ஞாயிறு கொண்டாட்டம்

அருணாசலக் கவிராயரின் அற்புதம்..!

கம்பர் தனது கம்பராமாயணக் காவியத்தை அரங்கேற்றியது ஸ்ரீரங்கத்தில் ஒரு பங்குனி மாதத்தில்தான்.

எஸ். வெட்கட்ராமன்


கம்பர் தனது கம்பராமாயணக் காவியத்தை அரங்கேற்றியது ஸ்ரீரங்கத்தில் ஒரு பங்குனி மாதத்தில்தான். ரங்கநாதர் கோயிலில் தாயார் சந்நிதிக்குச் செல்லும் வழியில் மேட்டழகிய சிங்கர் சந்நிதி எதிரில்,  அந்த அரங்கேற்ற மண்டபத்தைக் காணலாம். 

ஒரு தனிப் பாடல் மூலம் அரங்கேற்ற நன்னாள் தெளிவாக  அறியப்படுகிறது.
"எண்ணிய சகாத்தமெண்ணூற்றேழன் மேற்சடையன் வாழ்வு
நண்ணிய வெண்ணெய்நல்லூர் தன்னிலே கம்பநாடன்
பண்ணிய விராமகாதை பங்குனியத்த நாளில்
கண்ணிய வரங்கர் முன்னே கவியரங்கேற்றினானே'

(சாலிவாகன சகாப்தம் 807- ஆம் ஆண்டு பங்குனி மாத அஸ்த நட்சத்திரத்தில் நிறைவேற்றம்) 

கம்பர் ராமாயணத்தை அரங்கேற்றிய அதே நாளில், தான் இயற்றிய தமிழ் கீர்த்தனைகள் அடங்கிய நூலை அரங்கேற்ற வேண்டும் என 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு கவி விரும்பினார்.  அவருடைய எண்ணம் ஈடேறிய விதத்தை அறிவோம்: 

"தமிழிசை மும்மூர்த்திகள்' என போற்றப்படுபவர்கள் முத்துத்தாண்டவர்,  அருணாசலக் கவிராயர், மாரிமுத்தாப் பிள்ளை. இந்த மூவருக்கும் தமிழ்நாடு அரசு அமைத்த நினைவு மண்டபம் சீர்காழியில் அமைந்துள்ளது சிறப்பு. 

இதில், அருணாசலக் கவிராயர் சீர்காழிக்கு அருகே தில்லையாடி கிராமத்தில் கார்காத்த வேளாளர் குலத்தில் பிறந்தவர்,  தனது வாழ்நாளில் பெரும் பகுதியை சீர்காழியில் கழித்ததால், பிற்காலத்தில் "சீர்காழி அருணாசலக் கவியராயர்' என்றே அறியப்பட்டார். 

சிறு வயதில் பெற்றோரை இழந்து தமையன் ஆதரவில் வளர்ந்தவர்.  நல்ல குரல் வளத்துடன் இசையில் நாட்டம் உள்ளவராகத் திகழ்ந்தார். அம்பலவாணக் கவிராயரிடம் சைவத் திருமுறைகளையும்,  வடமொழியையும்,  தமிழ்ச் சாத்திரங்களையும் கற்றார். 

அப்போதைய தருமபுர ஆதீனகர்த்தரின் ஆதரவுடன் தன்னுடைய திறமையை வளர்த்துகொண்டார்.  இயல், இசை, நாடகநூல்களை 12 ஆண்டுகள் முழுமையாகக் கற்றுத் தேர்ந்தார்.  எப்போதும் ராம சிந்தனையுடன் இருந்த இவர்,  கம்பராமாயணத்தை  ஆர்வமாகப் படித்தார். 

"சீர்காழி தல புராணம்' உள்பட பல நூல்களை இயற்றியுள்ளார்.  இவரது படைப்புகளில் முக்கியமானது ராமநாடக கீர்த்தனைகள்.

தமிழில் முதன்முதலாக ராமாயணக் கதையை இசை பாடல்களில் நாடக வடிவில் "இசை நாடகமாக'  ஆக்கினார்.  "ஒரு கதையை சுவையாக மக்களுக்குச் சொல்வதற்கு கீர்த்தனைகள் ஏற்றன'  என நிரூபித்தார். 

கம்பர் இயற்றிய ராமாயணத்தைப் பெரிதும் பின்பற்றி இயற்றப்பட்ட ராமநாடகக் கீர்த்தனைகள் இசை ஞானம் இல்லாத பாமரர்களால்கூட விரும்பி கேட்கப்பட்டது.  குறுகிய காலத்தில் இவரது புகழ் பரவலாயிற்று. 

கவிராயர் தனது ராமநாடகக் கீர்த்தனை நூலை அரங்கன் சந்நிதியில் அரங்கேற்ற விருப்பமுற்று,  ஸ்ரீரங்கத்துக்குச் சென்றார். 

பெருமாள் உத்தரவு கொடுத்தால் சம்மதிப்பதாக கோயிலைச் சேர்ந்தவர்கள் கூற,  ஏகாந்தமாக ஓரிடத்தில் அமர்ந்து ஸ்ரீரங்கநாதனைத் தியானித்து,  "ஏன் பள்ளிகொண்டீர் அய்யா' என்று மோகன ராகத்தில் அமைந்த அருமையான கீர்த்தனையை  (தமிழ்ப் பாடல்)  பாடி தனக்கு அருளுமாறு வேண்டுகிறார்.  அதில் கடைசிவரியில்,  "என்னை ரட்சிக்க எழுந்திரும்' என பள்ளிகொண்ட பரந்தாமனை எழுப்புகிறார்.

இந்த வரியை பாடியவுடன் பாடலில் ஈர்க்கப்பட்டு மூலவர் அரங்கனே சற்று தனது தலையைத் தூக்கி எழுந்திருக்கும் பாவனையில் காணப்பட்டான் என்று சொல்லப்படுவது உண்டு. 

அன்றிரவு கவிராயர் கனவில் அரங்கன் ஒரு வைணவப் பெரியவராகத் தோன்றி,  பெருமாளின் பரிசனங்களையும் (பரிவாரத் தேவதைகள்)  பாடி ராமநாடகக் கீர்த்தனையை அரங்கேற்றலாம் என அருளினார். அன்றிரவு கோயிற்துறையார்கள் கனவிலும் தோன்றி தான் சொன்ன நிபந்தனைகளைக் கூறி அனுமதிக்குமாறு மறைந்தருளினார். மறுநாள் கவிராயர் தம் இசை நாடகத்துக்கு "தோடயம்' பாடி அதில் பெருமானின் பரிசனங்களாகிய அனந்த கருட விஷ்வக்úஸனர்,  பஞ்சாயுதங்கள்,  ஆழ்வார்,  ஆசார்யர்கள் ஆகிய அனைவரையும் அமைத்தார்.

கம்பர் இயற்றிய ராமாயணம் அரங்கேற்றப்பட்ட திருமண்டபத்திலேயே பங்குனி அஸ்தமாகிய அதே திருநட்சத்திரத்தில் திருவரங்கத் திருமுற்றத்து அடியார் சபை நடுவே கவிராயரின் ராமநாடகக் கீர்த்தனைகளும் முதன்முதலாக அரங்கேற்றம் பெற்றது.  கோயிலார் கவிராயருக்கு மரியாதைகளும் செய்து பரிசுகளும் அளித்து கெளரவித்தனர். 

இந்த விஷயம் கேட்டறிந்து, தஞ்சை சமஸ்தானாதிபதி துளசி மகாராஜா,  புதுவை துபாஷ்  அனந்தரங்கம் பிள்ளை,  மணலி முத்துக்கிருஷ்ண முதலியார் ஆகியோர் ஆதரவு அளித்ததுடன் ராமநாடகக் கீர்த்தனைகளைப் பிரபலம் அடையச் செய்தனர்.  இன்று அவரது கீர்த்தனைகள் இடம்பெறாத கர்நாடகக் கச்சேரிகளே கிடையாது.

2023-ஆம் ஆண்டு  ஏப். 6-இல் (பங்குனி 23- ஹஸ்தம்)  இந்த  நிகழ்வை நினைவு கொள்வோம்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT