விஜய் மில்டன் - பரத் கூட்டணி
இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கும் தமிழ், தெலுங்கு இருமொழி படத்தில் இணைகிறார் நடிகர் பரத். இத்தகவலை படத்தை தயாரிக்கும் ரஃப் நோட் புரொடக்ஷன் நிறுவனம் அறிவித்துள்ளது.
இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கும் தமிழ், தெலுங்கு இருமொழி படத்தில் இணைகிறார் நடிகர் பரத். இத்தகவலை படத்தை தயாரிக்கும் ரஃப் நோட் புரொடக்ஷன் நிறுவனம் அறிவித்துள்ளது. பரத் நடிக்கும் கதாபாத்திரம், கதையின் நகர்வுக்கு மிக முக்கியப் பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. கதாபாத்திரத்தின் தீவிரம், ஆழ்மன குழப்பங்கள் மற்றும் உளவியல் சார்ந்த நுணுக்கமான மாற்றங்களை மையமாகக் கொண்ட இந்தக் கதாபாத்திரத்தில் பரத் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் பரத் தேர்வைப் பற்றி இயக்குநர் விஜய் மில்டன் கூறும்பொழுது...''பரத் ஒரு நடிகராகக் கட்டுப்பாடும், உணர்ச்சி நுட்பமும் கொண்டவர். இந்தப் படத்தில் அவர் செய்யும் பாத்திரம் கதை முழுவதற்கும் உணர்வுகளின் உச்சமாக உள்ளது. முடிவெடுக்க முடியாத தன்மை, அதனால் ஏற்படும் விளைவுகள், அதிலிருந்து வரும் மாற்றங்கள் என நெகிழ்ச்சியான மனிதனாக வருகிறார். ஏற்கெனவே ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிற இந்த இருமொழி திரைப்படத்தில் நடிகர் ஆரி முதல்முறையாக ஒரு போலீஸ் அதிகாரியாக வலம் வருகிறார், டோலிவுட் நடிகர் ராஜ் தருண் தமிழில் அறிமுகமாகிறார்.
சமூக முக்கியத்துவம் வாய்ந்த பின்னணியையும், உணர்வுகளுக்கு மதிப்பு தரும் கதையமைப்பையும் கொண்ட இந்தத் திரைப்படம், என் முந்தைய படைப்புகளுக்கே உரிய அடையாளங்களை கொண்டு, நிஜத்தையும், தீவிரத் தன்மையையும் அடிப்படையாகக் கொண்ட ஓர் உண்மையான சினிமா அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Advertisement
இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு ஜூன் 15-ஆம் தேதி வெளியிடப்படும், மேலும் இதையடுத்து பல சுவாரசியமான தகவல்கள் மற்றும் நடிகர்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகவுள்ளன. வித்தியாசமான மற்றும் வலிமையான படக்குழுவை உருவாக்கி வருகிறோம். இந்தப் படம் ஒரு உணர்வுப்பூர்வமான திரைப்படமாக இருக்கப்போகிறது என்று ரசிகர்களுக்கு உறுதி அளிக்கிறேன்'' என்றார் விஜய் மில்டன்.