ஞாயிறு கொண்டாட்டம்

மூன்று கட்டங்களாகத் திட்டமிடப்பட்டுள்ள விழிஞ்ஞம் துறை

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகம், இந்தியாவின் கடல்சார் லட்சியங்களுக்கு ஒரு சான்றாகத் திகழ்கிறது.

இரா. சுந்தரபாண்டியன்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகம், இந்தியாவின் கடல்சார் லட்சியங்களுக்கு ஒரு சான்றாகத் திகழ்கிறது. திட்டச் செலவில் ரூ. 5,370.86 கோடியை கேரள அரசும், ரூ.2,497 கோடியை அதானி குழுமமும் ஏற்கிறது.

மத்திய அரசின் பங்களிப்பு ரூ.818 கோடி. பொது-தனியார் ஒப்பந்த அடிப்படையில் விழிஞ்ஞம் சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுகத்தைக் கட்டமைத்துள்ளன.

தனியார் ஒப்பந்ததாரராக அதானி குழுமம் 40 ஆண்டுகள் செயல்படும். மேற்கொண்டு 20 ஆண்டுகள் ஒப்பந்தம் நீட்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது. அதானி குழுமம் மேலும் ரூ.20,000 கோடியை முதலீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முகத்தின் கட்டுமானப் பணிகள் 2015-இல் தொடங்கின. முதல்கட்ட பணிகள் முடிவுற்ற நிலையில் 2025 மே 3-இல் பிரதமர் நரேந்திர மோடியால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

இந்தியாவில் 7,517 கி.மீ. நீளமுள்ள கடற்கரை, ஒன்பது கடலோர மாநிலங்கள், 1,382 தீவுகள் உள்ளன. நாட்டின் வர்த்தகத்தில் 95% கடல்சார் போக்குவரத்தில் நடைபெறுகிறது. 14 பெரிய துறைமுகங்கள், 217 சிறிய துறைமுகங்கள் உள்ளன.

நீர்வழிப் போக்குவரத்தில் இத்தனை சாதகமான அம்சங்கள் இருந்தாலும், "டிரான்ஷிப்' எனப்படும் ஒரு கப்பலில் இருந்து இன்னொரு கப்பலுக்குச் சரக்குப் பெட்டகங்களை மாற்றும் தொழில்நுட்பத்தில், சுமார் 75% "டிரான்ஷிப்' கொழும்பு, சிங்கப்பூர், துபை போன்ற வெளிநாட்டு துறைமுகங்கள் வழியாகக் கையாளப்படுகிறது.

இதனால் நேரம் விரயமாவதோடு, இந்திய ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் ஒரு கன்டெய்னருக்கு நாள்தோறும் சுமார் ரூ.7,000 முதல் ரூ.9,000 வரை கூடுதல் செலவை எதிர்கொள்கின்றனர். ஆண்டுக்கு சுமார் ரூ.1,900 கோடி அளவிலான வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

இந்தியாவின் முதல் மெகா டிரான்ஷிப்மென்ட் கொள்கலன் முனையமான விழிஞ்ஞம் துறைமுகம் கட்டமைக்கப்பட்டதன் மூலம் வீணாகக் கடலில் கரைந்து கொண்டிருந்த கோடிக்கணக்கான ரூபாய் வருமானமாகவும் சேமிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கப்பல் போக்குவரத்துப் பாதையில் இருந்து வெறும் 10 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ளதும், துறைமுகத்துக்கு வெளியே இயற்கையாகவே 20 மீட்டர் வரை ஆழம் கொண்ட கடல்பரப்பும் விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு இயற்கை அளித்த கொடையாகும்.

இத்துறைமுகத்தில் 2,980 மீட்டர் நீளத்தில் "பிரேக்வாட்டர்' அமைப்பு உள்ளது. இது 18 முதல் 20 மீட்டர் ஆழத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை கட்டப்பட்ட "பிரேக்வாட்டர்' அமைப்புகளிலேயே இதுதான் மிகவும் ஆழமானதாகும். இவை வலுவான அலைகள், புயல்களில் இருந்து துறைமுகத்தைப் பாதுகாக்கிறது.

24,346 கன்டெய்னர் திறன்கொண்ட உலகின் மிகப் பெரிய கப்பலான எம்.எஸ்.சி. இரினாவையும் விழிஞ்ஞம் துறைமுகம் அண்மையில் கையாண்டு சாதனை படைத்தது.

ஐ.ஐ.டி., சென்னையுடன் இணைந்து உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 8 அரை தானியங்கி கப்பல்-ஷோர் கிரேன்கள், 24 முழு தானியங்கி யார்டு கிரேன்கள், வி.டி.எம்.எஸ். எனப்படும் அதி நவீன தொழில்நுட்பம் ஆகியன பயன்படுத்தப்படுகின்றன. இதனால் இரண்டே இரண்டு நிமிடத்துக்குள்ளாக ஒரு சரக்குப் பெட்டகத்தை ஏற்றி/இறக்க முடியும்.

விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு கடந்த ஆண்டு ஐ.எஸ்.பி.எஸ். தரச்சான்று வழங்கி ஐ.எம்.ஓ. கௌரவித்தது. இது வரலாற்றுச் சாதனை என்று மத்திய துறைமுகம் கப்பல், நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்திருந்தது.

சேலம் - கன்னியாகுமரியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை என்.ஹெச். 47 இந்தத் துறைமுகத்திலிருந்து வெறும் 2 கி.மீ. தூரத்திலும், ரயில் பாதை 12 கி.மீ. தூரத்திலும், திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் வெறும் 15 கி.மீ. தூரத்திலும் உள்ளது.

உலகின் மிகப் பெரிய கப்பல் நிறுவனமான எம்.எஸ்.சி. ஜேட் சேவையில் விழிஞ்ஞம் துறைமுகம் சேர்க்கப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கான நேரடி ஏற்றுமதி, இறக்குமதிகளை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாது, உள்ளூர் பொருளாதாரத்தையும் ஊக்குவிக்கும்.

பொறியியல் அதிசயம்: 2025 ஜூன் 6-இல் ஜம்மு காஷ்மீரில் கட்டமைக்கப்பட்ட செனாப் ரயில்வே பாலம் தரை மீது அமைந்துள்ள பொறியியல் அதிசயமாகக் கருதப்படுகிறது என்றால், தெற்கு முனையான கேரளத்தின் விழிஞ்ஞத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆழ்கடல் கொள்கலன் போக்குவரத்து துறைமுகம் கடல் மீது அமைந்துள்ள பொறியியல் அதிசயமாகும்.

கப்பல்களின் தேசம்:

கேரளத்தின் இயற்கை அழகு இணையற்றது என்பதால் "கடவுளின் தேசம்' என்றழைக்கப்படுகிறது. அதிநவீன தொழில்நுட்பத்துடன் செயல்படும் அதானி குழுமத்தின் விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகம், உலகளாவிய அளவில் ஆயிரக்கணக்கான சரக்குக் கப்பல்களை தன்வசப்படுத்தும் என்பதால் கேரளம் இனி "கப்பல்களின் தேசம்' என்றும் அழைக்கப்பட்டாலும் அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

கிரேன் ஆபரேட்டர்களாக பெண்கள்

விழிஞ்ஞம் துறைமுகத்தில் பணியாற்றும் கிரேன் ஆபரேட்டர்கள் 20 பேரில் 9 பேர் மீனவப் பெண்கள். இவர்களுக்கு முறையாகப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

உயர்தொழில்நுட்பம் கொண்ட சி.ஆர்.எம்,ஜி. கிரேன்கள் மூலம் முனையத்தில் இருந்து ஐ.டி.வி.க்கும் (இன்டெர்னல் டிரான்ஸ்போர்ட் வெஹிக்கிள்), ஐ.டி,வி.யிலிருந்து முனையத்துக்கும் சரக்குப்பெட்டகங்களைப் பாதுகாப்பாக ஏற்றுவதும் இறக்குவதும் இவர்களது முதன்மையான பணியாகும்.

கிரேன் உபகரணங்களின் செயல்பாட்டைக் கண்காணித்து பராமரிக்கவும், சரியான நேரத்தில் பணிகள் முடிக்கப்படுவதை உறுதி செய்வதும் இவர்களது பணியாகும். சுழற்சி முறையில் பணிபுரிவதால் ஞாயிற்றுக்கிழமை துறைமுகம் செயல்பாட்டில் இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜமௌலி படத்தின் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன்!

"கடக ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

வரதட்சிணை கொலை: தப்பியோட முயன்ற கணவரை சுட்டுப் பிடித்த காவல் துறை!

ஹைதராபாத்தில் மனைவியைக் கொன்று உடலைத் துண்டாக்கி ஆற்றில் வீசிய கணவர்!

அதிவேகமாக சதமடித்த கேமரூன் கிரீன்..! மேக்ஸ்வெல் முதலிடம்!

SCROLL FOR NEXT