முகப்பு
தமிழ்மணி

பாயிரப் பாடலே காரணம்!

சிலப்பதிகாரம் சிறப்புற்று விளங்க முதற்காரணம் அதன் பாயிரப் பாடலே! ""அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்று ஆவதூஉம் உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம் சூழ்வினைச் ச

Updated On : 27 டிசம்பர், 2023 at 4:10 PM
பகிர்:

சிலப்பதிகாரம் சிறப்புற்று விளங்க முதற்காரணம் அதன் பாயிரப் பாடலே!

""அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்று ஆவதூஉம்

உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்

Advertisement

ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்

சூழ்வினைச் சிலம்பு காரணமாக''

எனும் பாடலே பாமரன் முதல் பண்டிதன் வரை படிக்கத் தூண்டியது எனலாம். சிலம்பின் பாட்டியல் போக்கின் கிளையே மணிமேகலை எனினும் அருகனின் புகழ்பாடும் சமயமும் துறவும் மிகையாய் போற்றப்படுதலால் சாதாரணப் பாமரனின் உணர்வுகளோடு சமனிடப்படாத நிலை மணிமேகலைக் காப்பியத்துக்கு அமைந்துவிடுகிறது.

""அமுத சுரபியின் அகன்கரை நிறைதரப்

பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுகென

ஆதிரை யிட்டனள் ஆருயிர் மருந்தென''

அன்னமிட்டதை அழகுறச் சாத்தனார் அருளினும் மின்னலென ஓடி மறைவதாகவே உள்ளது மணிமேகலைக் காப்பியம். மணிமேகலைக் காப்பியத்தின் கவிதைப் போக்கு சிலப்பதிகாரத்தினும் எளிய நடையே எனினும் ஈர்ப்புக் குறைந்ததற்கு, அதன் இயல்பு வாழ்வின் முரண்பட்ட கருத்தான துறவின் தாக்கமே எனலாம். காவிய நாயகி கருணை வடிவானவள். நாயகனோ காமத்தில் அலைந்து கடிமணம் செய்யத் துடித்தும் அவன் கவனத்தை மாற்றத் துணியும் காவியப் போக்கு,  இலக்கியவாதிகளுக்கு மட்டுமன்றி பாமரனுக்கும் அது வேற்றாய்த் தோன்றுவதில் வியப்பேது!

சமயமும் துறவும் சாற்றியது இஃது எனில் காமமே கருத்தாய்க் கழறுவது சீவகசிந்தாமணி. இதன் காமச்சுவையை சிலப்பதிகாரமும் சிற்சில இடங்களில் மிகுதியாகச் சொல்கிறது. உண்மையான அதன் கவிதைப் போக்கும் காவியச் சுவையும் மாறாமல் சுவைக்கிறது. விருத்தப்பாக்களால் முதன்முதலில் தோன்றிய மணநூலாம் சீவகசிந்தாமணியின் ஆசிரியரோ சமணத் துறவி திருத்தக்கதேவர். துறவி எழுதிய மணநூல்-விருத்தமெனினும் தேவரின் காவியத்துள் வருத்தத்துக்கு ஒன்றுமில்லை.

திருக்குறளின் காமத்துப்பால் காட்டும் சுவைக்கு ஈடாகத் திருத்தக்கதேவரின் "மணநூல்' காட்டும் சுவை சற்றுக் குறைவெனவே கூற வேண்டும். ஈடற்ற விருத்த நடை, உவமைகள், உருவகம் என உயர்ந்த ஒப்பீடுகள் ஆற்றொழுக்கென கவிதைப்போக்கு, அசைவில்லாமல் நிலை நிறுத்தும் சீவகசிந்தாமணி பேசப்படாதது வியப்புதான்.

வாழ்வியலிலிருந்து விலகி, சமயம் சார்ந்து துறவை வலியுறுத்தும் போக்கு மணிமேகலை, சீவகசிந்தாமணி போல்  சிலப்பதிகாரத்தில் இல்லை.

பெரும்பாலான மக்களின் வாழ்வையும் வாழ்வியல் பண்புகளையும் நிகழ்வுகளையும் தன்னிடத்தே கொண்டதால்தான் சிலப்பதிகாரம், மகாகவி பாரதி சொன்னதுபோல இன்னும் நெஞ்சை அள்ளிக்கொண்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments