ஞாயிறு கொண்டாட்டம்

காட்சிக்கு எளியன், கடுஞ்சொல்லன் அல்லன்

அந்த மாணவரின் கையில் விலங்கிட்டு ஆங்கிலேய அரசின் போலீஸார் மதுரை ஆரப்பாளையம் சிறையிலிருந்து நடத்தி, வைகையின் வடகரையிலிருந்த மதுரை மாவட்ட ஆட்சியரின் முன் கொண்டு நிறுத்தினர்.

டி.எஸ்.ஆர். வேங்கடரமணா

அந்த மாணவரின் கையில் விலங்கிட்டு ஆங்கிலேய அரசின் போலீஸார் மதுரை ஆரப்பாளையம் சிறையிலிருந்து நடத்தி, வைகையின் வடகரையிலிருந்த மதுரை மாவட்ட ஆட்சியரின் முன் கொண்டு நிறுத்தினர்.

மகாத்மா காந்தியின் அழைப்பை ஏற்று, 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் கலந்துகொண்ட அந்த மாணவரை அலிபுரம் சிறையில் 60 நாள்கள் அடைக்கும்படி ஆட்சியர் உத்தரவிட்டார். இதனால் அமெரிக்கன் கல்லூரியில் படிக்கவும் சென்னை பல்கலைக்கழகம் தடை விதித்தது.

அவர் மீண்டும் மதுரைக் கல்லூரி மூலமாக பட்டப் படிப்பை முடித்து, திருச்சி புனித வளனார் கல்லூரியில் ஹானர்ஸ் படித்தார். 1948-இல் சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் முதுகலையில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார்.

1952-இல் தமிழ்நாடு அரசுப் பணியில் சேர்ந்து, 1961-இல் கரூர் துணை ஆட்சியராகப் பொறுப்பேற்றார். தன்னுடைய மென்மையான அணுகுமுறையால் அனைவரையும் கவர்ந்தார். அவருடைய பணியைப் பாராட்டி இந்திய ஆட்சிப் பணியை தமிழ்நாடு அரசு வழங்கி சிறப்பித்தது. மத்திய அரசு அவருக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான தாமிரப் பட்டயம் வழங்கியது.

1967 ஜூலை 1-இல் எந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுதந்திரத்துக்கு முன்பு கையில் விலங்கிட்டு நிறுத்தப்பட்டாரோ, அதே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை மாவட்ட ஆட்சியராக மாடிப் படிகளில் ஏறி, ஆட்சியர் அறையில் அமர்ந்து பணியாற்றத் தொடங்கினார். அவர்தான் 'காட்சிக்கு எளியன், கடுஞ்சொல்லன் அல்லன்' என்ற வள்ளுவர் வாக்குக்கு வாழும் உதாரணமாயிருக்கும் லட்சுமிகாந்தன் பாரதி.

2025 அக்டோபர் 4-இல் தன்னுடைய 99 வயதை முடித்து, அக். 5-இல் தன்னுடைய நூறாவது அகவையை தொடங்குகிறார் இவர். இவருக்கு 2024-ஆம் ஆண்டில் தினமணி சார்பில் 'பாரதியார் விருது' வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் 'பாரதி' என்ற பட்டப் பெயருடன் விளங்கும் குடும்பங்கள் இரண்டு. இவ்விரு குடும்பத்தின் மூல புருஷர்களுக்கும் 'பாரதி' பட்டத்தை வழங்கி கெளரவித்தவர் அன்றைய எட்டயபுரம் மகாராஜா. ஒருவர் சுப்ரமணிய பாரதி, மற்றொருவர் லட்சுமிகாந்தன் பாரதியின் தாய்வழித் தாத்தா சோமசுந்தர பாரதி.

இருவருமே எட்டயபுரத்தை பூர்விகமாகக் கொண்டவர்கள். நான் சட்டப் பேரவை உறுப்பினராக அன்றைய அமைச்சர் ராஜாராமுடன் குற்றாலத்திலிருந்து தென்காசிக்கு வந்து கொண்டிருந்தபோது, 'பாரதி நகர்' என்ற பெயரைப் பார்த்தவுடன், 'இது யார் பெயர் தெரியுமா?'' என்கிறத் தகவலைச் சொன்னார் அமைச்சர்.

'நான் வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்தபோது, என்னுடைய துறைச் செயலராக இருந்தவர் லட்சுமிகாந்தன் பாரதி. கடையம் அருகே அருகே ஒரு குடியிருப்பை ஏற்படுத்த வேண்டும் என்று சொல்லி எடுத்த முயற்சியால் வந்த நகர் இது.

சுதந்திரப் போராட்ட வீரரான, ஒரு தியாகக் குடும்பத்தைச் சேர்ந்த அவரின் பெயரையே அந்த காலனிக்கு வைக்க வேண்டும் என்று நான் சொன்னேன். ஓர் அரசு அதிகாரியான தன்னுடைய பெயரை வைக்கக் கூடாது என உறுதியாக, ஆனால், மென்மையாக அவர் ஆட்சேபித்தார். கடைசியாக 'பாரதி நகர்' எனப் பொதுப்பெயர் வைப்போம் என சமரசம் செய்து கொண்டோம்'' என்றார் அமைச்சர் ராஜாராம்.

1942-இல் நடைபெற்ற 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் தந்தை கிருஷ்ணசாமி பாரதி, தாய் லட்சுமி பாரதி, சகோதரி மகாலட்சுமி பாரதி, அன்று ஜூனியர் இன்டர்மீடியேட்

கல்லூரி மாணவனாக இருந்த லட்சுமிகாந்தன் பாரதி அனைவருமே சிறைக்குச் சென்றனர். அவருடன் சிறையிலிருந்த திரவியம் பின்னாளில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக ஆனார்.

லட்சுமிகாந்தன் பாரதி பிரிக்கப்படாத காஞ்சிபுரம், ராமநாதபுரம், மதுரை, கோயம்புத்தூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஆட்சியராகப் பணியாற்றியுள்ளார். இன்று திங்கள்கிழமை

களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மனுநீதி நாளை முதன்முதலில் காஞ்சிபுரம் ஆட்சியராக இருக்கும்போது இவர்தான் தொடங்கினார்.

அதைக் கேள்விப்பட்ட அன்றைய முதல்வர் கருணாநிதி, 'இந்தத் திட்டத்தைப் பாராட்டி, ராமநாதபுரத்தில் நடைபெற்ற ஒரு அரசு விழாவில் இந்தத் திட்டத்தை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் மனுநீதி நாள் என்ற பெயரில் செயல்படுத்துவார்கள்'' என அறிவித்தார்.

இவரது தந்தை கிருஷ்ணசாமி பாரதி மேலூர் சட்டப் பேரவை உறுப்பினராகவும், தாயார் லட்சுமி பாரதி திண்டுக்கல் சட்டப் பேரவை உறுப்பினராகவும் ஒரே காலத்தில் பணியாற்றினர். இதேபோன்ற பெருமை இந்தியாவில் ஆச்சாரிய கிருபளானி, அவரது மனைவி சுசேதா கிருபளானி தம்பதிக்கும் உண்டு.

இந்தியாவுக்கு சுதந்திரம் அறிவிக்கப்பட்ட பிறகு ஏற்படுத்தப்பட்ட அரசியல் நிர்ணயச் சபைக்கு பாரதியின் தந்தை கிருஷ்ணசாமி பாரதி தேர்ந்தெடுக்கப்பட்டு உறுப்பினராகப் பணியாற்றினார். அவர் ராஜாஜியின் தீவிர ஆதரவாளர்.

ராஜபாளையம் அருகேயுள்ள செட்டியார்பட்டியில், மிராசு பார்த்தசாரதி அறக்கட்டளை நடத்தும் ராஜாஜி இலவச மருத்துவமனைக்கு, லட்சுமிகாந்தன் பாரதி தலைவராக இருக்கிறார். அவர் தொடர்புள்ள அறக்கட்டளை என்று தெரிந்தவுடன், தனது நாடாளுமன்ற உறுப்பினர் உதவி நிதியிலிருந்து மருத்துவமனைக்கு ஒரு மருத்துவ ஊர்தியை ஜி.கே.வாசன் அண்மையில் வழங்கி இருக்கிறார்.

ஒருமுறை விருதுநகர் மாவட்ட ஆட்சியரை லட்சுமிகாந்தன் பாரதியுடன் சென்று சந்தித்தேன். மாவட்ட ஆட்சியர், 'உங்களுடைய பணிக்காலத்தில் அரசியல்வாதிகளை எப்படி சமாளித்தீர்கள்?'' என்று கேட்டார்.

'உதவி கேட்டு வருபவரை அரசியல்வாதி அல்லது பொதுமக்கள் என்று பிரிக்காதீர்கள். கோரிக்கை நியாயமாகயிருந்தால் உடனே செய்யுங்கள். கோரிக்கையில் நியாயம் இருந்து விதிகளில் தடையிருந்தால், விதிகளைத் தளர்த்தி உதவுங்கள். எந்தக் காலத்திலும் தவறான கோரிக்கைகளை ஏற்காதீர்கள். அந்தக் கோரிக்கைகளை உறுதியாக, மென்மையாக மறுத்து விடுங்கள்.

நீங்கள், தவறான செயல்களுக்கு உதவ மாட்டீர்கள் என்கிற செய்தி வெளியே தெரிந்தால், நாளடைவில் தவறான கோரிக்கைகளுடன் உங்களை யாரும் அணுக மாட்டார்கள்'' என்றார். இளைஞரான அந்த ஆட்சியர் எழுந்து வந்து அலுவலகத்திலேயே லட்சுமிகாந்தன் பாரதி காலில் விழுந்து ஆசி பெற்றார்.

1952 முதல் 1984 வரை 32 ஆண்டுகள் அரசுப் பணியில் லட்சுமிகாந்தன் பாரதி பணியாற்றினார். வனம், மீன்வளம், கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி ஆகிய துறைகளில் செயலாளராக இருந்தவர். முதல்வர் கருணாநிதியின் அலுவலகத்தில், நேர்முகச் செயலராக எந்த புகாருமின்றி சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்.

அரசு செயலாளராக இருந்தபோது, பணி நிமித்தமாக கென்யா நாட்டுக்குச் சென்று வந்தார். லண்டனுக்குச் செல்ல வாய்ப்பு வந்தபோது, 'நான் ஓய்வு பெற இன்னும் 9 மாதங்களே இருக்கின்றன.

எனது லண்டன் பயணத்தால் அரசுக்கோ மக்களுக்கோ எந்த பயனும் இருக்கப் போவதில்லை. ஆகவே, ஓர் இளம் அதிகாரியை லண்டனில் பயிற்சிக்கு அனுப்புங்கள்'' என அரசுக்கு கடிதம் எழுதி தனக்கு வந்த வாய்ப்பை இன்னொருவருக்கு வழங்கிய பெருந்தன்மைக்குச் சொந்தக்காரர் லட்சுமிகாந்தன் பாரதி.

ஓய்வுக்குப் பிறகு, தமிழ்நாடு திட்டக் குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். மதுரை காந்தி அருங்காட்சியகத்தின் செயலாளராகவும், திருச்செங்கோடு ராஜாஜி ஆஸ்ரமத்தின் தலைவராகவும் சிறப்பாக செயல்பட்டார்.

இன்றும் அரசுப் பேருந்துகளிலும், ரயில்களிலும் இளைஞரைப் போல், தன்னை யார் என்று வெளிப்படுத்திக் கொள்ளாமல் பயணிக்கும் இவர் 1926 அக்டோபர் 5-இல் பிறந்தவர். மாமன் மகள் ஞானத்தை திருமணம் செய்துகொண்டு, நல்வாழ்வு நடத்தும் இவர்களுக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள்.

நூற்றாண்டைத் தொடங்கியிருக்கும் 'தகைசால் தமிழர்' பெரியவர் லட்சுமிகாந்தன் பாரதியுடன் பழகவும், பணியாற்றவும் வாய்ப்பு கிடைத்தது இறைவன் எனக்களித்த கொடை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரணி நகராட்சி குப்பை கொட்டும் இடம் ஆய்வு!

கனிமொழி, கிரிஜா வைத்தியநாதன் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

3 ஆண்டுகளில் 1,968 விவசாயிகள் தற்கொலை: அன்புமணி!

முதல்வா் திறனறித் தோ்வு கையேடு: அமைச்சா் அன்பில் மகேஸ் வெளியிட்டாா்!

விலங்குகளின் அன்பில் அப்பழுக்கு இல்லை!

SCROLL FOR NEXT