணி "புல்லாங்குழல் வாசிப்பவர்கள் அனைவராலும் புல்லாங்குழலை உருவாக்க முடியாது. உங்களுக்கு வாசிக்கவும் தெரியும்... புல்லாங்குழலை உருவாக்கவும் தெரியும். அதைத் தொடருங்கள்' என்றார்.
மூங்கில்களை கேரளத்திலிருந்ததும், அஸ்ஸாமிலிருந்தும் தருவிக்கிறேன். மூங்கிலில் "ஈட்டல்' எனப்படும் வகைதான் புல்லாங்குழல் செய்ய பொருத்தமாக இருக்கும். இந்த வகை மூங்கில்கள் இளசாகவும் இராது. முற்றியதாகவும் இராது. நடுத்தரமாக இருக்கும்.
இந்த மூங்கிலில் கணுக்கள் குறைவாக இருக்கும். இரண்டு கணுக்களுக்குள்ள இடைவெளி 20 அங்குலத்தைவிட சற்று அதிகம் இருக்கும். கணுக்களை அகற்றி வெற்றிடமுள்ள மூங்கில் குழாயில் விரல்களை அமர்த்த 6, 7, 8 துளைகளை இட வேண்டும். நெருப்பில் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பிகளை மூங்கில் குழாயில் அழுத்தும் போது அந்தப் பகுதி பொசுங்கி புகை எழும். சில வினாடிகளில் துளை விழும்.
எதிர்முனையில் வாய் வைத்து ஊத துளையைக் கத்தியால் செதுக்கி உருவாக்கவேண்டும். ஊதும் காற்று வெளியே போகாமல் இருக்க, அந்தப் பகுதி முனையை கார்க் அல்லது ரப்பர் வைத்து அடைக்க வேண்டும். துணி அல்லது உப்புத்தாள் வைத்து தேய்த்துத் துளைகளில் உள்ள பிசுறுகளை வழுவழுப்பாக்கலாம். ஆறு, ஏழு துளைகள் உள்ள புல்லாங்குழல் ஹிந்துஸ்தானி சங்கீதத்திற்குப் பயன்படுத்துவார்கள். கர்நாடக சங்கீதத்திற்கு எட்டு துளையுள்ள புல்லாங்குழல் பொருத்தமாக இருக்கும். சிறார்களுக்கான புல்லாங்குழல் நீளம் சிறிதாகவும் துளைகள் அவர்களின் விரல்களுக்கு ஏற்ற மாதிரி சிறிய துளை போட வேண்டும்.
புல்லாங்குழல் வாசிக்கும் பாலக்காடு கே. எல்.ஸ்ரீதர் உள்பட பல பிரபலங்கள் நான் தயாரிக்கும் புல்லாங்குழல்களைப் பயன்படுத்திப் பார்த்துத் தங்கள் பரிந்துரைகளை வலைத்தளங்களில் பதிவு செய்ய.... இந்தியா முழுவதும், 15 வெளிநாடுகளிலும் எனது புல்லாங்குழல் விற்பனை ஆகின்றன.
புல்லாங்குழல் வேண்டும் என்று சொல்பவரிடம், அவருடைய வயது என்ன என்று கேட்டு அதற்கு ஏற்றார் போல் புல்லாங்குழல் செய்து சுருதி சுத்தத்தை "கார்க் டியூனர்' கருவி மூலம் தர பரிசோதனை செய்த பிறகுதான் கொடுப்பேன். மொத்தமாகப் புல்லாங்குழல்களைச் செய்து வைப்பதில்லை. புல்லாங்குழல் செய்வதில், பரிசோதிப்பதில் எனது இரண்டு மகள்கள் உதவுகிறார்கள்.
எனது தாத்தா, "பரசுமன்னா நாகைய்யா பாகவதர் ஸ்ரீமத் நடன கோபால நாயகி சுவாமி'களின் தலைமை சிஷ்யர். சித்தி சக்தி பெற்ற இந்த சுவாமிக்கு மதுரையில் கோயில் இருக்கிறது. வழிபாடுகளும் நடக்கிறது. அதனால் என்னவோ எங்கள் குடும்பத்தில் எனக்கு இசையில் ஈடுபாடு வந்துள்ளது.
ஹிந்துஸ்தானி, கர்நாடக, மேற்கத்திய இசை நிகழ்ச்சிகளில் பயன்படுத்தும் புல்லாங்குழல்களில் கீழ், மத்திம, மேல் ஸ்தாயி என்று ஒவ்வொரு பிரிவிலும் 29 வகைப் புல்லாங்குழல்கள் ஆக மொத்தம் 87 வகைப் புல்லாங்குழல்கள் உண்டு. இந்த புல்லாங்குழல்களை என்னால் உருவாக்க முடியும்.
மூச்சுப் பயிற்சிக்கும் புல்லாங்குழல் உதவும். புல்லாங்குழல் வாசிக்க இளைய தலைமுறையிடம் ஆர்வம் குறைந்து வருகிறது'' என்கிறார் கிருஷ்ணராம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.