ஞாயிறு கொண்டாட்டம்

கடின உழைப்பு, விடாமுயற்சி இருந்தால் சாதிக்கலாம்...

'சாதாரண கல்லைச் செதுக்கச் செதுக்கவே அது சிற்பமாகும். அதேபோல மாணவர்களும்.

பிஸ்மி பரிணாமன்

'சாதாரண கல்லைச் செதுக்கச் செதுக்கவே அது சிற்பமாகும். அதேபோல மாணவர்களும். சரியான முறையில் அவர்களை செதுக்கினால்தான் எதிர்காலத்தில் சிறந்து விளங்க முடியும். மனிதன் சாதிப்பதற்கு பணமோ, படிப்போ, குடும்பச் சூழலோ தடையாக இருக்க முடியாது. கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் எதுவும் சாத்தியம்'' என்கிறார் அருண்மொழிவர்மன்.

பதினான்கு ஆங்கில நூல்களை எழுதியுள்ளார் திருவாரூரை அடுத்துள்ள கண்கொடுத்தவனிதம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் அருண்மொழிவர்மன். இவரது முதல் நூலுக்கு கனடா பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ பாராட்டும் தெரிவித்துள்ளார்.

சாதனை படைத்த அருண்மொழிவர்மனிடம் பேசியபோது:

'எனது சிறு வயதிலேயே அப்பா இறந்து விட்டார். அம்மாதான் படிக்க வைத்தார். சொந்தமாக இருந்த வயலில் விவசாயம் வாழ்வாதாரத்துக்கு கை கொடுத்தது. பிளஸ் 2 முடித்தவுடன் சென்னைக்கு வேலைக்குச் சென்றேன். கொஞ்சம் சம்பளம் என்றாலும், பல அனுபவங்கள் கிடைத்தன.

'படிக்க முடியவில்லை. வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும்' என்ற எண்ணம் என்னை உறுத்தியது. சொந்த நிலத்தில் விவசாயம் செய்து குடும்பத்தை காப்பாற்றி விடலாம் என்ற தைரியத்தில் சென்னையை வேலையை விட்டு வந்துவிட்டேன். இடைப்பட்ட காலத்தில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி முறையில் இளங்கலை, முதுகலை வரலாறு படிப்பை முடித்தேன்.

ஆங்கில அறிவை மேம்படுத்திக் கொள்ள, திருவாரூரில் ஆங்கிலப் பயிற்சி அளிக்கும் 'காருண்யா ஸ்போக்கன் இங்கிலீஷ்' பயிற்சி நிலையத்தில் சேர்ந்தேன். ஆங்கில நாளிதழ்கள் மாத இதழ்கள் ஆகியவற்றை வாசித்து ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும் எழுதவும் கற்றேன்.

ஐஏஎஸ் தேர்வுக்காக, மீண்டும் சென்னைக்கு வந்து அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பல நூல்களை வாசித்தேன். பலமுறை முயற்சி செய்தும் தேர்வில் தேற முடியவில்லை. நூலகங்களில் படிக்கும்போது, ஷேக்ஸ்பியர், ரவீந்திரநாத் தாகூர், ஆர். கே. நாராயண், அருந்ததி ராய், ரஸ்கின் பாண்ட், சல்மான் ருஷ்டி, சேதன் பகத் உள்ளிட்டோர் எழுதிய நூல்களைப் படித்தேன். அவர்கள் தங்கள் எழுத்தால் என்னை பிரமிக்க வைத்தார்கள்.

நானும் ஆங்கிலத்தில் எழுத முயற்சித்தேன். முதலில் கட்டுரைகள், மேற்கோள் குறிப்புகள், கவிதைகள் என்று தொடங்கினேன். முதலாவதாக 'ரிப்ளக்ஷன் ஆஃப் ஹியூமன் ரிலேஷன்ஸ்' என்ற தலைப்பில் எனது கட்டுரைகளைத் தொகுத்து ஹைதராபாத்தைச் சேர்ந்த 'ப்ரௌஸ்' பதிப்பகத்தின் மூலம் மின் நூலாக வெளியிட்டேன்.

இரண்டாவதாக 'கோட்டபுள் கோட்ஸ்' என்ற தலைப்பில் எனது மேற்கோள் குறிப்புகள் அடங்கிய நூலை 'சங்கமி' பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டேன். மூன்றாவதாக 'கிரியேஷன்ஸ் ஆஃப் மைன்ட்ஸ்' என்ற கவிதை தொகுப்பை வெளியிட்டேன். இப்படியாக 14 நூல்களை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளேன்.

எனது முதல் மின்னூலை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பணிபுரியும் எனது நண்பர் ரஞ்சித்குமார் வாசித்துவிட்டு, இணைய தளங்களில் வெளியிட்டார். அடுத்த சில நாள்களியே அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஸ்பெயின், பிரேசில், இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, டென்மார்க், சிங்கப்பூர், மலேசியா, மியான்மர், நெதர்லாந்து, ஜப்பான், அயர்லாந்து, பின்லாந்து உள்ளிட்ட 16 நாடுகளில் இருந்து வாசகர்கள், எழுத்தாளர்கள் பாராட்டினர்.

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அலுவலர் இறையன்பு உள்பட பல அரசு த் துறை அலுவலர்கள், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் நேரில் அழைத்தும், அலைபேசி மூலமாகவும் பாராட்டினர். சிறப்பு அம்சமாக, கனடாவின் அப்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ என்னைப் பாராட்டி மின் அஞ்சல் அனுப்பியிருந்தார்.

இலக்கியக் கருத்தரங்குகள், பட்டறைகளில் கலந்துகொள்ள இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும், இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, மியான்மர், இலங்கை, துருக்கி, ஆகிய நாடுகளுக்கும் சென்று வந்துள்ளேன். பல்கலைக்கழகங்களில் எனது நூல் பாட நூலாக வைக்கப்பட்டால், அது எனக்கு பெரிய அங்கீகாரமாக அமையும்.

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றி இருக்கிறேன். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் 'முனைவர்' பட்டத்துக்காக என்னைத் தயார் செய்துவருகிறேன்'' என்கிறார் அருண்மொழிவர்மன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலைக்குச் செல்லும் நபர்களுக்கான சுகாதார காப்பீட்டின் (Health Insurance) முக்கியத்துவம்

பாயும் புலி... ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்!

மகாராஷ்டிர வெள்ளம்! அடுத்த 48 மணிநேரம் மிகவும் முக்கியம்: முதல்வர் ஃபட்னவீஸ்

தமிழ்நாட்டிலிருந்து வேட்பாளரை நிறுத்தினால் தமிழக மக்கள் மீது பாஜகவுக்கு அக்கறையா? - கனிமொழி

பிகாரில் ஒரு வாக்குகூட திருடப்படுவதை அனுமதிக்க மாட்டோம்: ராகுல்

SCROLL FOR NEXT