முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

கீச்சு.. மூச்சு.. பேச்சு..!

அதிசயம்! ஆனால் உண்மை என்ற ஒரு சொல் வழக்கு உண்டு. சில நாள்களுக்கு முன்பு அது எனது நேரடி அனுபவம் ஆனது.  

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
பகிர்:


அதிசயம்! ஆனால் உண்மை என்ற ஒரு சொல் வழக்கு உண்டு. சில நாள்களுக்கு முன்பு அது எனது நேரடி அனுபவம் ஆனது.  தொண்டையில் ஏதோ சிரமம் இருப்பதாக என் மகள் சொல்ல அவளை சென்னை ராயப்பேட்டையில் உள்ள "சிவா கிளினிக்' என்ற பெயரில் இயங்கும்,   காது மூக்குத் தொண்டை நிபுணர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். என் மகளை டாக்டர் பரிசோதிப்பதற்கு முன்னதாக அங்கு சில வித்தியாசமான நபர்களைக் கண்டேன். அவர்களை நோயாளிகள் என்று சொல்வது தவறு. நல்ல உடல் நிலையில் இருப்பவர்கள்தான். குரல் மட்டும் கீச்சுக் குரலாக இருந்தது. அங்கு வந்திருந்த ஏழெட்டு இளைஞர்கள் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் வடக்கே திரிபுரா மாநிலத்தில் இருந்து வந்திருந்தார். இன்னொருவர் ஆந்திரத்தில் இருந்து வந்திருந்தார்.

தெலுங்கிலும், ஹிந்தியிலும் டாக்டர் குமரேசன் சரளமாகப் பேசி,  அவர்களுக்கு என்ன பிரச்னை என்பதை தெரிந்து கொண்டார்.  பின்பு வேறு ஓர் அறைக்கு அழைத்துச் சென்று ஒரு சில நிமிடங்கள் ஏதோ பயிற்சிகள் கொடுத்தார். பின்னர் முதலில் பரிசோதித்த அறைக்கு அழைத்து வந்தார். கீச்சுக் குரலில் இருந்தவரை சரியாகப் பேச வைத்தார் டாக்டர். முன்பிருந்த சன்னமான குரல் அப்போது உரக்க ஒலித்தது. டாக்டரே அவரிடம் மாறி மாறி பேச்சுக் கொடுத்தார். உள்ளே நுழைந்தபோது கதவு இடுக்கில் அகப்பட்டுக் கொண்ட எலி போல இருந்த அவரது குரல். திரும்பும் போது உரக்க உற்சாகமாக வெளிவந்தது. இந்த மாயம் எப்படி நிகழ்ந்தது?

அதற்கான சிகிச்சை முறை டாக்டர் குமரேசனிடம் இருக்கிறது. நான் என் மகள் பற்றியே அதிக கவனத்தில் இருந்ததால் அந்தச் சிகிச்சை முறை பற்றி கேட்டுத் தெரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் சஞ்சலத்துடன் வந்தவர்கள் சந்தோஷமாகவும் நம்பிக்கையுடனும் திரும்பியதைப் பார்த்தேன்.

டாக்டர் குமரேசனிடம் பேச்சு கொடுத்தபோது,  அவர் சொன்ன தகவல்கள் என்னை திகைக்க வைத்தன. அவரிடம் இந்தியாவில் வெவ்வேறு பகுதிகளில் இருந்து சிகிச்சைக்கு வருபவர்கள் இளைஞர்கள்.  அவர்கள் எவ்வளவு படித்திருந்தாலும்  இந்தக் கீச்சுக் குரலின் காரணமாக வேலைக்கான நேர்காணலில் தேர்வு பெறுவதில்லை. இதனால் அவர்களிடம் ஒரு தாழ்வு மனப்பான்மை வந்துவிடுகிறது. நாம் எதற்கும் தகுதியில்லாதவர்களோ என்று நினைத்து நொந்துகொள்கிறார்கள். சிலர் இதனால் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள். பெற்றோர்களும் கூட இதில் அதிக கவனம் எடுத்துக்கொள்வதாகத் தெரியவில்லை. இதுதான் இயற்கை என்று விட்டுவிடுகிறார்கள். ஆனால் அந்த இளைஞர்கள் சமூகத்தில் பழகும்போது கேலிக்கு ஆளாகிறார்கள். தொலைபேசியில் பேசினால் மறுமுனையில்,  "" என்ன மேடம்''  என்று அவர்களை கேட்கிறார்கள். இந்தக் கீச்சுக்குரலில் இருந்து விடுபட முடியுமானால் அவர்கள் மறுவாழ்வு பெற்றதாகவே உணர்கிறார்கள். அந்த மறுவாழ்வை அதிக சிரமம் இல்லாமல், அதிக கட்டணம் இல்லாமல் செய்து தருகிறார் டாக்டர் குமரேசன். 

என் மகளுக்கான மருத்துவம் பதினைந்து நிமிடங்களில் முடிந்துவிட்டது. மீதி நேரம் அவர் மற்றவர்களுக்கு செய்த சிகிச்சையை தொலைவில் இருந்தபடியே பார்த்துக்கொண்டிருந்தேன். என்னை அங்கு அழைத்துச் சென்றவர் டாக்டரின் நண்பர் என்பதனால் அவர் அங்குள்ள மருத்துவ முறை பற்றி மேலும் பல தகவல்களைச் சொன்னார். பேச்சுப் பயிற்சிக்கான சிறந்த மருத்துவமுறையை அவர் உருவாக்கியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.