முகப்பு
தமிழ்மணி

சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்

சைவசித்தாந்த சாத்திரங்கள் பதினான்கினுள் கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் எட்டு நூல்களை அருளிச் செய்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2013 at 2:27 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:41 PM

சைவசித்தாந்த சாத்திரங்கள் பதினான்கினுள் கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் எட்டு நூல்களை அருளிச் செய்துள்ளார். அவற்றில் ஒன்று சிவப்பிரகாசம். இந்நூல் காப்புச் செய்யுள் உட்பட 101 பாடல்களை உடையது. அப்பாடல்களுள் ஒன்று சமய இலக்கியத்தைக் கற்பவர்கள் மூன்று வகையினராக விளங்குவர் என்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

முதல் வகையினர்

பழைய இலக்கியம் என்பவை முற்றிலும் நன்றாகா; இன்று புதிதாகத் தோன்றிய இலக்கியங்கள் எல்லாம் தீதாகா. ஒன்றை பல நிலையில் வைத்து எண்ணிச் சிந்தித்து அவற்றுள் இது நல்லது, இது கெட்டது என்று துணியும் நல்லியல்புடையவர்கள் சிறந்த மாணிக்க மணியை அழுக்குப் புடவையிலே முடிந்திருந்தாலும் புடவையின் குற்றம் நோக்காமல் மாணிக்கத்தினுடைய நலத்தையே கொள்வர். அஃதாவது, புற இயல்பைத் தள்ளி உள்ளியல்பாகிய உண்மையையே நாடுவர்; இவரெல்லாம் முதல் வகையினராவர்.

Advertisement

நடுவகையினர்

கிடைத்த மாணிக்கமணி தொன்று தொட்டே களங்கம் இல்லாமல் அழகாயிருக்கிறதா என்பதை மட்டும் ஆராய்வர். அவ்வாறு ஆராய்ந்து அம்மணி தொன்று தொட்டே அழகுடையதாயின் அதனை அணிந்து கொள்வர்.

கடையாயவர்

பொருளின்கண் சார்ந்த குற்றத்தையும் குணத்தையும் ஆராய்ந்து எண்ணித் துணியும் அறிவில்லாதவர் மூன்றாம் வகையினராகிய கடையராவர். இவர்கள், சிறந்த மாணிக்கமணியை ஒருவர் உயர்த்திக் கூறினால் இவரும் உயர்த்திக் கூறுவர்; தாழ்த்திக் கூறினால் இவரும் தாழ்த்திக் கூறுவர்; அஃதாவது, இவருடைய இயல்பு எத்தகையது எனில், தாமாக ஆராய்தலும் துணிதலும் இல்லாதவர் என்க. மேற்செய்தியை உமாபதி சிவாசாரியார் பின்வரும் பாடலொன்றில் எடுத்தோதியுள்ளார்.

மேற்பாடல் சமய இலக்கியத்தைக் கற்கும் மக்களை மூவகையினராக வகைப்படுத்திக் கூறியதாகக் கொண்டாலும், பாடலின் உள்ளார்ந்த கருத்து வருமாறு:

÷சமய இலக்கியத்தைக் கற்கும் முதல் வகையினர், நூலின் உண்மையை ஆராய்ந்து உவப்பர்; இரண்டாம் வகையினர் நூலின் செம்மையை நோக்கி உவப்பர்; மூன்றாம் வகையினர் புகழ்ந்தால் புகழ்வர், இகழ்ந்தால் இகழ்வர். இருப்பினும் பெரியோர்கள் இந்நூலில் (சிவப்பிரகாசம்) குற்றம் நோக்காது உவப்பர் என்பது ஆசிரியர் கருத்தாம். அத்துடன், இப்பாட்டு பாயிரத்துள் அவையடக்கத்தின் பாற்பட்டதாகும்.

தொன்மையவாம் எனும்எவையும் நன்றாகா; இன்று

தோன்றியநூல் எனும்எவையும் தீதாகா; துணிந்த

நன்மையினார் நலங்கொள்மணி பொதியும்அதன் களங்கம்

நவையாகா எனஉண்மை நயந்திடுவர்; நடுவாம்

தன்மையினார் பழமைஅழகு ஆராய்ந்து தரிப்பர்;

தவறுநலம் பொருளின்கண் சார்வாராய்ந்து அறிதல்

இன்மையினார் பலர்புகழில் ஏத்துவரே ஏதிலரும்

இகழ்ந்தனரேல் இகழ்ந்திடுவர் தமக்கெனவொன்று இலரே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.