ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்றதால் கோடிக்கணக்கான அகதிகளுக்கு விழிப்புணர்வு கிட்டியுள்ளது'' என்கிறார் பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் குத்துச் சண்டையில் வெண்கலம் வென்று சாதனையை படைத்துள்ள அகதிகள் அணி வீராங்கனை சின்டி நகாம்பா.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 2024 ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றன. உலகம் முழுவதும் இருந்து 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர்.
அகதிகள் அணி: பல்வேறு நாட்டு அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், வெவ்வேறு நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ள 100 மில்லியன் மக்களுக்காக என தனியாக "அகதிகள் அணி' அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 37 பேர் கொண்ட அணியை 15 நாடுகளின் ஒலிம்பிக் கமிட்டிகள் ஆதரித்து வருகின்றன.
12 விளையாட்டுகளில் இந்த அணி தங்கள் திறமையை பறைசாற்றி வருகிறது. அணியின் உறுப்பினர்களை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் செயற்குழு தேர்வு செய்கிறது. விளையாட்டில் சிறந்து விளங்கும் நிலையில், ஐ.நா. அகதிகள் அமைப்பு, மனித உரிமைகள் அமைப்பு அங்கீகாரம்பெற்றிருக்க வேண்டும்.
முதல் பதக்கம் வென்ற சின்டி நகாம்பா:
அகதிகள் அணியில் இடம் பெற்ற கேமரூன் நாட்டைச் சேர்ந்த சின்டி நகாம்பா மகளிர் 75 கிலோ பிரிவு குத்துச்சண்டையில் அரையிறுதியில் பிரெஞ்சு வீராங்கனை டேவினா மைக்கேலை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வசப்படுத்தினார். இதன் மூலம் ஒலிம்பிக்ஸ்ஸில் பதக்கம் வென்ற அகதி அணியின் முதல் வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார்.
கேமரூனைச் சேர்ந்த நகாம்பா, இங்கிலாந்தில் அகதியாகத் தஞ்சம் புகுந்தார். 11ஆம் வயதில் அகதியாகச் சென்ற நகாம்பா தொடக்கத்தில் கால்பந்தில்தான் ஆர்வம் செலுத்தினார். பின்னர் உள்ளூர் கிளப் உதவியுடன் குத்துச்சண்டைக்கு மாறினார். இடையில் இங்கிலாந்தில் வசிப்பதற்கான அனுமதியும் கிடைத்தது. 2023 ஐரோப்பிய போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டு ஒலிம்பிக் தகுதியும் பெற்றார். பாரீஸ் ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் அணிவகுப்புக்குத் தலைமை தாங்கி வழிநடத்தும் பெருமையும் நகாம்பாவுக்கு கிட்டியது.
இந்த நிலையில், குத்துச்சண்டையில் ஆர்வத்துடன் பங்கேற்ற சின்டி நகாம்பா அரையிறுதியில் வென்று வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார்.
தங்கப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் பனாமாவின் அதேய்னா பைலானுடன் மோதவுள்ளார். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டி வரலாற்றிலேயே பதக்கம் வென்ற முதல் அகதி வீராங்கனை என்ற சாதனையையும் நகாம்பா படைத்துள்ளார்.
இதுதொடர்பாக சின்டி நகாம்பா கூறியதாவது:
""ஒலிம்பிக் அகதிகள் அணியில் இடம் பெற்றது பெரிய விஷயம்தான். இங்கிலாந்தில் அகதி அந்தஸ்து கிடைக்காது என்ற அச்சத்தில் தவித்தேன். கேமரூனுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் எனது நிலை மோசமாகி இருக்கும். ஆனால் அகதியாக வாழ அனுமதியும், ஒலிம்பிக் அகதிகள் அணியிலும் இடமும் கிடைத்தது. குத்துச்சண்டையில் பதக்கம் வென்றதின் மூலம் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான அகதிகளுக்கு ஒரு விழிப்புணர்வு கிட்டியுள்ளது. குத்துச்சண்டை, ஒரு பெண், கறுப்பினம், ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவள், அகதி உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் ஒன்று சேர்ந்துள்ளது'' என்கிறார் நகாம்பா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.