தமிழ்ச் செல்வங்கள்: தமிழ் - 4
தமிழ் எழுத்தமைதி கண்டோம்; தமிழெழுத்தே இசையும் வண்ணமும் ஆதல் முந்தையர் படைப்பின் தேர்ச்சியாம்.
தமிழ் எழுத்தமைதி கண்டோம்; தமிழெழுத்தே இசையும் வண்ணமும் ஆதல் முந்தையர் படைப்பின் தேர்ச்சியாம்.
வண்டு குடியிருக்க மூங்கிலில் துளையிட்டது. அத்துளையின் வழியே காற்று மெல்லெனவும், வல்லெனவும், சுழன்றும், நைந்தும் சென்றது. ஒலி, காற்றுக்குத்தக வெளிப்பட்டது. அதனைக் கூர்ஞ் செவியன் கண்டான்; கேட்டான்; சுவைத்தான். நுண்ணிய தன் நோக்காலும் செயல் திறனாலும் குழலைப் படைத்தான். ஆயனுக்கு மட்டுமன்றி ஆவுக்கும் இன்பமாயிற்று; முல்லை நிலம்வாழ் பறவைகளுக்கும் இனிப்பாயிற்று. மக்களுக்கு உவகை தந்ததால் குழல் முதல் இசைக் கருவியாயிற்று.
குறிஞ்சியான் வேட்டைக் கருவி வில். வில்லுக்கு நாண் நரம்பு; சரியான இறுக்கமா? தொய்வா? என்பது காணச் சுண்டினான். அதற்கு அவன் விரல் பயன்பட்டது. சுண்டு விரல் என்றே முதல் குறு விரலுக்குப் பெயரிட்டுச் சிறப்பித்தான்.
Advertisement
""சிறுவிரல்கள் தடவிப் பரிமாறச்
செங்கண் கோடச் செய்யவாய் கொப்பளிப்பக்
குறுவெயர்ப்புரு வம்கூட லிப்பக்
கோவிந்தன் குழல்கொ டூதின போது
பறவையின் கணங்கள் கூடு துறந்து
வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக்
கறவையின் கணங்கள் கால்பரப் பிட்டுக்
கவிழ்ந்திறங் கிச்செவி யாட்டகில் லாவே''
என்பது பெரியாழ்வார் திருமொழி(நாலா.282).
""ஏழிசைச் சூழல்'' என ஓர் இசைத் தமிழ்ச் சங்கமே இருந்தது மதுரையில். ""ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய்'' என இசையை, இறைமையாய் அடியார்கள் கண்டு திளைத்தனர்.
ஏழிசை என்பது எது?
""குரலே துத்தம் கைக்கிளை உழையே
இளியே விளரி தாரம் என்றிவை
எழுவகை இசைக்கும் எய்தும் பெயரே''
என்பது முதல் நிகண்டாகிய திவாகரம்! ஏழிசை எழுத்துகள் எவை? ""ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒü எனும்
இவ்வே ழெழுத்தும் ஏழிசைக் குரிய'' என்பதும் அந்
நிகண்டே.
ஏழிசை ஓசை எப்படிக் கண்டனர்?
""சங்கு குயில் மயில் யானை புரவி
அன்னம் காடை அவற்றின் ஓசை''
""வண்டு கிள்ளை வாசி மதயானை
தவளை தேனு ஆடு ஏழிசை ஓசை''
என்பவையும் அந்நிகண்டே. புரவியும் வாசியும் குதிரை; தேனு } பசு. குழல், முதல் இசைக்கருவி; யாழ், பின்னர் வந்த கருவி. குழல் மக்கள் கருவி; யாழ், மன்னிசைக் கருவி. முன்னது தொடக்க நிலை; பின்னது வளர்நிலை; அதன் பின்னது வீணை!
பறையோ தொடக்கத் தொடக்கம். யா - கட்டு; வில்யாழ், முதல் யாழ்; பின் இசைக்கெனக் கட்டப்பட்ட ஏழ் நரம்பு யாழ்! ஏழ் - யாழ் ஆயது.
""நரம்பு, விண் விண் எனத் தெறிக்கிறது'' என்பது மக்கள் வழக்கு. விண்-விண் - வீணை; குறில் நெடிலாதல் எ-டு: கண்-காண். விண், ஒலிமட்டுமே கொண்ட ஐம்பூதங்களுள் ஒன்று. விசும்பு என்பதும் அது. மேலெழுதலை "என்ன விசும்புகிறாய்' என்பது மக்கள் வழக்கு.
(தொடர்வோம்....)