முன்னாள் மாணவர்கள் சந்திப்புகள் என்பது வழக்கமான நிகழ்வுகள்தான். ஆனால், எழுபது ஆண்டுகள் கழித்து, ஏறக்குறைய தொன்னூறு வயதைத் தொட்டவர்கள் சந்தித்துகொள்வது என்றால் அதிசயம்தான்.
துள்ளும் இளைஞர்களாய் அவர்கள் வந்ததோடு, தங்களோடு படித்தவர்களுடைய வாரிசுகளையும் அழைத்துப் பேசி 'குடும்பக் கூடல்' வைர விழாவை நடத்தினர்.
குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் (அப்போது நல்லூர்பேட்டை நகராட்சி உயர்நிலைப் பள்ளி) 1954-55-இல் ஆறாம் படிவம் (அதாவது ஓ.எஸ்.எஸ்.எல்.சி.) படித்த மாணவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்தித்துப் பேசிக் கொள்வது வழக்கம்.
2015-இல் சந்தித்த இவர்கள் தற்போது நலமுடன் வாழ்பவர்கள், மறைந்த நண்பர்களின் வாரிசுகளை ஒருங்கிணைத்து 'குடும்பக் கூடல் வைர விழா'வை பள்ளி வளாகத்தில் அண்மையில் நடத்தினர்.
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஒவ்வொரு குடும்பமாய் தனித்தனியாய் அழைத்து வேந்தர் ஜி.விசுவநாதன் பேசினர். இவர்கள் தங்களுக்குப் பயிற்றுவித்த ஆசிரியர்களான கிருஷ்ணன், ராமமூர்த்தி, சுப்பிரமணிய பிள்ளை உள்ளிட்டோரின் குடும்பத்தினரையும் அழைத்து மரியாதை செலுத்தினர். விழாவில் பங்கேற்ற டி.ராஜா, செ.கு.தமிழரசன் உள்ளிட்டோரும் தங்களது பள்ளிக் கால நினைவுகளில் மூழ்கினர்.
இந்தச் சந்திப்பு குறித்து வைர விழாக் குழுத் தலைவரும் வேலூர் வி.ஐ.டி. வேந்தருமான ஜி.விசுவநாதன் கூறியது:
'கௌண்டன்ய மகாநதியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் செல்லும். வெள்ளம் பெருக்கெடுக்கும்போது, மறுகரையில் உள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் சென்று படிக்க முடியாத நிலையில் இருந்தபோது, இந்தப் பள்ளி தொடங்கப்பட்டது.
நாங்கள் படித்த ஆண்டில் ஏ, பி குரூப்புகளில் 80 பேர் படித்தோம். தற்போது 15 பேர் நலமுடன் உள்ளனர். இவர்களில் 10 பேர் ஒன்று சேர்ந்து பேசினோம். எங்களுடன் படித்த இதர நண்பர்களின் குடும்பத்தினரையும் விழாவுக்கு அழைத்துப் பேசினோம்.
அன்று சிறுவர்களாக, இளைஞர்களாகச் சந்தித்த நாங்கள் தாத்தாக்களாகப் பள்ளி வந்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த நேரத்தில் நாங்கள் படித்த பள்ளியை மாதிரிப் பள்ளியாக மாற்றும் முயற்சிகளை மேற்கொள்வோம். இந்த விழாவை நடத்த வேண்டும் என்று நான் நினைத்தாலும், அதை செய்துகாட்டியது புலவர் வே.பதுமனார் அவர்கள்தான்.
நாங்கள் படித்தபோது, இருபது கிலோ மீட்டர் தூரம் நடந்துவந்து படித்தவர்கள் உண்டு. வகுப்புகளில் ஒரு சிலர்தான் சைக்கிள் வைத்திருப்பார்கள். நானும் எட்டாம் வகுப்பு மேல்தான் கொத்தகுப்பம் கிராமத்தில் இருந்து சைக்கிளில் பள்ளிக்கு வந்தேன்' என்று மலரும் நினைவுகளைச் சந்தோஷமாய் பகிர்ந்தார் விசுவநாதன்.
விழாக் குழுச் செயலாளர் புலவர் வே.பதுமனார் கூறியது:
'எங்களுடன் படித்தவர்களில் 132 குடும்பங்களைச் சேர்ந்த 288 பேர் பங்கேற்றனர். இந்தச் சிறப்புமிக்க விழா 'லிம்கா புக் ஆஃப் ரெகார்ட்ஸ்' சார்பில் சாதனை நிகழ்வாகப் பதிவாக இருக்கிறது' என்றார்.
விழாவில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் டி.ராஜா கூறியது:
'கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலும், மணிப்பூர் முதல் பஞ்சாப் வரையிலும் எண்ணற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். மாநிலங்களவையிலும், ஐ.நா.சபையிலும் பேசியுள்ளேன். ஆனால், முதல்முறையாக முன்னாள் மாணவர்கள் எழுபது ஆண்டுகள் கழித்து குடும்பக் கூடல் சந்திப்பில் பங்கேற்றுள்ளது முதல் முறை' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.