ஞாயிறு கொண்டாட்டம்

கதைகளுக்கு நிலம்தான் அடிப்படை! - சீனு ராமசாமி

சீனு ராமசாமி... தேடித் தேடிச் சேர்த்த அனுபவமும், இன்னும் இன்னும் தீராத தேடலுமாக சமூகத்தின் சகல திசைகளையும் தரிசிக்கத் துடிக்கிற படைப்பாளி.

தினமணி செய்திச் சேவை

சீனு ராமசாமி... தேடித் தேடிச் சேர்த்த அனுபவமும், இன்னும் இன்னும் தீராத தேடலுமாக சமூகத்தின் சகல திசைகளையும் தரிசிக்கத் துடிக்கிற படைப்பாளி. காலத்தைப் புகைப்படமாக்கி, அதில் கண்ணீரையும் புன்னகையையும் உறைய வைக்கும் கலைஞன். தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, மாமனிதன் என உன்னத சினிமாக்களுக்கு கைப்பிடித்து அழைத்துப் போகும் சீனுவின் அடுத்த படைப்பு 'இடம் பொருள் ஏவல்'.

அவருடன் ஒரு சந்திப்பு: இந்த முறை என்ன எதிர்பார்க்கலாம்?

என் கதைகளுக்கு நிலம்தான் அடிப்படை. கொடைக்கானல் மலையிலிருந்து 1 மணி நேரம் பயணித்தால் 'கூக்கால் பழம்மூத்தூர்' என்ற கிராமம் வந்து விடும். கேரட், முட்டைகோஸ் என விவசாயம் செய்கிற பூமி. 6 தலைமுறைகளுக்கு முன்பே குடியேறிய விவசாயிகளின் பூமி. இந்தக் கிராமத்துப் பின்னணியை வேறு ஒரு கதைக்காக யோசித்து வைத்திருந்தேன். எதேச்சையாக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனை சந்தித்த பொழுதில், அந்தக் கிராமத்தின் அடிப்படையில் ஒரு கதை கேட்டேன். அவரும் ஓர் அருமையான கதையைச் சொன்னார். அதைத் திரைக்கதையாக்கி, வசனம் எழுதி, எதார்த்தத்துக்குள் கொண்டு வந்திருக்கிறேன். இடத்தைத் தேடி தனது சொந்த ஊரைத் தேடிப்போகும் ஒரு மனுஷி.

தொழிலதிபராக வேண்டும் என்ற வேட்கையில் பொருள் தேடி ஓடும் ஓர் இளைஞன். ஏவப்பட்ட மனிதனாக ஒரு மலைக் கிராமத்தில் தஞ்சமடையும் இன்னொரு இளைஞன். வெவ்வேறு திசைகளில் பயணிக்கிற இந்த மூன்று கதாபாத்திரங்களின் சங்கமம்தான் கதை.

நிலம்தான் உங்களின் கதைகளுக்குப் பெரும்பாலும் ஆதாரப் பின்னணியாக இருக்கிறது. என்ன காரணம்?

மறுபடியும் கண்டடைய முடியாத மனிதர்கள். முகங்கள், சொற்கள், நினைவுகள், காட்சிகள்... என்னை ஒவ்வொரு முறையும் மீள் உருவாக்கம் செய்பவை பயணங்கள்தான். பயணங்களில் யாரோ நீட்டுகிற ஒரு வாட்டர் பாட்டில், புளியோதரைப் பொட்டலம், ஒரு புன்னகை, விசாரிப்பு, சினேகம், காதல் எல்லாவற்றுக்குமே ஒரு காவியத் தன்மை வந்து விடுகிறது. என் வாழ்க்கையில் சரி பாதி பொழுதுகள் பயணங்களுடன்தான் கழிந்திருக்கின்றன.

விதவிதமான காட்சிகள் படிமங்களாக மனதில் கிடக்கின்றன. கவலைகளையும் எதிர்காலம் குறித்த பதற்றங்களையும் கடக்க முடியாத பிரிவுகளையும் துடைத்து வீசிவிட, ஒரே ஒரு புதிய நிலப்பரப்பின் காட்சியில் முடிந்து விடுகிறது. பயணத்தின் போதுதான் வெயிலும் மழையும் ஒளியும் இருளும் புதிதாக இருக்கின்றன. என் மனம் எதை நேசிக்கிறதோ, அது கதையில் வருகிறது, அவ்வளவுதான். இதோ இப்போது கூட ஏதோ ஒரு பாரம். விமானம் பிடித்து கோவைக்கு வந்துவிட்டேன். அங்கிருந்துதான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். பயணங்களில்தான் ஓர் அபூர்வம் நிகழ்கிறது.

படத்தின் பேசு பொருள் என்ன ?

உலகமெல்லாம் நிறைந்து கிடப்பதும், உலகமே தேடிக்கொண்டிருப்பதும் அன்புதானே! பொருளையும், பணத்தையும் முதன்மைப்படுத்தாமல் வாழ்க்கைக்கு அன்புதான் முக்கியம் என்பதை அடுத்த தலைமுறைக்குச் சொல்லிக் கொடுத்தாலே போதும். ஆரோக்கியமான தலைமுறை உருவாகிவிடும். இதற்குத் தேவையில்லாத தியாகங்கள் அவசியமில்லை. என் கதையின் அடிநாதமாக அதன் கதாபாத்திரங்களுக்குள் ஒரு மனமாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கும். மனதில், புத்தியில் ஏற்படுகிற அதிர்வின் காரணமாக மனமாற்றம் நிகழ்ந்து ஒரு புது வாழ்வு பரிசாகக் கிடைத்துவிடும். இருளில் திடீர் என்று ஏற்றப்படும் தீபத்தைப் போல் அது மகத்தானது. அது போன்ற நம்பிக்கைகள்தான் இந்தப் படம்.

விஜய் சேதுபதி உங்களின் அறிமுகம். விஷ்ணு விஷாலுக்கு நீர்ப்பறவையில் நல்ல பெயர். இதில் எப்படி இவர்கள்?

தென்மேற்குப் பருவக்காற்று சமயத்தில் விஜய் சேதுபதி என் முன் மரியாதையாக நின்றார். அதே மாதிரிதான் விஷ்ணுவும். அவருக்கும் என் மேல் பெரிய மரியாதை. ' சொல்லுங்க சார்...'' என எதற்கும் இருவரும் தயாராக இருப்பார்கள். இப்போது அது மாறியிருக்கிறது. இரண்டு பேரும் அன்பாக நிற்கிறார்கள். சில நேரங்களில் ஆலோசனைகளையும் தந்தார்கள். அன்பு பெருகி சகோதரத்துவம் வளர்ந்திருக்கிறது.

கையில் பிரம்பு வைத்திருக்கிற வாத்தியாராக என்னைப் பார்த்த இந்த இளைஞர்கள், இப்போது என்னைத் தகப்பனாகப் பார்ப்பதில் சந்தோஷம். விஜய் சேதுபதியை அறிமுகப்படுத்தினேன் என்ற எண்ணமெல்லாம் எனக்குக் கிடையாது. வெற்றிக்காக, நல்வாய்ப்புக்காக இப்போது அவர் அர்ப்பணிப்போடு நிற்கிறார். அது அவரை உன்னத இடத்துக்கு அழைத்துச் செல்லும். ஒரு முக்கியமான வேடத்துக்கு வடிவுக்கரசி பொறுப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

வைரமுத்து - யுவன் கூட்டணியில் பாடல்கள் ஏற்கெனவே ஹிட் ஆகியிருக்கிறதே?

இந்தக் கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பது போல் எந்த நோக்கமும் எனக்குக் கிடையாது. பிரிந்த இரு குடும்பத்தை இணைப்பது என் வேலையும் இல்லை. இரு திறமையான கலைஞர்களைச் சேர்த்து வைப்பதில் இயக்குநராக வேலை பார்த்திருக்கிறேன். நூறு படங்களுக்கு இசையமைத்த யுவன், 10 ஆயிரம் பாடல்கள் எழுதிய வைரமுத்து. இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என் ஆசை. தயாரிப்பாளர் லிங்குசாமிக்கு யுவன் நண்பர். எனக்கு வைரமுத்து ஒரு வழிகாட்டி. இருவரையும் இணைப்பது சுலபமாகிவிட்டது.

-ஜி.அசோக்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4-வது டி20: இந்தியா பேட்டிங்; வெற்றி தொடருமா?

ஜன கண மன.. அல்ல ஜன கண மங்கள..! தேசிய கீதத்தை இப்படியும் பாடலாமா? காங்கிரஸ் விழாவில் குழப்பம்!

உன்னாவ் வழக்கு: குழந்தைகள் உயிருக்கு ஆபத்து! சாட்சிகளுக்கு பாதுகாப்பு கோரும் பாதிக்கப்பட்ட பெண்!

ஜன நாயகன் முன்பதிவு ஆரம்பம்!

கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை பொதுக்குழு தனக்கு வழங்கும்: ராமதாஸ்

SCROLL FOR NEXT