தமிழ்மணி

தலைவியின் காதல் நெஞ்சம்!

சங்ககாலத் தலைவி ஒருத்தி, தலைவனின் நினைவோடு இருக்கிறாள். அப்படி இருப்பவளுக்கு "கனவு' வருகிறது. இன்பமான நல்ல கனவுகள் உடம்பை அழகாக்கும்; பொலிவுதரும். அப்படித் தன் கனவில் தலைவனைக் கண்ட தலைவியின் அழகுக் கூ

எல்.இரவி

சங்ககாலத் தலைவி ஒருத்தி, தலைவனின் நினைவோடு இருக்கிறாள். அப்படி இருப்பவளுக்கு "கனவு' வருகிறது. இன்பமான நல்ல கனவுகள் உடம்பை அழகாக்கும்; பொலிவுதரும். அப்படித் தன் கனவில் தலைவனைக் கண்ட தலைவியின் அழகுக் கூடியுள்ளதைக் கண்ட தோழி, ""என்ன தலைவியே! நம் தலைவரைக் கண்டது போலப் புதிய அழகினைப் பெற்றிருக்கின்றாயே?'' என்று கேட்கிறாள்.

 ÷""ஆம்! நனவில் வராத அந்த நல்லவனை கனவில் கண்டு யான் செய்தது இது!''

 என்கிறாள் தலைவி.

 ÷தலைவனின் பிரிவு, அதனால் ஏற்பட்ட வருத்தம், கடற்கரை அருகில் உள்ள தாழை மரங்களில் வளைந்த கொம்பில் அமர்ந்திருக்கும் நாரைகளின் கூவல், தலைவியின் ஏக்கத்தை அதிகரித்த இவ்வேளையில், அத் தலைவி கண்ட சுகமான கனவை, கலித்தொகை பாடல் ஒன்று இவ்வாறு படம் பிடித்துக் காட்டுகிறது.

 ""தோள் துறந்தருளாதவர் போல் நின்று

 வாடை தூக்க வணங்கிய தாழை

 ஆடு கோட்டிருந்த அசைநடை நாரை

 நனியிருங் கங்குல் நந்துயர் அறியாது

 அளியின்று பிணியின்று விளியாது நரலும்

 கானலஞ் சேர்ப்பனைக் கண்டாய் போலப்

 புதுவது கவினினை என்றியாயின்,

 நனவின் வாரா நயனிலாளனைக்

 கனவிற் கண்டு யான் செய்தது...!''

 ÷அடுத்து, மாதர்கள் எவ்வளவுக்கெவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு அவர்கள் உடம்பில் அழகு கூடிப் பொலிவுறும். காதலர் எஞ்ஞான்றும் அவருடன் கூடி நல்லியல்புகளால் அளவளாவி இருப்பாரானால், "பசலை' நோய் அவர்பால் இருக்குமிடம் தெரியாமல் முற்றும் நீங்கியிருக்கும். உள்ளத்தின் மகிழ்ச்சிக்கும், உடம்பின் நலத்திற்கும் எவ்வளவு நெருங்கிய தொடர்பு இருக்கிறது பாருங்கள்!

 ÷இந்தத் தலைவியின் காதல் நெஞ்சத்தை நீர் நிலைகளில் இருக்கும் "பாசி'யோடு ஒப்பிடுகிறார் புலவர். நீரில் பாசி இருப்பது இயல்பு. உண்ணும் நீர் பொருந்திய நீர் நிலைகளில் பாசி இருந்தால், ஊரார் அதனை நீக்கி உண்ண வேண்டியிருக்கும். மக்கள் நீர்த்துறையிலிருந்து நீங்கினால், பாசி மீண்டும் நீரை மூடிக்கொள்ளும். அதுபோல, தலைவனுடன் கூடியிருக்கும்போது மகிழ்ச்சியையும், அவன் பிரிந்தபோது துயரத்தையும் அடைய நேரிடுகிறது எனக் குறுந்தொகை பாடல் ஒன்று தலைவியின் காதலை இவ்வாறு கூறுகிறது.

 ÷

 ""ஊருண் கேணி உண்துறைத் தொக்க

 பாசி யற்றே பசலை, காதலர்

 தொடுவுழித் தொடுவுழி நீங்கி

 விடுவுழி விடுவுழிப் பரத்தலானே...!''

 ÷இவ்வாறு சங்கப் பாடல்கள் பலவற்றிலும் தலைவியின் காதல் நெஞ்சம் விரிவாகவும் சிறப்பாகவும் பேசப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆன்லான் ஹெல்த்கேர் பங்குகள் 1% உயர்வு!

சத்தீஸ்கரில் 5 நக்சல்கள் கைது! வெடிகுண்டுகள் பறிமுதல்!

வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிதி: பிரதமருக்கு கோரிக்கை

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிக்கும் புதிய படம்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT