ஞாயிறு கொண்டாட்டம்

விரும்பியதை அடையவே வாழ்க்கை

'கண் பார்வை சவால் இருக்கத்தான் செய்கிறது. அதை எதிர்கொள்வதில்தான் வாழ்க்கையின் ரகசியம் உள்ளது.

தினமணி செய்திச் சேவை

'கண் பார்வை சவால் இருக்கத்தான் செய்கிறது. அதை எதிர்கொள்வதில்தான் வாழ்க்கையின் ரகசியம் உள்ளது. 'விரும்புவதை அடைவதல்ல வாழ்க்கை; விரும்பியதற்காகத் தகுதிப்படுத்துக் கொள்வதுதான் உண்மையான வாழ்க்கை' என்று எனது ஆசிரியர் கூறுவார். அந்த வகையில் தகுதிப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் இருக்கிறேன்'' என்கிறார் ஆந்திர மாநிலத்துக்கு உள்பட்ட குப்பத்தில் உள்ள திராவிட பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான கு.பத்மநாபன்.

பேச்சாளர், நிகழ்ச்சி நெறியாளர், சிறுகதையாசிரியர், இலக்கிய விமர்சகர், இலக்கிய ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர் என்று பன்முகத் தன்மைகளோடு இயங்கி வரும் அவரிடம் பேசியபோது:

'ராமநாதபுரம் மாவட்டத்துக்கு உள்பட்ட பரமக்குடியில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தேன். அண்ணன், அக்கா என இருவர். அண்ணனுக்கும் பார்வை தெரியாது என்பதோடு, மனவளர்ச்சியும் குறைவானவர். அப்பா ஓர் அரசுப் பணியாளர்.

சென்னை அடையாறு தூய லூயி காது கேளாதோர்- பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளியில் பிளஸ் 2 வரை படித்துவிட்டு, சென்னை கிறித்துவக் கல்லூரியிலேயே முனைவர் பட்டம் வரை பெற்றேன். வரலாற்று அறிஞர் சா. பாலுசாமியின் வழிகாட்டுதலில், ஜெயகாந்தனையும் யூ.ஆர் அனந்த மூர்த்தியையும் ஒப்பிட்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றேன். ஆசிரியர் அருண்மொழித் தேவன், பேராசிரியர்கள் கு. அரசேந்திரன், நிர்மல் செல்வமணி உள்ளிட்டோர் வழிகாட்டியவர்கள்.

என் மனைவி ஜோதியும் பார்வையற்றவர்தான். இரண்டு குழந்தைகள் உண்டு. என்னை உருவாக்கிக் கரை சேர்க்க என் அம்மா ஒரு போராளியாகப் போராடினார். எனது சிறுவயதில் பெரிய ஸ்லேட்டில் சாக்பீஸில் ஓர் எழுத்தை எழுதி, அந்த எழுத்து மேலேயே திரும்பத் திரும்ப நூறு முறையாவது எழுத வைத்து, எனக்கு எழுத்தின் வடிவத்தைக் கற்றுக் கொடுத்தார். ஐந்தாம் வகுப்பில் தமிழோடு, ஆங்கிலத்தையும் கற்றேன். பாடங்களைக் காணொலியில் பதிவு செய்தும் படிப்பேன்.

இலக்கிய ஈடுபாடு: சிறுவயதில் அம்மா வாசிப்பதைக் கேட்ட குழந்தை எப்படி வளரும்? அந்த வகையில் எனது அம்மாவே என் இலக்கிய ஈடுபாட்டுக்குக் காரணம்.

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் புத்தகங்களை வாங்கி வந்து என்னுடைய பெயரை கு.பத்மநாபன் என்று எழுதி வைப்பார். யாராவது வீட்டுக்கு வந்தால் திடீரென்று ஒரு பக்கத்தைப் புரட்டி அதைப் படிக்கச் சொல்லிக் கேட்பேன். ஜெயமோகன் எழுதிய 'வெண்முரசு' நாவலையும் வாசித்தேன். இப்படி என் வாசிப்பார்வம் வளர்ந்தது.

நான் ஜெயகாந்தன் பற்றி ஆய்வு செய்தபோது, எனக்காக விசுவநாதன் என்கிற அன்பர் நூற்றுக்கணக்கான புத்தகங்களில் இருந்து நாலாயிரம் பக்கங்களை காணொலியில் பதிவு செய்து கொடுத்தார். அடையாறு கர்ண வித்யா போன்ற பல தொண்டு நிறுவனங்கள் உதவியாக இருந்தன.

சென்னை கிறித்துவக் கல்லூரியில் படித்தபோது, நண்பர்கள் சிலருடன் இணைந்து 'வனம்' அமைப்பின் வாயிலாக, வெள்ளிக்கிழமை படைப்புகள் குறித்து விமர்சனம் செய்வது, படைப்புகளைப் பகிர்வது என்று இயங்கினோம். தொடர்ந்து இயங்கவும், தக்க வைத்துக் கொள்ளவும் அந்த அமைப்பு உதவியது. இந்த நேரத்தில் எங்களை ஊக்கப்படுத்திய பேராசிரியர்கள் பாரதி புத்திரன், பா. ரவிக்குமார், இரா.ராமன், ஸ்ரீஷா, கல்பனா ஆகியோர் நினைவுகூரத்தக்கவர்கள்.

நண்பர்கள் சிலருடன் இணைந்து 'அண்ணா நகர் ஆய்வு வட்டம்' அமைப்பை நடத்தி வந்தோம். மாதம் ஒரு நூல் பற்றி விவாதிப்போம். முக்கியமான பல எழுத்தாளர்கள், கவிஞர்கள், திறனாய்வாளர்கள் அங்கே வந்துள்ளனர்.அங்கே வாசிக்கப்பட்ட எனது கட்டுரைகளைத் தொகுத்து, 'இனி ஓநாய்களுக்கு அஞ்சுவதில்லை' என்கிற பெயரில் நூலாக வந்தது. எழுத்தாளர் சைலபதி அந்தப் பணிகளை ஒருங்கிணைத்தார்.

மரபிலக்கியம், ஒப்பிலக்கியம் சார்ந்து, 'தொல் பனுவல்களும் பன்முக நோக்கும்' என்கிற நூலை உருவாக்கினேன். மாநிலக் கல்லூரிப் பேராசிரியராக இருந்த சுதந்திரமுத்து அணிந்துரை வழங்கினார்.

'ஸ்கிரீன் ரீடர்' என்ற 'திரை வாசிப்பான்' முறையில் கணினியில் இருப்பதைப் படித்துக் காட்டக்கூடிய ப்ரோக்ராம்கள், நிரலிகள், செயலிகள் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. பெங்களூரில் இருக்கும் 'எனேபிள் இந்தியா' தொண்டு நிறுவனத்தில் நான் கணினிப் பயிற்சியை எடுத்துக் கொண்டேன். இதற்காக என்னை அனுமதித்த திராவிட பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் கடப்பா ரமணய்யாவை நன்றியோடு நினைவுகூர்கிறேன். இந்தப் பயிற்சியால்தான் என்னால் கன்னடத்திலிருந்தும் தெலுங்கிலிருந்தும் தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்ய முடிகிறது. பல மொழிகளைப் படிப்பதற்கும் இந்தத் தொழில்நுட்பம் உதவுகிறது.

'என்.வீ.டி.ஏ.' என்கிற மென்பொருளும், 'விரல் மொழியர்' என்று வாட்ஸ் அப் குழுவும் நல்ல வழிகாட்டுதலை அளிக்கின்றன. நூல்களை வாங்கி, அதை ஸ்கேன் செய்து அதை மாற்றிப் படிக்கிறோம். இப்படி எங்களுக்காக நாங்கள் ஒரு நூலகத்தை உருவாக்கிக் கொண்டோம். எங்கள் நூலகத்துக்காக ஆயிரக்கணக்கான நூல்களை உருவாக்கிக் கொண்டு உதவுகிற தன்னார்வலர் ஆசிரியர் சக்திவேலை தமிழ்நாடு அரசு அண்மையில் பாராட்டியது. எழுத்தாளர்கள் பார்கவி, ஸ்ரீனிவாசன் முன்னெடுப்பில் நண்பர்கள் இணைந்து 'இன்பர்வாரி' என்றொரு குழுவை உருவாக்கி, 'கம்பராமாயணம்' இதிகாசத்தை 5 ஆண்டுகளாக வாசித்துக் கொண்டிருக்கிறோம்.

கிறித்துவக் கல்லூரியில் சாகித்ய அகாதெமிக்காக, நூற்றாண்டு காணும் ஹெப்சிபா ஜேசுதாசன் பற்றி நடத்தப்பட்ட ஒரு நாள் கருத்தரங்கில் அவரது 'அநாதை' நாவல் பற்றி இருத்தலியல் நோக்கில் பேசினேன். இவையெல்லாம் இணைந்து நான் தீவிர இலக்கிய மனநிலையில் நீடிப்பதற்கு உதவுகின்றன.

மொழிபெயர்ப்பு: எங்கள் வீட்டில் கன்னடம் பேசுவார்கள். திராவிட பல்கலைக்கழகத்தில் பணி கிடைத்தபோது, மொழிபெயர்ப்பில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்று நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டனர். கன்னடத்தில் இருந்து மரபு இலக்கியமும், நவீன இலக்கியமும் மொழிபெயர்ப்பு செய்கிறேன். கன்னட சிறுகதைகளைத் தொடர்ந்து மொழிபெயர்த்து, தமிழ் இதழ்களில் வெளியாகின்றன.

சம்ஸ்கிருத இலக்கிய கவிதைகளைத் தமிழில் விளக்கக்கூடிய நூல் முயற்சியில் இருக்கிறோம். 'இந்தியக் கவிதையியல்' என்கிற நூலை மொழிபெயர்த்து , 'குருகு' இதழில் தொடராக வெளியிடுகிறோம்.

டாக்டர் ஜெயலலிதா என்கிற மொழிபெயர்ப்பாளருடன் இணைந்து 'குவெம்பு பாஷா பாரதி' அமைப்பின் மூலம் முன்னெடுக்கப்பட்டு கே.வி. புட்டப்பா என்கிற குவெம்புவின் நாடகங்களை மொழிபெயர்த்து இருக்கிறோம். தி. ஜானகிராமனின் நூற்றாண்டை முன்னிட்டு, அவரது 10 நாவல்களைப் பற்றி 10 முக்கிய எழுத்தாளர்கள் இணைந்து 'உயிர்க்காடு' என்கிற பெயரில் தொகுப்பைக் கொண்டு வர 'ஜீரோ டிகிரி பதிப்பகம்' உதவியது.

மாற்றுத்திறனாளிகளுக்கான நூல்கள்: அமெரிக்காவில் ஒரு நூல் உருவாக்கப்படும்போது, மாற்றுத்திறனாளிகளுக்கும், வாசிப்புச் சவால் கொண்டவர்களுக்கும் உதவும் வகையில் உருவாக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் உள்ள பார்வையற்றவர்களுக்கு உதவக்கூடிய 'புக் ஷேர்' என்னும் நூலகம் உள்ளது. அதில் தமிழ் நூல்களும் உள்ளன. ஆனால், இந்தியாவில் நாங்கள் பொருள்படுத்தப்படுவதே இல்லை. எனவே, மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும் வகையில் நூல்களை உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசையும், 'பபாசி' அமைப்பையும் கேட்டுக்கொள்கிறோம்' என்கிறார் கு.பத்மநாபன்.

- அபூர்வன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"கடக ராசி நேயர்களே!" இந்த வார ராசி பலன்களை தெரிந்து கொள்ளுங்கள் | Astrology

நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்த குடியரசுத் தலைவர்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 14

ஜன.1 முதல் ரயில்களின் நேர அட்டவணையில் மாற்றம்

மேஷ ராசி நேயர்களே இந்த வார ராசி பலன்களை தெரிந்து கொள்ளுங்கள் | Astrology

SCROLL FOR NEXT