"ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது லட்சியம். திருமணம் பிறகுதான்'' என்கிறார் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களை வென்ற இளம்பெண் வித்யா.
"இரட்டையர்கள்' எந்த விளையாட்டுப் போட்டியிலும் பங்கு பெறுவது அரிது. ஆனால், கோவை அருகிலுள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த வித்யா, நித்யா ஆகிய இருவரும் ஹாங்சோவில் அண்மையில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர்.
வித்யா 400 மீட்டர் தடை தாண்டுதலில் 55.42 விநாடிகளில் தூரத்தைக் கடந்து இலக்கை அடைந்தார். பி.டி.உஷா செய்த சாதனையை 39 ஆண்டு காலமாக யாரும் முறியடிக்காத நிலையில், வித்யா சமன் செய்துள்ளார். தவிர போட்டியில் மூன்றாவதாக வந்து, வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார். 400 மீ. தொடர் ஓட்டத்தில் ஆண் பெண் குழுவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. அந்த குழுவில் வித்யாவும் ஒரு அங்கம். இதன்படி, ஆசிய போட்டிகளில் இரண்டு பதக்கங்களைப் பெற்றுள்ளார். இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வித்யா 55.43 விநாடிகளில் 400 மீ பந்தய தூரத்தை கடந்திருந்தார்.
ஆசியப் போட்டியில் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் நித்யா நான்காவதாக வெற்றி பெற்றிருந்தார்.
தனது வெற்றி குறித்து வித்யா கூறியதாவது:
""என் அப்பா ராம்ராஜ் வேன் டிரைவர். அம்மா மீனா குடும்பத் தலைவி. மூத்த சகோதரி சத்யாவுக்குத் திருமணமாகிவிட்டது. நானும் நித்யாவும் இரட்டையர்கள். மூவரும் பெண்கள்.
எங்களுக்கு சிறுவயதில் விளையாட்டில் ஆர்வம் இருந்ததைக் கவனித்த அம்மா எங்களை அரசு விளையாட்டுப் பள்ளியில் சேர்த்துவிட்டார். போட்டிகளில் வெற்றி பெற்று பெற்றோர்களை சந்தோஷப்படுத்தினோம்.
கல்லூரியில் பி.பி.ஏ. ஒன்றாகச் சேர்ந்து படித்தோம்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையில் தேசிய அளவில் ஓட்டப் போட்டியில் பாதி தூரம் ஓடிய நிலையில் நான் அணிந்திருந்த காலணி கிழிந்து பாதங்களைக் கீறியது. ரத்தம் சொட்ட சொட்ட ஓடி
முதலாவதாக வந்தேன். கல்லூரியில் படிக்கும்போது, தேசிய அளவில் வெற்றி பெற்றதால் எனக்கு ரயில்வேயில் எழுத்தர் வேலை கிடைத்தது. நித்யாவுக்கு வருமான வரித் துறையிலும் ஆரம்ப நிலை வேலை கிடைத்தது.
இருவருக்கும் அரசு வேலை கிடைத்ததால் வறுமையிலிருந்து வெளியே வந்தோம்.
நாங்கள் இரட்டையர் என்பதால் கண்டுபிடிக்க சிரமப்படுவார்கள். நான் காது
களில் தோடு அணிவேன். நித்யாவுக்கு நெற்றியில் சின்ன தழும்பு உண்டு. அதை வைத்து அடையாளம் கண்டு கொள்ளுங்கள் என்போம்.
நித்யா வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்டாலும், கடுமையான பயிற்சிகளால் ஒலிம்பிக்கில் பங்கு பெறுவார் என நம்புகிறேன்.
எங்களுக்கு 25 வயது ஆகிறது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது லட்சியம். திருமணம் பிறகுதான்'' என்கிறார் வித்யா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.