முகப்பு
தமிழ்மணி

சுமையல்ல சுகமே...!

 மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் ஆசிரியர் யார் என்ற கேள்விக்கு, குமரகுருபரர் என்பது எப்படி சரியான பதிலோ, அப்படியே சுப்பிரமணியக் கவிராயர் என்ற பதிலும்! ஒரே நூலுக்கு இரண்டுபேர் எப்படி ஆசிரியராக இருக்க மு

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:17 PM
பகிர்:

 மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் ஆசிரியர் யார் என்ற கேள்விக்கு, குமரகுருபரர் என்பது எப்படி சரியான பதிலோ, அப்படியே சுப்பிரமணியக் கவிராயர் என்ற பதிலும்! ஒரே நூலுக்கு இரண்டுபேர் எப்படி ஆசிரியராக இருக்க முடியும்? வினாவிலேயே அதற்கான விடையும் இருக்கிறது. ஆசிரியர் இருவர்தான்; நூல்களும் இரண்டுதான்!

 ÷குமரகுருபரர் இயற்றியது மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ். சுப்பிரமணியக் கவிராயர் இயற்றியது அரிமழம் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ். கற்பனை நயமும், கவிதை வளமும் நிரம்பித் ததும்பும் இந்நூலுள் சொற்பொருள் புதுமையும் அழகு. சான்றுக்கு ஒரு பாடல்.

 அளவுஒன்று ஏறும் காடதனை

Advertisement

 யண்முங் கிளையி னாமலர்கள்

 அளவுஒன்று ஏறும் அழகைமழை

 யாகச் சொரியும் அக்கிளையை

 அளவுஒன்று ஏறும் கொங்கைஎன

 அமருமேகம்ஆங்(கு) அதுகண்(டு)

 அளவுஒன்று ஏறும் அளவு

 நடமாடும் அதற்குப் பரிசாக

 அளவுஒன்று ஏறும் திரைகண்கள்

 அமரும் வெண்முத் தினைவீசும்

 அளவுஒன்று ஏறும் யானைபுனைந்

 தவரும் மகிழ இவ்விதமாம்

 வளம்ஒன்றியகா அரிமழத்தின்

 வாழ்வே வருக வருகவே!

 மலைகட்கு அரசாய் விளங்கு

 மலை மகளே வருக வருகவே!

 (வருகைப் பத்து:பா.61)

 "மலைகளுக்கெல்லாம் அரசாய் விளங்கும் இமயமலையில் தோன்றிய பெண்ணே, நீ தங்கியிருக்கும் அரிமழமானது உன் கணவன் சிவனால் விரும்பத்தகும் வளமுடையது' என்பது இப்பாடலின் சுருக்கப் பொருள். இப்பாடலில் அரிமழ வளம் பின்வருமாறு சொல்லப்பெறுகிறது. "வானளாவி உயர்ந்தன மரங்கள். அவற்றின் கிளைகளில் பூத்துச்சொரியும் மலர்களில் இருந்து மழையெனப் பொழியும் தேன். அம்மரக்கிளைகளில் வந்து தங்கி இளைப்பாறுவன மேகங்கள். அவற்றைக்கண்டு ஆடும் மயில்கள். அந்நடனத்திற்குப் பரிசாய், தம் கணுக்களில் இருந்து முத்து உதிர்க்கின்றன கரும்புகள். இந்த எழிலைக்கண்டு காரி(விடம்)உண்ட கண்டனாகிய சிவன், களித்தபடி வீற்றிருக்கும் வளம் பொருந்திய நகரம் அரிமழம்' என்று வருணிக்கிறார் புலவர். இப்பாடலில் அளவொன்றேறும் என்ற சொல், ஆறுமுறை வந்து வேறுவேறு பொருள் தந்து விளக்குவதுதான் அழகு.

 ÷அளவு என்பது எழுத்தின் மாத்திரையைக் குறிப்பது. ஏறும் என்பது, ஒரு மாத்திரை இரண்டு மாத்திரையாக ஏறியதைக் குறிப்பது. அளவு ஒன்று ஏறும் என்ற அடைமொழியோடு, காடு, அழகு, கொங்கை, அளவு, திரை, யானை என்ற ஆறு சொற்கள் உள்ளன. இச்சொற்களுக்குப் பொருத்தமான குறிலில் தொடங்கும் வேறு சொற்களைக் கண்டறிந்து அவற்றை நெடிலில் தொடங்கும் சொற்களாக மாற்றிப் பொருள் கொண்டால்தான் இந்தப் பாடல் புரியும்.

 ÷1. அளவுஒன்று ஏறும்காடு - காடு என்பது வனம். வனத்தில் உள்ள வ எனும் குறிலில் அளவு ஒன்று ஏறினால், வானம். அதுபோல், 2. அளவு ஒன்று ஏறும் அழகு - அழகு என்பதன் வேறு சொல் தென்; அளவு ஏறிய பின்

 தேன். 3. இதே அமைப்பில், கொங்கை - இதன் வேறுபெயர் தனம்; அளவு ஏறியபின் இது தானம். 4. அளவு ஒன்று ஏறும் அளவு - தொகை; அது அளவு ஒன்று ஏற, தோகை (இது மயிலைக் குறிப்பது) 5. அதுபோல் திரை - இதனைக் குறிக்கும் இன்னொரு சொல் அலை; அளவு ஒன்று ஏற, ஆலை (கரும்பாலை). 6. அளவு ஒன்று ஏறும் யானை. இதன் வேறு பெயர் கரி; அளவு ஏற, காரி (விடம்) (இது விடமுண்ட கண்டன் சிவனைக் குறிப்பது) அளவுக்குமேல் அளவு ஏறிய வளத்தை இதைவிட எப்படிச் சொல்ல முடியும்?

 ÷இந்தக் குறிப்போடு பாடலைப் பாருங்கள். சந்திபிரிக்காமல் சேர்த்துச் சந்(த்)தமாய்ப் பாடுங்கள். அரிமழ வளமும் அன்னை மீனாட்சி உருவும் கண்முன் தோன்றும். சுப்பிரமணியக் கவிராயர் ஒப்புயர்வற்று எழுவார். அப்படியே நூல் முழுவதும் பாடினால், இது அரங்கேறிய ஆண்டிற்குப் போய்விடலாம். அதாவது, 1908. சரியாக ஒரு நூற்றாண்டுக்குப் பின் இதைத் தேடிக் கண்டுபிடித்து அச்சேற்றிய அரிமழத்துக்காரர் பேராசிரியர் இராம.இராமநாதன்; உரை வகுத்த பேராசிரியர் தெ.முருகசாமி ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்.

 ÷கனியிடை ஏறிய சுவைபோல், இக்கவியிடை ஏறிய சுவையும், பாடும் சுகமும் தமிழ் தந்த வரம் அல்லவா? பிள்ளைத்தமிழ் நூலின் - அதுவும் மீனாட்சியம்மை மீதான பிள்ளைத்தமிழ் நூலின் - அளவில் ஒன்று இதனால் ஏறியது சுகமானதுதான். சுமையானது இல்லை அல்லவா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments