முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

அடையாள மற்றவர்களின் எழுத்துகள் ஆழமானவை!

பாலைவனப் பரப்பில் விரவிக் கிடக்கும் காலடிக் குளம்புகளின் ஆழத்தை வைத்து அதைப் பதித்து சென்ற ஒட்டகங்களின் வலியையும், சுமையையும் அறியலாம்.

Updated On : 19 ஜனவரி, 2025 at 12:01 AM
பகிர்:
Updated On : 18 ஜனவரி, 2025 at 9:22 PM

பாலைவனப் பரப்பில் விரவிக் கிடக்கும் காலடிக் குளம்புகளின் ஆழத்தை வைத்து அதைப் பதித்து சென்ற ஒட்டகங்களின் வலியையும், சுமையையும் அறியலாம். அப்படித்தான் ஒவ்வொரு எழுத்தாளனும்.

மனதுக்குள் சேகரமாகியிருக்கும் பாரங்களைப் படைப்பின் வழியே வெளிக்கொணர்ந்து சமூகத்துக்குப் புரிய வைக்கும் தீராமுயற்சி அவர்களுடையது. அதுபோன்ற ஒரு படைப்பை அளித்து உலகத்தின் கவனத்தை ஈர்த்தவர்தான் அமெரிக்க-ஆர்மேனிய கவிஞரும், எழுத்தாளருமான பீட்டர் பாலக்கியன்.

எண்ணற்ற கவிதைத் தொகுப்புகள், ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ள அவர், தனது 'ஓúஸான் ஜர்னல் ஜூன் ட்ரி' என்ற நூலுக்காக புலிட்சர்' விருது பெற்றவர்.

Advertisement

நியூயார்க்கில் உள்ள கோல்கேட் பல்கலைக்கழக ஆங்கிலப் பேராசிரியரான அவரின் முக்கிய நினைவுத் தொகுப்பான 'தி பிளாக் டாக் ஆஃப் ஃபேட்' என்ற நூல், சமகால இலக்கியத்தில் பெரும் சலனத்தை ஏற்படுத்திய ஒன்று.

முதல் உலகப் போருக்கு முன்னதாக அப்போதைய ஓட்டோமன் ராஜ்ஜியத்தில் (இப்போது துருக்கி) இருந்து நாடு கடத்தப்பட்டு, பெருந்துயருக்குள்ளான தனது மூதாதையர்களை அந்தப் படைப்பின் வழியே தேடி கண்டடைந்திருக்கிறார் பீட்டர் பாலக்கியன்.

Updated On : 18 ஜனவரி, 2025 at 9:28 PM

அந்த நூலை இந்திய மொழிகளில் முதன்முறையாக தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட முனைந்துள்ளது 'தடாகம் பதிப்பகம்'. சித்ரா பாஸ்கரன் மொழியாக்கத்தில் விரைவில் அந்த நூல் வெளியாக உள்ளது.

இதனிடையே தமிழகம் வர விரும்பிய பீட்டர் பாலக்கியனின் எண்ணத்தை 'தடாகம்' பதிப்பக நிறுவனர் அமுதரசன் பால்ராஜ் சாத்தியமாக்கினார். புதுச்சேரி 'ஃ'பிரெஞ்ச் ஆய்வு நிறுவனத்திலும், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பீட்டர் பாலக்கியன், சென்னை புத்தகக் காட்சிக்கும் வருகை தந்தார்.

வாசகர்களின் வரவேற்பைக் கண்டு வியப்பின் விளிம்புக்கு சென்றிருக்கிறார். தமிழ் மண் சார்ந்த இடங்களுக்கு பயணித்தபோது, வாசகர்கள், ஆய்வாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோரிடம் பீட்டர் பாலக்கியன் கலந்துரையாடினார்.

Updated On : 18 ஜனவரி, 2025 at 9:24 PM

அவருடன் ஓர் சந்திப்பு:

புகழ்பெற்ற 'தி பிளாக் டாக் ஆஃப் ஃபேட்' நூல் முன்வைக்கும் கருத்து என்ன?

1915-இல் முதலாம் உலகப் போரின்போது, ஓட்டோமன் பேரரசில் நடைபெற்ற ஆர்மேனிய இனப்படுகொலை, சிரியா பாலைவனத்தில் நடைபெற்ற மரண அணிவகுப்புகளில் இருந்து தப்பியவர்கள் வெகு சிலரே. அந்த வம்சாவளியில் பிறந்த எனது பயணத்தைத்தான் அந்நூல் தெரிவிக்கிறது.

தீராத துயரத்துடனும், கோபத்துடனும், மிகுந்த நுண்ணுணர்வுடனும் எழுதப்பட்ட ஒரு நினைவுக் குறிப்பு இது. நாடு கடத்தல், புலம்பெயர்தல் என்பது பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை தடயமின்றி அழித்தொழிக்கும் பேரிடர் நிகழ்வு.

அத்தகைய சூழலில் இருந்து வந்தவர்கள் வேறு இடங்களில் புலம் பெயர்ந்து பல தலைமுறைகளாகி இருந்தாலும் அவர்கள் அடையாளமற்றவர்களே. அதில் நானும் ஒருவன். அடையாளம் அழிக்கப்பட்டவர்களின் கதையைத்தான் அந்த நூல் பேசுகிறது. அந்த எழுத்துக்கு கனம் அதிகம்.

Updated On : 18 ஜனவரி, 2025 at 9:24 PM

ஆர்மேனிய இனப் படுகொலை குறித்த தகவல்களை ஜெர்மனியின் இனப் படுகொலை அளவுக்கு தமிழகம் அறிந்திருக்கவில்லை. அதுதொடர்பான பதிவுகள் இல்லாததுதான் அதற்கு காரணமா?

ஓட்டோமன் பேரரசில் ஆர்மேனியர்கள் சிறுபான்மை கிறிஸ்தவர்கள். உலகப் போரின்போது சிறுபான்மை மக்களுக்கு எதிரான கொடுமைகள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, லட்சக்கணக்கானோர் பாலைவன மணற்பரப்பில் தங்களது உடைமைகளை விட்டுவிட்டு உயிரைக் காத்துக் கொள்ள அணிவகுத்துச் சென்றனர்.

அந்த நேரத்தில் இனப்படுகொலை, பாலியல் வன்புணர்வு என பல கொடுமைகள் அரங்கேறின. அத்தகைய அச்சுறுத்தலின் இருந்து தப்பி வந்து சிரியாவிலும், பின்னர் அமெரிக்காவிலும் புலம் பெயர்ந்தவர்களின் எனது பாட்டி நஃபீனாவும் ஒருவர்.

இழப்புகளை மட்டுமே சந்தித்த எனது பாட்டி எனக்கு கூறிய கதைகள், ஒரு குறியீடாக ஆர்மேனியர்களின் வடுக்களை என்னுள் விதைத்தன. வளர்ந்தவுடன் அதைத் தேடி பயணித்தபோதுதான் அந்த வரலாறை அறிந்து ஒரு பதிவாக எழுதினேன். ஓட்டோமன் பேரரசின் தூதராக இருந்த ஹென்ரி மார்கன்தோ எழுதிய நினைவுக் குறிப்புகள் உள்பட பல படைப்புகள் ஆர்மேனிய இன ஒழிப்பு குறித்து பேசுகின்றன. உலகளாவிய மொழியாக்கத்தை அவை பெறும்போதுதான் இந்த விவகாரம் குறித்த புரிதல் அனைவருக்கும் தெரியும்.

Updated On : 18 ஜனவரி, 2025 at 9:26 PM

புலம் பெயர்ந்தவர்களை இலக்கியத்தால் மட்டும்தான் அடையாளப்படுத்த முடியுமா?

அப்படியெல்லாம் இல்லை. உண்ணும் உணவும் கூட நீங்கள் யார் என்பதை உணர்த்திவிடும். ஒவ்வொரு சமூகத்திலும் ஒவ்வொரு வகையான உணவு கலாசாரம் உள்ளது. அந்த வகையில் ஆர்மேனியாவில் நறுமணப் பொருள்களும், மசாலாக்களும் உணவில் அதிகமாக இடம்பெறும். அமெரிக்காவில் நான் இருந்தாலும், மரபு சார்ந்த ஆர்மேனிய உணவுதான் எங்களுக்கு பிரதானமாக உள்ளது.

சமைக்கும்போதே அந்த வாசனையைக் கொண்டு அருகில் உள்ளவர்கள் எங்களது பாரம்பரியத்தைக் கேட்பதுண்டு. அவர்களுக்கு ஆர்மேனியர்கள் அழித்தொழிக்கப்பட்ட கதையைக் கூறுவோம். இலக்கியத்தில் மட்டுமல்ல... உணவுக்குள்ளும் ஊற்றெடுக்கிறது வரலாறு.

உங்களது கவிதைகளுக்கும் மற்ற படைப்புகளும் உள்ள வேறுபாடு என்ன?

'தி பிளாக் டாக் ஆஃப் ஃபட்' நூலில் மனித குலத்துக்கு எதிராக இதுவரை செய்யப்பட்ட மிக மோசமான குற்றங்களில் ஒன்றையும், அதன் எதிர்விளைவுகளையும் தெரிவித்திருக்கிறேன். சில கட்டுரைத் தொகுப்புகளிலும் அதை பதிவு செய்துள்ளேன். கவிதைகளைப் பொருத்தவரை கடந்த காலத்தின் வலிகளை ஆற்றி ரசனைமிக்க வாழ்க்கையை கட்டமைத்துக் கொள்வதற்கான வேள்வியாக அதை கருதுகிறேன்.

தமிழ் படைப்புகள் பற்றி உங்களது கருத்து?

இலக்கியச் செறிவும், தொன்மையும் மிக்க மொழியான தமிழில் பெரும் படைப்புகள் வந்துள்ளன. அதில் எனது நூலும் வரப்போகிறது என்பது உண்மையிலேயே மகிழ்ச்சி. எனது நண்பர் ஒருவர் குறுந்தொகையையும், விவேகானந்தரின் உரைகளையும் ஆங்கிலத்தில் எனக்கு அளித்துள்ளார். அதைப் படித்து வருகிறேன். ஆகச் சிறந்த கருத்துகள் அதில் நிறைந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.