ஞாயிறு கொண்டாட்டம்

15000 அடி உயரத்தில் கிரிக்கெட்!

அடர்த்தியான காடுகளில் 5 கி.மீ. லேசான மலை ஏற்றம் செய்தால் மாடா கிராமத்தை அடையலாம்.

தினமணி செய்திச் சேவை

ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் நகரத்திலிருந்து கிழக்கே சுமார் 60 கி.மீ. தூரத்தில் உள்ளது கிர்ஜன் பள்ளத்தாக்கு. இதற்கு கிர்ஜன் தோக், ஏழு ஏரிகளின் பள்ளத்தாக்கு என்ற பெயர்களும் உண்டு. இது சார்ந்து ஒரு கதையும் கூறுகின்றனர்.

ஒருசமயம் இந்தப் பகுதியை கிர்கன் தேவ் என்ற மன்னர் ஆண்டு வந்தார். அவருக்கு ஆறு மகன்கள் மற்றும் ஒரு மகள். அவருக்கு சில காலத்துக்குப் பின்னர் வாழ்க்கை அலுத்தது. அதனால் மகன் மற்றும் மகளிடம், 'நான் மீதிக் காலத்தைத் தனியாகக் கழிக்க விரும்புகிறேன். அதற்கு ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து வாருங்கள்'' என அனுப்பி வைத்தார்.

அவர்கள் தேடி ஓர் இடத்தைக் கண்டுபிடித்துத் திரும்பினர். ஆனால், ஒருமகன் மட்டும் திரும்பவில்லை. ஒரு வழியாக அவன் இருக்கும் இடத்தை அறிந்ததும், மன்னர் மற்ற மகன் மற்றும் மகளுடன் சென்று அந்த இடத்தைப் பார்க்கச்சென்றார்.

அங்கு ஓரிடத்தில் அந்த மகன் உட்கார்ந்திருந்தான். அவன், 'நான் இங்கேயே நிரந்தரமாய் இருக்கப்போகிறேன்'' என்றுகூறி, திரும்பிவர அடம்பிடித்தான்.

'வாழவேண்டிய வயதில் இங்கு தங்குவதா?' எனக் கோபம் அடைந்த மன்னர், அவனை அங்கேயே பூமிக்குள் அழுத்திக் கொன்றுவிட்டார்.

பிறகு மற்றவர்களிடம், ' நீங்கள் சென்று ராஜ்ய பரிபாலனம் செய்யுங்கள். இந்த இடம் எனக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. அதனால் நான் இங்கேயே தங்கி தியானம் செய்வேன். நீங்கள் இறந்ததும் ஆறுமகன்களும் மகளும் இந்தப் பகுதியில் ஏரியாக மாற நான்ஆசி வழங்குகிறேன். இந்தப் பகுதி மக்களுக்கு என்றென்றும் உதவுங்கள்'' எனக்கூறி அனுப்பிவிட்டார்.

தந்தையின் வாக்குப்படி அவர்கள் இறந்ததும் அனைவரும் ஏரியாக மாறி இங்கு வாழ்கின்றனர். அவர்கள் பெயரால்தான் ஏழுபள்ளத்தாக்கு எனப் பெயர் வந்தது.

இங்கு கோடை காலத்தில் விவசாயம் செய்கின்றனர். இந்தப் பகுதி 15000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. பெரம்பலா மலையின் உச்சியிலிருந்து தொடங்கி புத்தல தெஹ்சியின் கடைசி மூலையான ரவின்வாலி தோக் வரை செல்கிறது. வருடத்துக்கு ஐந்து மாதங்கள் பனியால் மூடப்பட்டிருக்கும்.

அடர்த்தியான காடுகளில் 5 கி.மீ. லேசான மலை ஏற்றம் செய்தால் மாடா கிராமத்தை அடையலாம். அங்கிருந்து தொடர்ந்து மலை ஏறினால் மஹாலின் கம்பீர உச்சியை அடையலாம். இந்தப் பகுதி சாகசம் மற்றும் மலை ஏறுதலுக்கு பிரபலம். இங்கு அமைதி, சுவையான உணவு கிடைப்பதால் சுற்றுலாப் பயணியர் வருகின்றனர்.

இங்கு கோடையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி மிகப் பிரபலம். ஜம்மு காஷ்மீரின் பிரபல கிரிக்கெட் குழுக்கள்கூட பங்கெடுக்கின்றன. சுற்றுவட்டார கிராம மக்களும் கிரிக்கெட் போட்டியைக் காணவருகின்றனர். இதனால் இந்தப் பகுதி மக்களை கிரிக்கெட் இணைக்கிறது என்றால் அது மிகையல்ல!

-ஆர். ஆர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவுக்கு எதிராக வரலாறு படைத்த டேரில் மிட்செல்!

குறள் படித்தால் குவலயம் ஆளலாம்!

“திமுக கூட்டணி சரியாக இல்லை!” தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்!

பிக் பாஸுக்கு பிறகு முதல்முறையாக... தாயுடன் விஜே பார்வதி!

SCROLL FOR NEXT