ஞாயிறு கொண்டாட்டம்

சி.எம்.சி.யின் வெற்றிச் சரித்திரம்...

வேலூரில் உள்ள அகில இந்திய புகழ் பெற்ற 'கிருஸ்தவ மருத்துவக் கல்லூரி' (சி.எம்.சி.) உருவானதின் பின்னணி....

சுதந்திரன்

வேலூரில் உள்ள அகில இந்திய புகழ் பெற்ற 'கிருஸ்தவ மருத்துவக் கல்லூரி' (சி.எம்.சி.) உருவானதின் பின்னணியில் ஐடா ஸோஃபியா ஸ்கட்டர் என்ற அமெரிக்கப் பெண் மருத்துவரின் உழைப்பும் சமர்ப்பணமும் உரமாக இருந்தது.

அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் ஜான் ஸ்கட்டர் தனது மனைவி சோஃபியா வெஐடால்ட் ஸ்கட்டருடன் ராணிப்பேட்டையில் தங்கி மருத்துவத் தொண்டாற்றினார். அப்போது ஐடா ஸோஃபியா ஸ்கட்டர் 1870 டிசம்பர் 9-இல் பிறந்தார். எட்டு வயது வரை ராணிப்பேட்டையில் வளர்ந்த ஐடா பின்னர் தன் பெற்றோருடன் அமெரிக்காவுக்குத் திரும்பினார். ஐடா நார்த் பீல்டில் உள்ள பெண்கள் பள்ளியில் சேர்ந்து, விடுதியில் தங்கிப் படிப்பைத் தொடர்ந்தார். இறுதித் தேர்வு எழுதிய நிலையில் உடல்நிலை சரியில்லாத தாயாரைப் பார்ப்பதற்காக இந்தியாவுக்கு மீண்டும் வந்தார்.

ஒருநாள் இரவு அடுத்தடுத்து மூவர் தங்கள் மனைவிகளின் பிரசவ உதவிக்காக ஐடா வீட்டு கதவைத் தட்டினர். கதவைத் திறந்த ஐடாவை பெண் மருத்துவராகக் கருதி பிரசவம் பார்த்து உதவ வேண்டினர். 'நான் மருத்துவர் அல்ல. அப்பாதான் மருத்துவர். அவரை அழைக்கவா?' என்று கேட்டார். 'ஆண் மருத்துவர் பிரசவம் பார்ப்பதற்கு சமூகம் ஏற்காது' என்று சொல்லிவிட்டு மூன்று பேரும் 'விதி என்ன எழுதியிருக்கோ அது நடக்கட்டும்' என்று சொல்லி தங்கள் வீடுகளுக்குச் சென்றனர். மறுநாள் அந்த மூன்று பெண்களும் பிரசவச் சிக்கல்களால் இறந்து அவர்களுடைய இறுதி ஊர்வலங்கள் வெவ்வேறு திசைகளில் செல்வதை ஐடா கண்டு மனம் வருந்தினார்.

இதன்பின்னர், ஐடா மருத்துவம் படித்து சமூகப் பணியில் ஈடுபட விரும்புவதாக தன் பெற்றோரிடம் தெரிவித்தார். உடனடியாக அமெரிக்காவுக்குச் சென்ற ஐடா ஸ்கட்டர், பிலடெல்ஃபியா மருத்துவக் கல்லூரியில் 1895-இல் சேர்ந்தார். மருத்துவப் படிப்பு முடிந்ததும், 'வேலூரில் பெண்கள் மருத்துவமனை கட்ட வேண்டும்' என்ற எண்ணம் ஐடாவிடம் பிறந்தது.

அப்போது மருத்துவமனையைத் தொடங்க எட்டாயிரம் அமெரிக்க டாலர் தேவைப்பட, நிதி திரட்டும் பணியில் ஐடா ஈடுபட்டார். ஷெல் என்ற முதியவர் 10 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கான காசோலையை ஐடாவிடம் தந்து, 'என் மனைவி மேரி டேபர் ஷெல்லின் நினைவாக, வேலூரில் பெண்கள் மருத்துவமனை அமைக்க நிதியுதவி அளிக்கிறேன்' என்றார். பின்னர், தனது தோழி ஆனி ஹான்காக்குடன் 1900 ஜனவரியில் வேலூருக்கு ஐடா திரும்பினார். இருவரும் மருத்துவப் பணியோடு மருத்துவமனைக் கட்டடம் கட்டும் பணியும் தொடங்கினர்.

திட்டமிட்டபடி நாற்பது படுக்கைகளுடன் பெண்களுக்கான 'மேரி டேபர் ஷெல்' நினைவு மருத்துவமனை தொடங்கப்பட்டது. 1904-இல் தென் இந்தியாவில் பரவிய பிளேக் நோயைத் தடுப்பதில் ஐடா பெரும் பங்களிப்பு செய்தார்.

பிளேக் பேரிடர் காலத்தில், ஐந்து மாணவிகளுடன் செவிலியர் பயிற்சிப் பள்ளியை ஐடா 1908-இல் தொடங்கினார். பெண்களுக்கான தனியாக மருத்துவக் கல்லூரியைத் தொடங்க வேண்டும் என முடிவெடுத்த ஐடா, 1913-இல் தென் இந்திய மறைப்பணி மன்றத்தின் அனுமதியைப் பெற்றார். இதற்கு ஐடாவே முதல்வராக இருக்க வேண்டும் என்று தென் இந்திய மறைப்பணி மன்றம் முடிவெடுத்து, 200 ஏக்கர் நிலத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்தது.

ஐடா 1914-இல் நீண்ட விடுப்பில் அமெரிக்காவுக்குச் சென்றபோது, முதல் உலகப் போர் மூண்டது. 1915-இல் கடுமையான போர்ச் சூழலில் ஐடா இந்தியா திரும்பி, மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டார்.

1918-இல் பட்டய மருத்துவப் படிப்புடன் பெண்களுக்கான மருத்துவப் பள்ளியை நடத்துவதற்கான அனுமதி அன்றைய சென்னை மாகாண மருத்துவத் துறை தலைவர் கர்னல் பிரைசனிடமிருந்து கிடைத்தது. 1918 ஆகஸ்ட் 12-இல் யூனியன் மருத்துவப் பள்ளியை சென்னை மாகாண ஆளுநர் பென்ட்லண்ட் பிரபு தொடக்கிவைத்தார். 1948-இல் யூனியன் மருத்துவப் பள்ளி, 'கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி'யாக தரம் உயர்த்தப்பட்டது. 1948-இல் ஆண்களும் மருத்துவம் படிக்க அனுமதிக்கப்பட்டனர். இன்று சி.எம்.சி. வளர்ந்து விருட்சமாக விரிந்து, உலக அளவில் மதிக்கப்படும் மருத்துவ நிறுவனமாக மாறியுள்ளது.

ஐடா ஸோஃபியா ஸ்கட்டரை கெüரவிக்கும் வகையில் 'கெய்சர்-இ-இந்து' என்ற பட்டத்துடன் தங்கப் பதக்கத்தை அன்றைய இந்திய அரசு வழங்கியது. 1935-இல் 'டி.எஸ்ஸி' என்ற உயர்கல்வி பட்டத்தையும், 'எஃப்.ஏ.சி.எஸ்.' என்னும் ஒரு மதிப்பியல் பட்டத்தையும் அமெரிக்க அரசு அளித்தது.

இந்தியாவில் பஞ்சம், பசி, பட்டினி, நோய் பரவலையும் நேரில் கண்ட ஐடா மக்களின் சுகாதாரப் பராமரிப்புக்காக, நோய் ஒழிப்புக்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். ஐடா திருமணம் செய்து கொள்ளவில்லை. இவர் கொடைக்கானலில் தொண்ணூறாவது வயதில் 1960 மே 23 அன்று காலமானார்.

125 ஆண்டுகள் பழமையான சி.எம்.சி. உள்ளவரைக்கும் ஐடா செய்த பங்களிப்புகளை நினைவுபடுத்தியபடியே இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்ன அழகு... எத்தனை அழகு... ஜான்வி கபூர்!

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

ராகுல் காந்திக்கு 7 நாள் அவகாசம்! அதற்குள்... - தேர்தல் ஆணையத்தின் காலக்கெடு!

அழகிய கண்ணே... ராஷா ததானி!

அரசியலமைப்பை நசுக்கியவர்களே, பாதுகாப்பதைப் போன்று நடிக்கின்றனர்: மோடி

SCROLL FOR NEXT