Picasa
ஞாயிறு கொண்டாட்டம்

செஞ்சிக்கு கிடைத்த பெருமை...

ஐந்து உலகப் பாரம்பரியச் சின்னங்கள் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், கும்பகோணம் அருகேயுள்ள ஐராவதீஸ்வரர் கோயில், ஜெயகொண்டம் அருகேயுள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோயில், மகாபலிபுரம் நினைவுச் சின்னங்கள், நீலகிரி மலை ரயில் பாதை ஆகியனவாகும்.

தென்றல்

தமிழ்நாட்டில் யுனெஸ்கோ அங்கீகரித்த ஐந்து உலகப் பாரம்பரியச் சின்னங்கள் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், கும்பகோணம் அருகேயுள்ள ஐராவதீஸ்வரர் கோயில், ஜெயகொண்டம் அருகேயுள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோயில், மகாபலிபுரம் நினைவுச் சின்னங்கள், நீலகிரி மலை ரயில் பாதை ஆகியனவாகும். தற்போது ஆறாவது சின்னமாக செஞ்சி கோட்டையும் இடம்பிடித்துள்ளது.

'இந்தியாவின் மராட்டிய 12 ராணுவக் கோட்டைகளை யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்று மகாராஷ்டிர அரசும், மத்திய அரசும் தங்களது பரிந்துரைகளை யுனெஸ்கோவுக்கு 2024-இல் அனுப்பி வைத்தது.

17 முதல் 19-ஆம் நூற்றாண்டு வரை கட்டப்பட்ட 12 ராணுவக் கோட்டைகள் அசாதாரண வலையமைப்பு, மராட்டிய பேரரசின் கூர்மையான ராணுவத் தொலைநோக்குப் பார்வை, கட்டடக்கலை, எதிரிகள் கோட்டையை அணுகவிடாமல் தடுக்கும் போர் தந்திரங்களையும் இன்றைக்கும் சொல்கிறது. இவற்றில் சிவ்நேரி கோட்டை, லோகாட், ராய்காட், சுவர்ணதுர்க், பன்ஹாலா கோட்டை, விஜய்துர்க், சிந்துதுர்க், செஞ்சி கோட்டைகள் உள்ளிட்டவை இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையாலும், சல்ஹெர் கோட்டை, ராஜ்காட், கண்டேரி கோட்டை, பிரதாப்கர் கோட்டைகள் மகாராஷ்டிரா அரசின் தொல்பொருள்- அருங்காட்சியக இயக்குநரகத்தால் பாதுகாக்கப்படுகின்றன.

பரிந்துரை கிடைக்கப் பெற்ற சில மாதங்களில் யுனெஸ்கோ பிரதிநிதி ஹவாஜங் லீ ஜகாம் 11 கோட்டைகளை ஆய்வு செய்துவிட்டு, செஞ்சி கோட்டையை ஆய்வு செய்ய 2024 செப்டம்பர் 27-இல் தில்லியில் இருந்து மத்திய தொல்லியல் துறையினர், விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தினருடன் வந்திருந்தார்.

உலக பாரம்பரியக் குழுவின் 47-ஆவது அமர்வு பாரிஸில் ஜூலை 11-இல் கூடி, 12 ராணுவக் கோட்டைகளையும் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரையை ஏற்றது. இந்த அறிவிப்பால் யுனெஸ்கோவின் அங்கீகாரத்தைப் பெறும் இந்தியாவின் 44-ஆவது பாரம்பரியச் சின்னங்களாக சிவாஜியால் கட்டப்பட்ட கோட்டைகள் மாறியுள்ளன.

வரலாற்று முக்கியத்துவம் ஏன்?

தென்னிந்திய மலைக் கோட்டைகளில் தரைக்கோட்டை, மலைக்கோட்டை ஆகிய இரண்டும் இணைந்ததாகவே செஞ்சி கோட்டை அமைந்திருக்கிறது. சுமார் 1,200 ஏக்கரில் மூன்று சிறு மலைகளை உள்ளடக்கி சுற்றிலும் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களாலும், 80 அடி அகலமுள்ள அகழிகளுடன், உயரமான மதில்களுடன் கட்டப்பட்டுள்ளது. கோயில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற்களஞ்சியம் போன்றவை உண்டு. கலை நயத்துடன் கட்டப்பட்டிருக்கும் திருமண மண்டபம்தான் முக்கிய கவன ஈர்ப்பு மையம். கோட்டையை யார் கட்டியது என்றதற்கு ஆதார

பூர்வமான தகவல்கள் இல்லை. பல காலகட்டங்களில் குறும்பர்கள், ஹோய்சாளர்கள், விஜயநகர மன்னர்கள் ஆண்டுள்ளனர். தொடர்ந்து நாயக்க மன்னர்கள், முகலாயர்கள் கட்டுப்பாட்டுக்குள்ளும் செஞ்சி கோட்டை இருந்து வந்தது.

மராட்டிய மன்னர் சிவாஜி 1678-இல் கோட்டையை தன் வசப்படுத்தினார். மராட்டிய ஆட்சி முழுமையாக செஞ்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. புதுச்சேரி, கூனிமேடு, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளும் சிவாஜியின் வசம் வந்தன. அவருக்குப் பிறகு சிவாஜியின் இரண்டாம் மகன் ராஜாராம் செஞ்சியை ஆண்டார்.

கடலூர், தேவனாம்பட்டினத்தில் ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனியினர் வணிகம் செய்து கொள்வதற்கான ஒப்பந்தத்தில் செஞ்சி அரசர் ராஜாராமும், கிழக்கிந்திய கம்பெனியின் சென்னை ஆளுநர் எலிகு யேலும் 1690-இல் கையொப்பம் இட்டனர்.

1698-இல் மொகலாயர்கள் செஞ்சிக் கோட்டையை மீட்டனர். மொகலாயர்களின் பிரதிநிதியாக ஸ்வரூப் சிங் 1698-இல் செஞ்சி கோட்டையை ஆண்டார். இவர் இறந்ததும் அவர் குகன் ராஜா தேசிங் முகலாயர்களுக்கு கட்டுப்படாமல் ஆட்சி செய்ய, யுத்தத்தில் ராஜா தேசிங் கொல்லப்படுகிறார். பின்னர் செஞ்சி கோட்டை பிரெஞ்சு ராணுவம், ஆங்கில ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவின் நிறைவேறாத சில வாக்குறுதிகளுக்கு மத்திய அரசே காரணம்: வைகோ

மதிமுக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

காம் & கூல்... கல்யாணி பிரியதர்ஷன்!

ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் இந்தியாவுக்கு முதல்முறையாகப் பதக்கம்: தமிழகத்தின் ஆனந்த்குமார் சாதனை!

அட... ஆண்ட்ரியா!

SCROLL FOR NEXT