ஞாயிறு கொண்டாட்டம்

தமிழ்நாடு போற்றிய இசைக்கலை

இசை என்பது மனித வாழ்க்கையுடன் ஒன்றிவிட்ட கலை.

கி.ஸ்ரீதரன்

இசை என்பது மனித வாழ்க்கையுடன் ஒன்றிவிட்ட கலை. அதனால் இறைவனையே இசை வடிவாகத் தமிழ் மக்கள் போற்றி வழிபட்டனர். 'ஏழிசையாய்', 'இசைப்பயனாய்', 'இசை ஏழுகந்தார்', 'பாட்டகத்து இசையாகி நின்றானை', 'பண்ணின் இசையாக நின்றாய் போற்றி' என்று இறைவனைப் போற்றினார்கள்.

கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, படிமக்கலை, நடனக்கலை, இசைக்கலை போன்ற நுண்கலைகள் உருவாவதற்கு திருக்கோயில்கள் பெரிதும் உதவியுள்ளன. தெய்வ வழிபாட்டின் அங்கமாகவே இசையும், வாத்தியங்களும் விளங்கின. 16 பிரிவுகள் கொண்ட ஷோடச உபசாரத்தில் 14-வது அங்கமாக இசையும், இசைக் கருவிகளும் குறிப்பிடப்படுகின்றன.

கோயில்களில் பலவித இசைக்கருவிகள் வாசிக்க தானம் அளிக்கப்பட்ட செய்திகளைக் கல்வெட்டுகளின் வழியே அறிந்து கொள்கிறோம். கோயில்களில் இசைக் கருவிகளை வாசிப்பவர்களை 'உவச்சர்கள்' எனக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இசைக் கருவிகளை வாசிக்கும் தெய்வீகப் பணிக்காக அவர்களுக்கு நிலங்களும் அளிக்கப்பட்டன. இவ்வாறு அளிக்கப்பட்ட நிலம் 'உவச்சக்காணி', 'உவச்சப்புறம்', 'உவச்ச விருத்தி' என்றெல்லாம் குறிப்பிடப்படுகின்றன.

தமிழ்நாட்டுக் கோயில்களுக்கு ஒரு தனிச்சிறப்பு உள்ளது. ஆழ்வார்களும் நாயன்மார்களும் தலங்கள்தோறும் சென்று பாசுரங்களையும் திருப்பதிகங்களையும் பாடியுள்ளனர். இசையை தெய்வீக இசையாக மாற்றினார்கள்.

நாயன்மார்கள் பாடிய திருப்பதிகங்களில் பல இசைக் கருவிகள் குறிப்பிடப்படுகின்றன. பூத கணங்கள் இசைக் கருவிகளை இசைக்க ஆடல்வல்லான் நடனம் ஆடுவதைக் கோயில்களில் சிற்பங்களாகக் காண்கிறோம். தக்கை, தண்ணுமை, தாளம், வீணை, தகுனிச்சம், சல்லரி, கொக்கரை, குடமுழவினோடு இசை கூடிப்பாடி நின்றாடுவீர்; வீணை, முழவம், குழல், மொந்தை பண்ணாகவே ஆடுமாறு வல்லானும் - என்றெல்லாம் பல இசைக்கருவிகளை திருப்பதிகங்கள் குறிப்பிடுகின்றன.

திருப்பதிகங்கள் பாடும்பொழுது உடுக்கையும், தாளமும் வாசிக்கப்பெற்றதாக திருவெறும்பூர் கோயில் கல்வெட்டால் அறிகிறோம். தஞ்சைப் பெரிய கோயிலில் திருப்பதிகங்கள் பாட 48 ஓதுவார்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். பக்கவாத்தியமாக உடுக்கையும், கொட்டி மத்தளமும் வாசிக்கப்பட்டன. அவர்களில் சிலர் 'வாத்யமாராயன்' என்ற சிறப்புப் பட்டமும் பெற்றிருந்தனர்.

கோயில்களில் 'ஸ்ரீபலி' என்ற வழிபாடு நடைபெறும்பொழுது இசைக்கருவிகளை வாசிக்க தானம் அளிக்கப்பட்டதாக திருக்கருகாவூர், திருமணஞ்சேரி, திருவாமாத்தூர் போன்ற பல கோயில் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இறைவன் வீதி உலா வரும்பொழுது இறைவன் வருகையை அறிவிக்க 'காளம்' என்ற இசைக்கருவி பயன்பட்டது. தஞ்சைப் பெரிய கோயிலில் அளிக்கப்பெற்ற இரு காளங்களில் ஒன்றில் 'சிவபாதசேகரன்' என்றும், 'ஸ்ரீஇராஜராஜன்' என்று பெயர் பொறிக்கப்பட்டு இருந்ததை அறிகிறோம்.

சுந்தரர் வரலாற்றில் இறைவன் அவரைப் பார்த்து, என்னைப் பித்தன் என்று கூறினாய். எனவே 'பித்தன் என்றே பாடுக' என்றார். சுந்தரர் 'பித்தா பிறைசூடி' எனப் பாடத் தொடங்கினார். இந்த நிகழ்ச்சியை எடுத்துக்கூறும் வகையில் 'பிச்சன் என்று பாடச் சொன்னான்' என அழைக்கப்பட்ட இரு காளங்கள் அளிக்கப்பட்டதாக திருவெண்ணெய் நல்லூர் கல்வெட்டு குறிப்பிடுகிறது. சுந்தரப் பெருமான் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட அக்கோயிலிலிருந்தே இதுபோன்ற செய்தியை அறியும்பொழுது நம் உள்ளம் மகிழ்ச்சி அடைகிறது.

இசைக்கருவிகளான செண்டை, மத்தளம், கொட்டி மத்தளம், வீணை, சேகண்டிகை, சங்கு போன்ற பல இசைக் கருவிகள் கோயில்களில் வாசிக்கப்பட்டதைக் கல்வெட்டுகளால் அறிகிறோம். நடராஜப் பெருமானுக்குப் பிடித்த இசைக் கருவிகளில் ஒன்று 'குட முழா' ஆகும். திருமுறைப் பாடல்களில் குடமுழா பற்றிய பல குறிப்புகள் வருகின்றன. கோயில்களிலும் சிற்பங்களில் காணலாம். ஐந்து முகம் உடைய குடமுழா திருவாரூர், திருத்துறைப்பூண்டி கோயில்களில் இன்றும் வழிபாட்டில் இருந்து வருகிறது.

'ஸ்வஸ்திஸ்ரீ இக்குடவிழா சமைப்பித்திட்டார் சிகாருடையார் மல்லாண்டாரான சோழ கோனார்' என்ற வாசகம் திருத்துறைப்பூண்டி குடமுழா இசைக் கருவியில் பொறிக்கப்பட்டு காணப்படுகிறது. செம்பால் ஆன இதன் எடை 2,330 பலம் என்பதும் சிறப்பாகும். சதாசிவ மூர்த்தியான சிவனின் ஐந்து முகங்களுக்கு குடமுழாவில் காணப்படும் ஐந்து முகங்களையும் பொருத்திக் கூறப்படுவதுண்டு.

சிதம்பரத்தில் கனகசபைக்கு எதிரே உள்ள மண்டபத்தின் அடித்தளப் பகுதியில் வாணன் ஒருவன் குடமுழா வாசிக்கும் அற்புதச் சிற்பத்தினைக் காணலாம். கோயில் வழிபாட்டில் 'சங்கு' இசைக்கருவியும் இடம் பெறுகிறது. பூதகணங்கள் சங்கு இசைக் கருவியை வாசிக்கும் சிற்பங்களைக் காணலாம். தஞ்சைப் பெரிய கோயில் 'முத்திரைச் சங்கு' ஊத தானம் அளிக்கப்பட்டது. இறைவழிபாட்டில் இருந்த, எழுத்துப் பொறிப்புகளுடன் சங்குகள் திருவிடைவாசல், கழஞ்சூர், திருவதிகை போன்ற திருக்கோயில்களில் உள்ளன.

சிவனுக்கு விருப்பமான இசைக்கருவி வீணைஆகும். இசைவீணை உடையார், ஒலிமல்கு வீணையர் என்றெல்லாம் திருமுறைகள் போற்றுகின்றன. இசையுடன் சாம வேதத்தை வீணையில் தும்புரு நாதர்-சுகர் முதலிய முனிவர்களுக்கு இறைவன் அருளியபொழுது வீணாதர தட்சிணாமூர்த்தியாகக் காட்சி தருகிறார். இறைவன் வீணையை மீட்டும் நிலையில் சிற்பங்களையும் பல திருக்கோயில்களில் காணலாம்.

லால்குடி - திருத்தவத்துறை கோயிலில் காணப்படும் வீணாதரரின் சிற்பம் மிக அழகானது. இறைவன் முன்பு வீணை வாசிக்க தானம் அளிக்கப்பட்டதாக திண்டிவனம், திருக்கடவூர், வேப்பத்தூர், திருந்துதேவன்குடி தஞ்சாவூர் கோயில் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. தஞ்சைப்பெரிய கோயிலில் வீணை வாசித்தவன் பெயர் செம்பியன் வீணை ஆதித்தன் என்பதாகும். வீணை வாசிக்க அளிக்கப்பட்ட நிலம் 'வீணைக்காணி' எனப்பட்டது.

திருவரங்கம் கோயிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசித் திருவிழாவில் திருவாய்மொழி (இராப்பத்து) திருநாளில் இரவு அரங்கநாதர் - நம்பெருமாள் மூலஸ்தானம் திரும்பும்பொழுது, அவர் முன்பு வீணை வாசிக்கும் நிகழ்ச்சி இன்றும் நடைபெற்று வருகிறது. இதை 'ஏகாந்த சேவை' என்பர். அமைதியான சூழ்நிலையில் வீணை இசையை கேட்கும் தருணம் மிகவும் இனிமையான அனுபவம் ஆகும்.

ஈரோடு மாவட்டத்தில் அரச்சலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் குடுமியான் மலை, திருமயம் கோயில்களில் இசையைப் பற்றி கூறும் கல்வெட்டுகள் உள்ளன. மதுரை சுந்தரேசுவரர் - மீனாட்சி கோயிலிலும், நெல்லை, நெல்லையப்பர் கோயிலிலும் 'தாளம்' பற்றி கூறும் 'தாள சக்கர' கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

ஆழ்வார்திருநகரி, சுசீந்திரம், மதுரை போன்ற கோயில்களில் இசை எழுப்பும் இசைத் தூண்கள் உள்ளன. குடந்தை கும்பேசுவரர் கோயிலில் கல்லால் ஆன நாதஸ்வரம் உள்ளது. கழுகுமலை வெட்டுவான் கோயிலில் மிருதங்கம் வாசிக்கும் கோலத்தில் இறைவன் மிருதங்க தட்சிணாமூர்த்தியாகக் காட்சி தருகிறார்.

மயிலாடுதுறை அருகே உள்ள திருமங்கலம் விக்கிரமசோழீசுவரர் கோயிலில் மத்தளம் அடிப்பது போல சிற்பம் காணப்படுகிறது. இதற்கு மேலே 'மத்தளப் பெருமாள்' என்று அவர் பெயரைக் குறிப்பிடும் கல்வெட்டு காணப்படுகிறது. திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாதேவி கிராமத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலில் 'பஞ்ச மகா சப்தம்' செய்ய தானம் அளிக்கப்பட்ட செய்தி கல்வெட்டில் காணப்படுகிறது. கரடிகை, மத்தளம், சங்கு, காளம், வாய்ப்பாட்டு (மிடறு) போன்ற இசைக்கருவிகள் இறை வழிபாட்டின்போது 'பஞ்சமகா சப்த'மாக இசைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணியில் விசிக தொடரக் காரணம் என்ன? தொல். திருமாவளவன் விளக்கம்

பெரியகுளம் பகுதியில் நாளை மின் தடை

அரசு ஐடிஐ-களில் பெண் பயிற்சியாளா்களுக்கு விடுதி வசதி ஏற்படுத்தக் கோரிக்கை

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

SCROLL FOR NEXT