முகப்பு
தமிழ்மணி

தமிழ்ச் செல்வங்கள் - தமிழ் 3

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' - உயிர்மையின் உணர்வு சார்ந்த முறை. ஆனால், மக்களிலும் மற்றை உயிரிகளிலும் வலியவையும், மெலியவையும் இலையா? இவற்றின் இடைப்பட்டவையும் இலவா?

பகிர்:

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' - உயிர்மையின் உணர்வு சார்ந்த முறை. ஆனால், மக்களிலும் மற்றை உயிரிகளிலும் வலியவையும், மெலியவையும் இலையா? இவற்றின் இடைப்பட்டவையும் இலவா?

""வலியோர் சிலர், மெலியோர் தமை'' என்பது கேளாதது இல்லையே! முடியும் அடியும் இருப்பினும் ஒவ்வொருவர்க்கும் இடையும் உண்டே!

மெய்யாம் உடம்பிலேயும் வன்மை, மென்மை, இடைமை இல்லாமல் இல்லையே! நிலத்திலேயும் வன்பால், இடைப்பால், மென்பால் என்னும் பகுப்பு உண்டே! வன்பால் மலை மலைச்சார்பு (குறிஞ்சி); இடைப்பால் காடும் காடு சார்பும் (முல்லை); மென்பால் வயலும் வயல் சார்பும், கடல் சார்பும் (மருதம், நெய்தல்) இவ்வியற்கை இயல் கண்டே, தமிழ் மெய்யெழுத்துகளை, வல்லினம், மெல்லினம், இடையினம் எனப் பகுத்தனர்.

Advertisement

ஒரு வல்லினம், ஒரு மெல்லினம், ஒரு வல்லினம், ஒரு மெல்லினம் என, கங, சஞ, டண, தந, பம என வைத்தனர். வைப்புமுறை மட்டுமன்றிச் சொற்களிலும் அமைத்தனர். தங்கம், மஞ்சள், வண்டல், தந்தம், கும்பல். மென்மையில் இருந்து வன்மையுறுதல் இயற்கை இயல்பாம்; அம்முறை கொண்டவையே இம்முறை.

வல்லினம் நெஞ்சில் இருந்தும், மெல்லினம் மூக்கில் இருந்தும் பிறப்பது போல், இடையினம் தன் பெயருக்கு ஏற்ப மார்புக்கும் மூக்குக்கும் இடைப்பட்ட கழுத்தில் தோன்றும். அதற்கு ஏற்ப ய, ர, ல, வ, ழ, ள என்னும் இடையினத்தை வைத்து, நிறைவில் "ற' என்னும் வல்லினத்தையும், "ன' என்னும் மெல்லினத்தையும் வைத்து அடங்கலை நிறைவித்தனர். இதனைத் தொல்காப்பியர்,

""எழுத்தெனப் படுப,

அகர முதல னகர இறுவாய்

முப்பஃ தென்ப''

என்றார். திருவள்ளுவர் தம் நூலை அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடித்தார்!

உயிர்களின் வாழ்வில், கால எல்லை வரம்பு பட்டதன்று. ஒருகுடிப் பிறந்தார் தாமும் ஒப்ப வாழ்வார் அல்லர். நெடிய வாழ்வினரும், குறிய வாழ்வினரும் ஆதல் எவரும் எங்கும் காண்பதே! ஆதலால், சங்கச் சான்றோர், ""தாமரை இதழ்களினும், மழைத் துளிகளினும், ஆற்று மணலினும் நீடு வாழ்க'' என்று வாழ்த்தினர். எனினும், ""நினக்கென வரைந்த எல்லை வாழிய'' என்று வாழ்த்தினாரும் உளர். இவ்வியற்கை நிலை அறிந்தே உயிரளபெடை, ஒற்றளபெடை என நீண்டு ஒலித்தலையும், குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தக்குறுக்கம் எனக் குறுகி ஒலித்தலையும் மெய்யியல்படி அமைத்தனர்.

ஆய்தம் என்பதன் பொருள் நுணுக்கம். ஆய்தக் குறுக்கமோ நுணுக்கத்தினும் நுணுக்கம். முன்னதற்கு அரை மாத்திரை; பின்னதற்குக் கால் மாத்திரை! அதற்குத் "தனிநிலை' என்பது பெயர்.

மாத்திரையாவது கண்ணிமைப்பும், கைந்நொடிப்பும் ஆகும். கால் மாத்திரையை எப்படிக் காண்பது?

""உன்னல் காலே; ஊன்றல் அரையே;

முறுக்கல் முக்கால்; விடுத்தல் ஒன்றே''

என்பது அளவீடு!

தொடர்வோம்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments