கலாம் காட்டிய வழியில் பயணத்தைத் தொடங்கி, இன்று சமூகத்துக்கும், சுய தொழில் முனைவோருக்கும், மருத்துவக் குணமிக்க நறுமண தாவரங்கள் உற்பத்திக்கும் உந்துசக்தியாக விளங்குகிறார், வி.சி. ஸ்ரீராம் நாத் .
திருச்சியைச் சொந்த ஊராகக் கொண்டிருந்தாலும், அப்துல்கலாம் மறைவுக்குப் பிறகு ராமேசுவரம் சென்று அங்கிருந்தே குடும்பத்துடன் சமூகத்துக்காகப் பணியாற்றத் தொடங்கிய இவரது அடையாளமாக மாறியதுதான் ராமேசுவரம் வெட்டிவேர்.
சட்டப்படிப்பு படித்திருந்தாலும், அப்துல்கலாம் மீதான ஈடுபட்டால் திருவெறும்பூரில், இளைஞர்களுக்கு வழிகாட்டும் புத்தகங்கள் விற்பனையை சிறிய அளவில் தொடங்கினார். பின்னர், ஆட்டோ மூலம் நடமாடும் புத்தக விற்பனையகமாக மாற்றினார். கலாம் மறைந்த செய்தி அறிந்து, ராமேசுவரம் சென்றவர், கலாம் நினைவிடமான பேய்கரும்பு பகுதியிலேயே குடும்பத்துடன் குடியேறினார். அங்கு மண் அரிப்பைத் தடுக்கவும், சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும் வெட்டிவேர் விவசாயம் குறித்த பிரசாரத்தைத் தொடங்கினார்.
கலாம் நினைவிடத்துக்கு அருகிலேயே 3 ஏக்கரில் வெட்டி வேர் நடவு செய்து, நினைவிடத்துக்கு வரும் அனைவருக்கும் வெட்டிவேர் நாற்றுகளை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கரோனா பெருந்தொற்று காலத்தில், வெட்டிவேர் தொடர்பாக பல்வேறு புத்தகங்களைப் படிக்க நேரிட்டது. அதுதான், ராமேசுவரம் வெட்டிவேர் சுற்றுச் சூழல் அறக்கட்டளை தொடங்க, இவரது மனதில் விதையாக ஊன்றியது. இன்று, விருட்சமாக வளர்ந்து நிற்கிறது.
ஆம், வெட்டிவேர் விவசாயம்! வெட்டி வேரிலிருந்து எண்ணெய் பிரித்து எடுத்தல், வெட்டி வேரில் கைவினைப் பொருள்கள் தயாரித்தல், மருத்துவ தயாரிப்புகளுக்கு எண்ணெய் வழங்குதல், நறுமணப் பொருள்கள் தயாரிப்புக்கு எண்ணெய் வழங்குதல் என ஒரே பொருளில் பல்வேறு தொழில்களை அறிமுகம் செய்தார். இவற்றை வர்த்தகமாக மாற்ற விரும்பாது, தன்னை நாடி வருவோருக்கு வெட்டிவேர் விவசாயம் செய்யவும், சுய தொழில் தொடங்கவும் வழிகாட்டியாகவே செயல்படுகிறார்.
மத்திய அரசின் தொழில்துறை மற்றும் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் இயங்கும், மத்திய மருத்துவ மற்றும் நறுமண தாவர நிறுவனத்தின் உதவியைப் பெற்று படித்த, படிப்பறிவு இல்லாத இளைஞர்கள், பெண்கள் பலரும் சொந்தக் காலில் நிற்க வழிகாட்டுகிறார்.
இதற்கு வலுசேர்க்கும் வகையில், தனது அறக்கட்டளையின் நிறுவனத்தலைவராக, திருச்சியைச் சேர்ந்த எக்ùஸல் குழுமங்களின் தலைவர் எம்.எம்.எம். முருகானந்தத்தையும் இணைத்துக் கொண்டார். அறக்கட்டளையின் நிறுவன செயலராக ஸ்ரீராம் நாத் செயல்படுகிறார்.
இதுதொடர்பாக, வி.சி. ஸ்ரீராம் நாத் கூறுகையில், ""சோழ மன்னர்கள் காலத்தில் நீர்நிலைகளில் மண்அரிப்பைத் தடுக்க வெட்டி வேர்தான் பிரதானமாக இருந்தது. பழங்காலத்தில் மருத்துவ குணமளிக்கும் வகையில் பல பயன்பாடுகளுக்கு முக்கியமாக இருந்தது. காலப்போக்கில் இதனை மறந்துவிட்டனர்.
இப்போது, மீண்டும் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. வெட்டிவேர் மட்டும் விவசாயம் செய்து வழங்கினால் ஒரு ஏக்கருக்கு செலவு போக ரூ.70 ஆயிரம் லாபம் ஈட்டலாம். மதிப்புக் கூட்டிய பொருளாக எண்ணெய் தயாரித்து வழங்கினால், ஒரு ஏக்கரில் உற்பத்தியாகும் ஒன்றரை டன் வெட்டிவேரில் 15 லிட்டர் எண்ணெய் எடுக்கலாம். இதில், உற்பத்திச் செலவுபோக ரூ.1.50 லட்சம் வருவாய் ஈட்டலாம்.
இதுமட்டுமல்லாது, வெட்டி வேர் செடி முழுவதையும் பல்வேறு வகைகளில் பயன்படுத்தலாம். இயற்கை உரமாகவும் பயன்படுத்தலாம். வேரிலிருந்து மாலைகள், தெய்வ உருவங்கள், பொம்மைகள், அலங்காரப் பொருள்கள், விரிப்புகள், ஆடைகள், கைவினைப் பொருள்கள் எனப் பல்வேறு வகையான மதிப்புக் கூட்டிய பொருள்களும் உற்பத்தி செய்யலாம். சுய தொழில் தொடங்க முன்வருவோருக்கு நாற்று வழங்கி, கடனுதவி வழங்கி, தொழில்நுட்ப ஆலோசனைகளையும் மத்திய அரசு வழங்குகிறது.
தொடக்கத்தில் ராமேசுவரத்தில் 3 ஏக்கரில் உற்பத்தி செய்யப்பட்டது. இப்போது, காவிரி கல்லணை பகுதியில் 3 ஏக்கரில் உற்பத்தி செய்து வருகிறோம். புனிதத் தீவுகளான ராமேசுவரத்தையும், திருவரங்கத்தையும் இணைத்து புவியெங்கும் தெய்வீக மணம் பரப்புவது மட்டுமல்லாது, மருத்துவ மற்றும் நறுமணப் பொருள்கள் உற்பத்திக்கான இணைப்புப் பாலமாக விளங்குகிறது ராமேசுவரம் வெட்டி வேர்'' என்கிறார் பெருமிதமாக.
கடலூர் மாவட்டத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெட்டி வேர் பயிரிடப்பட்டு வருகிறது. தன்னை நாடி வந்தோரை தொழில்முனைவோராக மாற்றியனுப்புவதே பிரதான பணியாகக் கொண்டு செயல்படுகிறார் கலாமின் மானசீக சீடரான வி.சி. ஸ்ரீராம் நாத்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.