முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

ஆளப் போறாரு நம்ம ஊரு மாப்பிள்ளை!

இந்தியாவை ஏறத்தாழ 200 ஆண்டுகள் ஆட்சி செய்தது பிரிட்டன். அந்த நாட்டையே இன்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் ஆளப் போவது உலகில் வாழும் ஒட்டுமொத்த இந்தியர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:41 AM
பகிர்:

இந்தியாவை ஏறத்தாழ 200 ஆண்டுகள் ஆட்சி செய்தது பிரிட்டன். அந்த நாட்டையே இன்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் ஆளப் போவது உலகில் வாழும் ஒட்டுமொத்த இந்தியர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

"சூரியன் மறையாத தேசம்' என்று பிரிட்டனை 80 ஆண்டுகளுக்கு முன்பு வரை அழைத்து வந்தனர். ஏறக்குறைய 50-க்கும் மேற்பட்ட நாடுகளை அந்த நாடு தனது ஆளுகைக்கு உள்படுத்தியிருந்தது. இந்த பிரிட்டன் நாட்டில் ஆங்கிலேயர் அல்லாத ஒருவர், அதுவும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், இந்தியாவின் பெரிய தொழிலதிபர் இன்போசிஸ்' நிறுவனர் நாராயண மூர்த்தியின் மாப்பிள்ளை, மிகவும் குறைந்த வயதான நாற்பத்து இரண்டு வயதில் பொறுப்பேற்பவர், பிரிட்டனில் உயர் பதவியை வகிக்கும் முதல் ஹிந்து, பிரிட்டனின் முதல் ஆசிய வம்சாவளி பிரதமர்... என்று பல பெருமைகளுக்குச் சொந்தக்காரராக இருப்பதும் பெரிதும் ஆச்சரியம்தானே!

""கிடைக்க வேண்டியது கிடைக்காமல் இருக்காது; கிடைப்பது கிடைத்தே தீரும்'' என்பதற்கு ஓர் உதாரணம் ரிஷி சுனக்.

சில மாதங்களுக்கு முன் பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜிநாமா செய்ததிலிருந்தே பிரிட்டன் அரசியல் களம் பரபரப்பு மிகுந்ததாகவே இருந்தது. அவரது அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த ரிஷி சுனக் முதலில் போர்க்கொடியை உயர்த்தி ராஜிநாமா செய்தார். பின்னர் போரிஸையும் ராஜிநாமா செய்ய வைத்தார். இதன்பின்னர் நடைபெற்ற பிரதமர் பதவிக்கான தேர்தலில் ரிஷி சுனக்கும், லிஸ் ட்ரஸூம் களம் கண்டனர். ஆனால், லிஸ் டிரஸ் வெற்றி பெற்றார்.

ஆனால் லிஸ் டிரஸ் மேற்கொண்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள் பிரிட்டனை மேலும் நிதி நெருக்கடிக்குள் தள்ளிவிட, 45 நாள்களில் லிஸ் ட்ரஸ் பிரதமர் பதவியை துறக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். இப்போது ரிஷி சுனக் போட்டியின்றி , பிரதமராக அரியணையில் அமர்ந்துவிட்டார். முன்னதாக, பிரிட்டன் மன்னர் சார்லஸிடம் வாழ்த்தும் பெற்றார்.

காதலும், குடும்பமும்...!

தாத்தா ராம்தாஸ் சுனக்- பாட்டி பசுஹாக் ராணி ஆகியோர் பஞ்சாப்பை (தற்போது பாகிஸ்தானிலுள்ளது) பூர்வீகமாகக் கொண்டவர்கள். அவர்கள் 1937-இல் கென்யாவில் குடியேறினர். 1960-களில் கென்யாவிலிருந்து பிரிட்டன் சவுத்தாம்டனுக்கு குடிபெயர்ந்தனர்.

இந்தத் தம்பதிக்குப் பிறந்தவர் யஷ்வீர் சுனக். இவரது மனைவி உஷா சுனக். உஷா ஒரு மருந்தாளுனர். யஷ்வீர் மருத்துவர். இவர்களுக்கு 1980-ஆம் ஆண்டு மே 12-இல் பிரிட்டனின் சவுதாம்ப்டன் நகரத்தில் பிறந்தவர்தான் ரிஷி சுனக்.

இதனால், பிறப்பிலேயே அவர் பிரிட்டன் குடிமகனானார். ஆங்கிலம், ஹிந்தி, பஞ்சாபி மொழிகளை நன்கு அறிந்தவர் ரிஷி சுனக். மொழிகள் மட்டுமல்ல; ஹிந்து மதக் கலாசாரத்தில் தோய்ந்தவர். தன்னை ஒரு பெருமைமிக்க ஹிந்து என்றே பலமுறை ரிஷி குறிப்பிட்டுள்ளார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம். பின்னர், அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படிப்பு. இங்குதான் ரிஷியின் வாழ்வில் மிக முக்கிய தருணம் நிகழ்ந்தது. ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் தன்னுடன் பயின்ற சக மாணவியும், இந்தியாவின் புகழ்பெற்ற தொழிலதிபர் "இன்போசிஸ்' நாராயணமூர்த்தியின் மகளுமாகிய
அக்ஷதா மீது காதல் வயப்பட்டார்.

இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் பெங்களூருவில் 2009-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு கிருஷ்ணா, அனோஷ்கா என இரண்டு குழந்தைகள்.

அரசியல் வளர்ச்சி

பெரும் தொழிலதிபர் வீட்டின் மருமகன். மனைவி துணையுடன் டெக்ஸ்டைல் வடிவமைப்பு நிறுவனம் ஒன்றை ரிஷி நடத்தினார். ஆனாலும் அவருக்குள் அரசியல் ஆசை இருந்தது. அதனால், கன்சர்வேட்டிவ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

சில ஆண்டுகள் தீவிரமாக கட்சிப் பணியாற்றிய ரிஷிக்கு, 2015, 2017, 2019-ஆம் தேர்தல்களில்வடக்கு யார்க்ஷையர் ரிச்மாண்டு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது.

அவருக்கு அபார வெற்றியும் வந்து சேர்ந்தது. அவர் எம்.பி. ஆனதும் பகவத் கீதையின் மீது சத்தியப் பிரமாணம் செய்தது பலரையும் வியக்க வைத்தது.

சில ஆண்டுகள் எம்.பி.யாக இருந்தவர் வீட்டு வசதி, உள்ளாட்சித் துறை இணை அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார். காலநிலை மாற்றம் விவகாரத்தில் தெரசா மே பதவி விலக, இங்கிலாந்தின் பிரதமர் ஆனார் போரிஸ் ஜான்சன். அப்போது நடந்த அமைச்சரவை மாற்றத்தில், நிதித்துறை அமைச்சர் பொறுப்புக்கு நிகரான கருவூல செயலரானார் ரிஷி. நிதியமைச்சருக்கு நிகரான பதவி இது.

போரிஸ் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த ஜாவித் ராஜிநாமா செய்ய, ரிஷிக்கு அதிர்ஷ்டம் தேடி வந்தது. நிதியமைச்சரானார்.

கரோனா ஊரடங்கு காலம் முன்புவரை ரிஷி சுனக் மீது பொதுவெளியில் நேர்மறையான கருத்தே நிலவியது.

இதனால், அடுத்த பிரதமர் ரேஸில் முன்னணியில் இருந்தார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள், சர்ச்சைகள் பிரதமர் பதவிக்கான வாய்ப்பை மழுங்கடித்தன.

கரோனா தொற்றுக்குப் பிறகு மற்ற நாடுகளைப் போலவே பிரிட்டனின் நிலைமையும் தலைகீழாக மாறியது. நிதியமைச்சர் என்ற முறையில் கரோனா தொற்றால் ஏற்பட்ட நிலையை சரிசெய்ய கடந்த நிதிநிலை அறிக்கையில் புதிய வருமான வரி நிலைகளை அமல்படுத்தினார் ரிஷி சுனக்.

கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக, பிரிட்டனில் வசிக்கும் ரிஷி சுனக் மனைவி அக்ஷதா வரி விலக்கு பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

உக்ரைன் மீதான படையெடுப்பைக் கண்டித்து ரஷியாவில் செயல்பட்டு வந்த பிரிட்டன் அரசின் வணிகங்களை நிறுத்தினார் ரிஷி.

அதேநேரம், ரஷ்யாவுடனான அக்ஷதாவின் குடும்ப வணிக தொடர்புகளுக்காக ரிஷி அவதூறுகளை எதிர்கொண்டார். அப்போது இன்ஃபோசிஸூக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், அந்த நிறுவனத்தின் செயல்பாட்டு முடிவுகளில் அக்ஷதாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் விளக்கம் அளித்தார்.

சர்ச்சைகள் தொடரவே, சில நாள்களிலேயே இன்ஃபோசிஸ் தனது ரஷ்ய அலுவலகத்தை அவசர அவசரமாக தற்காலிகமாக மூடியது. அமெரிக்காவின் குடியுரிமையான "கிரீன் கார்டு'-ஐ ரிஷி வைத்திருந்தார் என்ற புதிய புகைச்சலும் கிளம்பியது. இத்தனை எதிர்ப்புகளையும் மீறி இப்போது பிரதமராகியுள்ளார்.

""நான் கடன்பட்டிருக்கும் நாட்டிற்கு சேவை செய்வது வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியம்'' என்று ரிஷி சுனக் தனது பிரதமர் பதவியேற்றபோது, கூறியது உலக அளவில் பெரிய எதிர்பார்ப்பையே ஏற்படுத்திவிட்டது. அவர் பிரிட்டன் பிரதமராகி இருப்பதை, பெங்களூருவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், அதன் ஊழியர்களும் கொண்டாடி வருகின்றனர்.

மன்னரைவிட பணக்காரர்!

தற்போது உள்ள சொத்து மதிப்பு பிரிட்டன் மன்னர் சார்லஸின் சொத்து மதிப்பைவிட அதிகம். ரிஷியும் தனது சொத்து மதிப்பை வெளியிட்டால், உலகமே ஆச்சரியப்படும்.

பிரிட்டனில் இதுவரை 56 பிரதமர்கள் பதவி வகித்து உள்ளனர். இவர்களில் ஒரு சிலர் மட்டுமே ஸ்காட்லாந்து, அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள். இந்த இரு நாடுகளும் பிரிட்டனின் அங்கமாக உள்ளன. அதனால் இவர்களை வேறுபடுத்தி பார்க்க முடியாது.

20 ஆண்டுகளுக்கு முன்பு வரை வேறு நாடுகளை சேர்ந்த வம்சாவளியினர், இங்கிலாந்தில் பிரதமராகும் வாய்ப்பு இல்லாமல் இருந்தது. இதை உடைத்து ரிஷி சுனக் சாதனை படைத்துள்ளார்.

மனைவி அக்ஷதா மூர்த்தியின் சொத்து:

ரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி, இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐ.டி. சேவை நிறுவனமாக விளங்கும் இன்போசிஸ் பங்குகளை வைத்திருப்பதன் மூலம் 2022-ஆம் ஆண்டில் டிவிடெண்ட் தொகையாக மட்டும் சுமார் ரூ.126.61 கோடி அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளார். 3.89 கோடி பங்குகள் செப்டம்பர் மாத இறுதியில் வெளியான தகவல்களின்படி அக்ஷதா மூர்த்தி இன்போசிஸ் நிறுவனத்தின் 3.89 கோடி பங்குகள் அல்லது 0.93 சதவீத பங்குகளை வைத்திருந்துள்ளதாகப் பங்குச் சந்தைகளில் இன்போசிஸ் நிறுவனம் தாக்கல் செய்யப்பட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.