ஞாயிறு கொண்டாட்டம்

தாஜ் மஹால் பாணியில் தாய் மஹால்

ஆக்ராவின் யமுனை நதிக்கரையில் காதலிக்காகக் கட்டப்பட்ட தாஜ் மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாகும்.

பா.லெனின்

ஆக்ராவின் யமுனை நதிக்கரையில் காதலிக்காகக் கட்டப்பட்ட தாஜ் மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாகும்.   ஆனால், தமிழ்நாட்டின் திருவாரூர் அருகே அம்மையப்பன் என்ற ஊரில்,  தாயின் நினைவாக தாஜ் மஹால் வடிவமைப்பில் கட்டடத்தை மகன் கட்டியுள்ளார்.  இந்த நினைவிடம் 'தென்னகத்தின் தாஜ் மஹால்'  என பேசுபொருளாகி உள்ளது.

திருவாரூர் மாவட்டத்துக்கு உள்பட்ட அம்மையப்பன் பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர்  ஜெய்லானி பீவி தம்பதியருக்கு 4 மகள்களும்,  ஒரு மகனும் உள்ளனர்.  சென்னையில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்திவந்த அப்துல்காதர்,  தனது குழந்தைகள் சிறுவயதாக இருக்கும்போதே உயிரிழந்தார்.

அவரது மனைவி ஜெய்லானி பீவி மனம் தளராமல் கடையை நிர்வகித்தது மட்டுமின்றி, தனது குழந்தைகளைப் படிக்க வைத்து, நல்ல நிலைக்கு உயர்த்தினார்.  அவரது மகன் அம்ருதீன் ஷேக் தாவூது  பி.ஏ. படித்துவிட்டு சென்னையில் அரிசி மொத்த விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். 2020 ஆம் ஆண்டு தனது 68 ஆவது வயதில் ஜெய்லானி பீவி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். 

தன்னைப் பற்றி கவலைப்படாமல், சகோதரிகளையும், தன்னையும் உயர்ந்த நிலையில் வாழ வைத்துச் சென்ற ஜெய்லானி பீவி இழப்பை அம்ருதீன் ஷேக் தாவூத்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.   தாய் மீதான அன்பின் அடையாளமாக, சொந்த கிராமமான அம்மையப்பனில் அவருக்கு நினைவு மண்டபம் அமைக்க முடிவு செய்தார்.

ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட்ட பளிங்கு கற்களைக் கொண்டு ரூ.5 கோடி மதிப்பில் நினைவு மண்டபத்தை கட்டியுள்ளார். 

நினைவு மண்டபத்தில் ஜெய்லானி பீவியின் சமாதி,  ஐந்து வேளை தொழுகை நடத்தும் வகையில் மதரஸா அமைக்கப்பட்டுள்ளது. அமாவாசை தினத்தில் ஜெய்லானி பீவி உயிரிழந்ததால், அமாவாசை நாள்களில் பிரியாணி சமைத்து,  ஆயிரம் பேருக்கு அன்னதானமாக வழங்கப்படுகிறது.

இதுகுறித்து அம்ருதீன் ஷேக் தாவூத் கூறியதாவது:

''நான் சிறுவயதாக இருக்கும்போதே, தந்தை இறந்துவிட்டார்.  அப்போது, எனது தாய்க்கு  ஜெய்லானி பீவிக்கு வயது முப்பத்து ஆறு மட்டுமே. அவர் என்னையும், எனது நான்கு சகோதரிகளையும் எந்தவித சிரமமும் தெரியாமல் வளர்த்தார். அவரது இழப்பு எங்களுக்கு ஈடு செய்ய முடியாத ஒன்று.
அவரது இருப்பு நீடித்த ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக குடும்பத்தினரின் சம்மதத்துடன், அம்மையப்பனில் உள்ள ஒரு ஏக்கரில் நினைவிடம் கட்ட முடிவெடுத்தோம். அதன்படி ரூ.5 கோடி மதிப்பில் 8 ஆயிரம் சதுர அடியில் மசூதி, மதரஸாவும் (மத போதனைக்கான பள்ளி), 8 ஆயிரம் சதுரடியில் தாயின் நினைவிடமும், தண்ணீர் தொட்டிகளும் கட்டப்பட்டுள்ளன. நினைவிட கட்டுமானப் பணிகள் இரண்டு ஆண்டுகள் நடைபெற்று முடிவுற்று, கடந்த ஜூன் 2இல் திறக்கப்பட்டது.
நினைவிடம் முகலாய கட்டடக் கலையில் கட்ட விரும்பி பணிகளைத் தொடங்கினோம். திருச்சியைச் சேர்ந்த வடிவமைப்பாளரிடம் ஆலோசனை நடத்தியபோது, நாங்கள் கூறிய யோசனை தாஜ் மஹால் வடிவமைப்பு போன்று உள்ளதாகத் தெரிவித்தார். உடனடியாகப் பணிகளைத் தொடங்கினோம்.
நினைவிடம் தாஜ் மஹால் வடிவமைப்பில் இருக்கும் என்பதால்,  80 டன் வெள்ளை நிற பளிங்குக் கற்கள் ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட்டன. கட்டுமானப் பணியில் வட இந்திய,  உள்ளூர் தொழிலாளர்கள் இணைந்து ஈடுபட்டு கட்டடத்தை கட்டி முடித்தனர். 
ஒரு தாயின் பாசத்துக்குச் செலுத்தும் மரியாதைதான் இந்த நினைவிடம். பெற்றோரைப் போற்றுவதற்கு மற்றவர்களை ஊக்குவிக்கும் விதமாக இது அமையும்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரெப்கோ வங்கியில் மார்க்கெட்டிங் அசோசியேட் பணிகள்

தொழிற்பயிற்சி மையத்தில் அக்கவுண்ட் ஆபீசர் பணி

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

SCROLL FOR NEXT