ஞாயிறு கொண்டாட்டம்

பிரதமர் சாஸ்திரி போட்ட உத்தரவு

முதலமைச்சரின் அதிரடி உத்தரவும் அதிகாரியின் நேர்மையும்

DIN

டாக்டர் பி.சி.ராய் மே. வங்கத்தின் முதலமைச்சராக இருந்தபோது, நான் மேற்கு வங்கத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். நான் ஐ.ஏ.எஸ்-ஸில் சேர்ந்து ஆறாண்டுகள்கூட முடியவில்லை. பி.சி.ராய்க்கு என் தாத்தா வயது. அவர் உலகப் புகழ்பெற்ற மருத்துவர். அப்போதிருந்த முதல்வர்களில் மிகத் திறமைசாலி அவர்.ஒரு நாள், முதலமைச்சர் என்னைக் கூப்பிட்டு அனுப்பி, ஒரு முக்கியமான விஷயத்தில், தான் ஏற்கெனவே யோசித்து வைத்திருந்த முடிவைத் தெரிவித்து, அதன்படிச் செய்ய உத்தரவிட்டார்.

அப்போதுதான் முதல்முறையாக நான் அவரையே நேரில் சந்திக்கிறேன். அதற்குமுன் அவர் என்னைப் பார்த்ததுகூட இல்லை.

யானை முன் சுண்டெலி நிற்பது போன்ற அந்த நிலையிலும் எனக்கு அவர் முடிவு சரியாகப்படவில்லை. சட்ட ரீதியாகவும் சில சிக்கல்கள் இருப்பதாகத் தோன்றியது. முதலமைச்சர்தான் சொல்லவேண்டியதைச் சொல்லியாயிற்று, அதிகாரி போய்விடுவார்; என்று நினைத்தாரோ என்னமோ, மேசையிலிருந்த கோப்புகளில் ஆழ்ந்துவிட்டார். சிறிது நேரம் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றுகொண்டிருந் தேன். லேசாகக் கனைத்தேன். சட்டென்று நிமிர்ந்து பார்த்தார். 'என்ன இன்னுமா இங்கே நின்று கொண்டிருக்கிறாய்'' என்றார்.

நான் அவருடைய முடிவுக்கு எதிரான வாதங்களை ஒரே மூச்சில் கொட்டினேன். அவர் ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார். நான் பேசி முடித்ததும், 'ரொம்பவும்தான் விஷயம் தெரிந்து வைத்திருக்கிறாய் போலிருக்கிறதே ? போ, போ, அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்'' என்று சிரித்துக்கொண்டே சொன்னார். அந்த முடிவைக் கைவிட்டுவிட்டார் என்று பிறகு தெரிந்துகொண்டேன். இந்தக் காலத்து அரசியலில் இதெல்லாம் சாத்தியமா?

நேர்மையாகச் செயலாற்றும் அதிகாரிகளை ஜோதிபாசுவுக்கு மிகவும் பிடிக்கும். அவர்கள் சொல்லும் கருத்துகளை ஏற்புடையதில்லை என்றாலும், பெருந்தன்மையுடன், பொறுமையாகக் கேட்பார். 1970-இல் அஜய் முகர்ஜியின் அரசு கவிழ்ந்து, மேற்கு வங்கத்தில் பொதுத் தேர்தலுக்கு ஆணையிடப்பட்டிருந்த நேரம். நான் மாநிலத்தின் முக்கியத் தேர்தல் அதிகாரியாக இருந்தேன்.

தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் ஜோதிபாசு, அரசு அதிகாரிகளையும் ஊழியர்களையும் காவல்துறையினரையும் பயமுறுத்தும் விதமாகப் பேசினார் என்று பத்திரிகைகளில் செய்திகள் வெளியாயின.

'அச்செய்திகள் உண்மையானால், உங்கள் பேரில் சட்டப்படி ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது?' என்று விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பினேன். அற்பமான அரசியல்வாதிகளாக இருந்தால் ஆணவத்தில் கொதித்து எழுந்திருப்பார்கள். ஜோதி பாசுவோ எனது நோட்டீசுக்கு, தன் தரப்பின் விரிவான பதிலை அனுப்பிவைத்தார். என் அலுவலகத்துக்கே நேரில் வந்து விளக்கமும் அளித்துவிட்டுப் போனார்.

பிரதமர் நேரு தேசிய ஒருமைப்பாட்டுக் கமிட்டியை அமைத்தபோது, அதன் தலைவராக திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவானாக இருந்த சர். சி.பி.ராமசாமி ஐயரை நியமித்தார். 1962 செப்டம்பரில் சென்னையில் அந்தக் கமிட்டியின் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, ஒருநாள் ராமஸ்வாமி ஐயர் என்னை அவருடைய வீட்டுக்குக் கூப்பிட்டு அனுப்பினார். 'ராகவன், எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது.

நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றங்களுக்கும் வேட்பாளர்களாக நிற்க விரும்புகிறவர்களும் தேர்தலில் வெற்றி பெற்றவர்களும் நாட்டின் ஒற்றுமையையும், இறையாண்மையையும் பாதுகாப்பேன் என்று பிரமாணம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதைக் கட்டாயமாக்கினால் என்ன? இதை அரசியல் சட்டத்தில் திருத்தமாகக் கொண்டுவர வேண்டும் என்று பரிந்துரைத்தால் என்ன?'' என்று கேட்டார். எந்தக் கோணத்தில் பார்த்தாலும் இது ஒரு பிரமிக்கத்தக்க அரசியல் மருந்தாகத் தோன்றியது.

இப்பரிந்துரை சட்டமாகிவிட்டால் பிரிவினைவாதிகள் தேர்தலில் வேட்பாளர்களாக நிற்கமுடியாது. தேர்தலில் நிற்கவில்லை என்றால் மக்கள் பிரதிநிதிகளாக ஆகமுடியாது. நாட்டின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் மதிக்காத கட்சிகள் உருக்குலைந்து போய்விடும். அவரது கருத்தை 'பிரமாதம்!' என்ற ஒரே சொல்லால் பாராட்டினேன்.

உடனே அதை அறிக்கையைத் தயாரித்துக் கோண்டு வரும்படி என்னிடம் கூறினார். நான் தயாரித்துக் கொடுத்த அறிக்கையை, நேருவிடம் காட்டி உடனடியாக சம்மதம் பெற்றார். அப்போது சீனப் படையெடுப்பு காரணமாக நாடெங்கும் தேச பக்தி கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்த சூழ்நிலையில் அதனை எல்லா கட்சிகளும் ஏற்றுக் கொண்டன.

நேரு மறைந்து சாஸ்திரி பிரதம மந்திரியாக இருந்தார். எல்லையில் வாலாட்டும் பாகிஸ்தானுக்கு எப்படி பதிலடி கொடுப்பது என்பதை ஆலோசித்து முடிவெடுக்க ஒரு கூட்டத்தைக் கூட்டினார்.

நானும் குறிப்பு எடுத்துக்கொள்ள அந்தக் கூட்டத்தில் உட்கார்ந்திருந்தேன். சாஸ்திரி தரைப்படைத்தலைவர் ஜெனரல் ஜே.என். செளத்ரியிடம் பாகிஸ்தான்மேல் போர் தொடுத்தால் விளையும் சாதக பாதகங்களை சொல்லச் சொன்னார்.

ஜெனரல் செளத்ரி தளபதிகளுக்கே உரிய பாணியில்,துருப்புகள், தளவாடங்கள், ரவைகள், குண்டுகள், கப்பல்கள், விமானங்கள், வாகனங்கள் என்று போருக்குத் தேவைப்படுகிற அத்தனை பொருள்களையும் மூச்சுவிடாமல் அடுக்கினார். 'ஐயா, எதிரியுடன் போர் தொடுக்க இவையெல்லாம் எதிரியிடம் இருப்பதைவிட மூன்று மடங்கு நம்மிடம் இருக்கவேண்டும். அதற்கு வேண்டிய முயற்சிகளை எடுத்தபின்னர்தான் போர் தொடுப்பது சாத்தியமாகும்'' என்றார்.

அவர் பேசிமுடிக்கும்வரை சாஸ்திரி கைகளை மேசையின் விளிம்பில் மடக்கி வைத்துக்கொண்டு, குறுக்கிடாமல், குனிந்து கண்ணை மூடிக்கொண்டு கேட்டுக் கொண்டிருந்தார். செளத்ரி பேசி முடித்ததும், சாஸ்திரி மெதுவாகத் தலையைத் தூக்கி அவரைக் கண் இமைக்காமல் உற்றுப் பார்த்தார். 'ஜெனரல் ஸாஹப், எல்லாத் தேவைகளும் கணக்குத் தவறாமல் பாடப் புத்தகத்தில் இருப்பதுபோல இருந்துவிட்டால், நான்கூட போர்க்களத்தில் குதித்து வெற்றிபெற்று விடுவேனே? அப்புறம், ஜெனரல் என்பவர் எதற்கு? தலைமை என்பதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடுமே?'' என்றார். 'செளத்ரி ஒடுங்கிப்போய், இப்போதே தயார், ஐயா! உத்தரவிடுங்கள்!'' என்று சொன்னார்.

சாஸ்திரியின் உந்துதலினால்,இந்தியாவின் முப்படைகளும் 1965-ஆம் ஆண்டு ஆகஸ்டு 9-இல் ஆரம்பித்து செப்டம்பர் 23 வரை போர் நடத்தின. அந்தப் போரில் அற்புதங்களை நிகழ்த்தின.

(அண்மையில் மறைந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.எஸ்.ராகவன் எழுதி, கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட 'நேரு முதல் நேற்று வரை' என்ற நூலில் இருந்து)

-எம். பாரதி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

SCROLL FOR NEXT