முகப்பு
தமிழ்மணி

தமிழ்ச் செல்வங்கள்: சொல் - 3

சொல்லின் ஆட்சி வழக்கில் எப்படியெல்லாமோ விளங்குகின்றது. ""அவரைப் பார்த்தேன்; வாய் திறந்து ஒரு சொல்கூடச் சொல்லவில்லை.

பகிர்:

சொல்லின் ஆட்சி வழக்கில் எப்படியெல்லாமோ விளங்குகின்றது. ""அவரைப் பார்த்தேன்; வாய் திறந்து ஒரு சொல்கூடச் சொல்லவில்லை. அவ்வளவு செருக்கு'' - என்று பழி சொல்வதில்லையா? இதனால் பண்பாட்டின் சின்னம் சொல் என்பது புலப்படும்.

""நீங்கள் ஒரு சொல் சொன்னாலும் போதும்; கட்டாயம் நடந்துவிடும்'' - என்பதில் சொல்வாக்கின் செல்வாக்குப் புலப்படும்.

""ஒரு சொல் சொல்லி வைக்கவும்; இல்லையானால் நடப்பதே வேறு'' - என்பதில் கண்டிப்பும் எச்சரிப்பும் புலப்படும்.

Advertisement

""ஒரு சொல்லுக்குச் சொன்னேன்'' - என்பதில் சும்மா, ஒரு பேச்சுக்கு என்பது சொல்லின் பொருளாதல் விளங்கும்.

""பல்லக்கு ஏறுவதும் சொல்லாலே; பல் உடைபடுவதும் சொல்லாலே'' என்பதில் புகழும் இகழும் தருவது சொல் என்பது விளக்கமாகின்றது.

"சொற்றுணை' என்பது மிக உயர்ந்த துணையாம். பேசாக்குழந்தை எனினும் பேச்சுத் துணையாக விளங்குதல் கண்கூடு. பேச்சுத் துணையும், துயர்த்துணையுமாக இருந்த தோழமையர் பழ நாளில் "உசாத்துணை' என்றும், "அசாத்துணை' என்றும் வழங்கப்பட்டனர். உசாவுதல் - கலந்து பேசுதல்; அசாவுதல் - அயர்வு, சோர்வு.

இறைவனையே சொல் வடிவாகக் கண்டது தமிழ் நெறி. இறைவனைச் சொற்றுணையாகக் கண்டார் நாவுக்கரசர். அவரையே தமிழுலகம் "சொற்கோ', "சொல்லின் வேந்தர்', "நாவரசர்' எனப் பலவாறு கண்டது.

அருணகிரியார் சந்தத்தில் மகிழ்ந்த புலமை உலகம் "வாக்கிற்கு அருணகிரி' என்றது. புதுப் பெண்ணுக்குப் புகுந்த வீட்டில் ஒரு பேச்சுத் துணை வேண்டும். கட்டாயம் வேண்டும். அவள் தன்னை ஒத்த அல்லது இளைய வயதினளாகவும் இருக்க வேண்டும். அக்குடும்பத்தின் உறுப்பாகவும் வழிமுறைக் காப்பாகவும் இருத்தல் வேண்டும். அவளே இருபாலும் நலம் சேர்ப்பவளாம். அவள் தன் கணவனின் தங்கையாம். நங்கை என்பாளும் அவள். அதனால், அவளை மக்கள் நாத்துணையாள் (நாத்தினாள்) என்றனர். அது பழந்தமிழ்ச் சொல்லின் சிதைந்த வடிவு. ""நாத்தூண் நங்கை'' என்பார் இளங்கோவடிகள்.

"இறைவன் சொல்லாக இருந்தான்; அவனோடு சொல் இருந்தது' என்பது விவிலியம்.

""இறைவன் சொல்; இறைவி சொல்லின் பொருள்'' என்பது தமிழ் நெறி. சொல் என்பதற்கு வியப்பான ஒரு பொருள் "கள்' என்பது. அதனைச் "சொல் விளம்பி' என்பது, கட்குடியர் சொல்வது. சொல்லக் கூடாதவற்றை யெல்லாம் மதுவைக் குடித்தால் கூறிவிடுவான்! அப்பொருள், காவல் துறைக்கு வாய்த்த அரும் பெரும் பொருள், துப்புத் துலக்க!

தொடர்வோம்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments