பொ.ஜெயச்சந்திரன்
டேக்வாண்டோ, பேட்மிட்டன் போட்டிகளில் சாதனை நட்சத்திரமாக ஜொலிக்கிறார் பத்தாம் வகுப்பு மாணவி சு.நக்ஷத்ரா.
அவரிடம் பேசியபோது:
'எங்களுடைய சொந்த ஊர் கேரள மாநிலத்துக்கு உள்பட்ட பாலக்காடு. பத்து ஆண்டுகளுக்கு முன்பு கள்ளக்குறிச்சி அண்ணா நகருக்கு குடிபெயர்ந்து, வாடகை வீட்டில் வசிக்கிறோம். என் அப்பா சுதாகர், தனியார் மருத்துவமனையில் ஒட்டுநராகப் பணியாற்றுகிறார். அம்மா ரேகா இல்லத்தரசி.
நான் எல்.கே.ஜி.முதல் ஐந்தாம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்தேன். கரோனா காலத்தின்போது குடும்பச் சூழ்நிலை பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியது. அதனைக் கருத்தில் கொண்டு நானே அரசுப் பள்ளிக்குச் செல்கிறேன் என்று கூறினேன். கள்ளக்குறிச்சி அரசுப் பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்த்தனர். அந்த நேரத்தில் அங்கிருந்த பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர்கள் சத்யா, தாமரை இருவரும் ஏதாவது ஒரு விளையாட்டில் கலந்து கொள்ளவும் என்று ஊக்குவித்தனர்.
இதனால் எனக்குள் தனிப்பட்ட ஆர்வம் உண்டானது. அதாவது. வருங்காலங்களில் இந்திய நாட்டுக்காக நான் போராட வேண்டுமென்றால், டேக்வாண்டோ தற்காப்புக் கலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
'பெண் குழந்தைகள் கண்டிப்பாக எதாவது ஒரு தற்காப்பு கலையைக் கற்றுக் கொள்ள வேண்டும்' என்று எனது தாய் கூறுவாள். ஆசிரியர்களின் தூண்டுதலும், அன்னையின் அன்பான விருப்பத்தாலும் பயிற்சி செய்தேன். தற்போது விளையாட்டுகளில் 15-க்கும் மேற்பட்ட விருதுகள், பாராட்டுச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளேன்.
2023-24-ஆம் ஆண்டில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் கள்ளக்குறிச்சி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 14 வயதுக்கு உள்பட்டோருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் முதலிடத்தையும், கள்ளக்குறிச்சி மாவட்ட டேக்வாண்டோ சங்கம் சார்பில் 2024 டேக்வாண்டோ போட்டியில் தங்கப்பதக்கத்தையும், 2024 திருச்சி மாவட்ட டேக்வாண்டோ சங்கத்தின் சார்பில் மாநில டேக்வாண்டோ கேடிட் போட்டியில் 176 செ.மீ. உயரம் பிரிவில் தங்கப் பதக்கமும், ஆந்திரப் பிரதேச டேக்வாண்டோ சங்கத்தின் 2024 தேசிய கேடிட் கியோருகி டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கமும், பள்ளிக் கல்வித்துறை சார்பில் 2024-25 பாரதியார்-குடியரசு தின விழா மண்டல அளவிலான பேட்மிட்டன் போட்டியில் முதலிடமும் பெற்றுள்ளேன்.
விளையாட்டுப் போட்டிகளில் சாதனைகளைப் புரிந்தமைக்காக, மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் என்னை பாராட்டியது உற்சாகத்தை அளிக்கிறது'' என்கிறார் நக்ஷத்ரா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.