துபையில் அன்னமாச்சார்யாவுக்கு திருவிழா
ஞாயிறு கொண்டாட்டம்துபையில் அன்னமாச்சார்யாவுக்கு திருவிழா
துபைக்கு அண்மைக்குச் சென்று வந்த மூத்த வயலின் கலைஞர் கன்யாகுமரி தனிக் கச்சேரிகளை நடத்தி ரசிகர்களை மகிழ்வித்ததுடன், "குருவந்தனம்' எனும் நிகழ்ச்சியில் சுமார் 400 பேருக்கு அன்னமாச்சார்யாவின் கீர்த்தனைகளில் பயிற்சி அளித்தார். அதோடு, பத்துக்கும் மேற்பட்ட வயலின் கலைஞர்களுடன் இணைந்து "வயலின் சங்கமம்' என்ற நிகழ்ச்சியையும் நடத்தினர். இந்த அனுபவம் குறித்து அவரிடம் பேசியபோது:
""ஆந்திர மாநிலத்துக்கு உள்பட்ட கடப்பா மாவட்டத்தில் தாள்ளபாக்கம் என்ற ஊரில், 15-ஆம் நூற்றாண்டில் பிறந்த அன்னமாச்சார்யா, திருமலை ஏழுமலையான் கோயிலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். அவர் கர்நாடக இசையில் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை இயற்றியவர். அவற்றில் 12 ஆயிரம் கீர்த்தனைகள் மட்டுமே கிடைத்திருக்கின்றன. அவரது கீர்த்தனைகள் மிக ஆழமான பக்திக் கருத்துகளை உள்ளடக்கியவை.
அந்தக் காலத்திலேயே, ,தன்னுடைய "ப்ரம்மம் ஒக்கடே' என்ற புகழ் பெற்ற கீர்த்தனையின் மூலமாக ஜாதிய வேறுபாடுகளைக் கடந்து "அனைவரும் சமம்' என போதித்தவர். இவர், "வெங்கடாசலபதி மகிமை' என்ற நூலையும் எழுதி இருக்கிறார்.
ஏழுமலையான் கோயில் சார்பில், அன்னாமாச்சார்யாவின் கீர்த்தனைகளைத் தொகுத்து, வெளியிடும் அன்னமாச்சார்யா திட்டக் குழுவில் நானும் ஓர் உறுப்பினர். துபையில் "டீம் மோகனா' என்ற பெயரில் இசை, பாரம்பரியம், கலாசாரம் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட தன்னார்வலர்கள் "குரு வந்தனம்' என்ற நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்துகின்றனர். பாபநாசம் சிவன், முத்துஸ்வாமி தீட்சதர், சுவாதித் திருநாள் என்று ஒவ்வொருவராக எடுத்துகொண்டு, இளைய தலைமுறையினருக்கு அவர்களைப் பற்றி ஆழமாகத் தெரிந்துகொள்ளும் வகையில் அறிமுகப்படுத்தி, அவர்கள் கீர்த்தனைகளைப் பாடுவதற்குப் பயிற்சியை அளிக்கின்றனர்.
இவர்களிடம் அன்னமாச்சார்யாவின் கீர்த்தனைகளைக் கொண்டு ஒரு குருவந்தனம் நிகழ்ச்சியை நடத்தும்படி ஆலோசனை கூறினேன். அதற்கு உடனடியாக சம்மதம் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே பணிகளை நான் துவக்கிவிட்டேன். அவரது கீர்த்தனைகளில் இருந்து பத்து முத்தான கீர்த்தனைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் நொடேஷன்கள், ஒலிப்பதிவுகளை துபைக்கு அனுப்பி வைத்தேன்.
கொத்தமங்கலம் விசுவநாதனின் மருமகளான ராதிகா ஆனந்த், டீம் மோகனாவின் மற்ற உறுப்பினர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். அங்கே இருக்கும் இசை ஆசிரியர் விசாலாட்சி சங்கரனும் கீர்த்தனைகளைப் பாடிப் பழகி, அவற்றை ஒலிப்பதிவு செய்து எனக்கு அனுப்பி வைக்க, நான் அவற்றில் ஒரு சில நுட்பமான திருத்தங்களைச் சுட்டிக் காட்டினேன். கீர்த்தனைகளைத் திருத்தமாகக் கற்ற அவர், துபை, இதர அரபு நாடுகளில் வசிக்கும் சுமார் 45 இசை ஆசிரியர்களுக்கும் அதனை அனுப்பி வைத்தார். அவர்கள் அந்தக் கீர்த்தனைகளைக் கற்றுகொண்டு, தங்களிடம் இசை பயிலும் மாணவ, மாணவியருக்குக் கற்றுக் கொடுத்தார்கள். நானும் அவ்வப்போது இது பற்றித் தேவையான ஆலோசனைகளை வழங்கினேன்.
இதற்கிடையில் துபை, அதன் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் பத்துக்கும் மேற்பட்ட வயலின் கலைஞர்கள் ஒருங்கிணைந்து "வயலின் சங்கமம்' என்று நிகழ்ச்சிக்கு இணைய வழியில் பயிற்சி அளித்தேன். மே 22-இல் நான் துபைக்குச் சென்றேன். அதற்கு முன்னதாக, எனது சீடர்களான பாவனி ஸ்ரீகாந்த், சிவதேஜா உள்ளிட்டோர் அங்கு சென்று பயிற்சி, ஒத்திகைகளை கவனித்தனர்.
அங்கே பிரபலமான ஷேக் ரஷீத் அரங்கத்தில் நடைபெற்ற குரு வந்தனம் நிகழ்ச்சியில், சுமார் 1,500 ரசிகர்கள் பங்கேற்றனர். சிறுவர்கள் முதல் முதியோர் மட்டுமின்றி, முஸ்லிம் இளைஞர் ஒருவரும் கீர்த்தனைகளைப் பாடி குருவந்தனம் செய்தது என்னை மிகுந்த வியப்பில் ஆழ்த்தியது. பலரும் "வயலின் சங்கமம்' இசையில் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
துபையில் நிகழ்ச்சியை நடத்திய "டீம் மோகனா', அதை சென்னையிலும் மீண்டும் மேடை ஏற்றுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சுமார் நூறு பேர் பங்கேற்க சென்னை நாரத கான சபாவில் அன்னமாச்சார்யாவுக்கு குருவந்தனம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது'' என்கிறார் கன்யாகுமரி.
எஸ்.சந்திரமௌலி