சொல் வேட்டை- 50
மார்ஃப் என்ற சொல் கிரேக்க மொழியில், வடிவத்தைக் குறிக்கும் ம்ர்ழ்ல்ட்ங் என்ற சொல்லிலிருந்து பிறந்தது. முதன்முதலில் இச்சொல், பிரெஞ்சுச் சொல்லாகிய ஃபோனீம் (phoneme) என்ற சொல்லின் ஒலி வடிவத்தின் அடிப்படையில் morpheme என்ற சொல்லாக, மொழியியலில் சொல்லின் இலக்கணக்கூறு என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டது.
மார்ஃப் என்ற சொல் கிரேக்க மொழியில், வடிவத்தைக் குறிக்கும் ம்ர்ழ்ல்ட்ங் என்ற சொல்லிலிருந்து பிறந்தது. முதன்முதலில் இச்சொல், பிரெஞ்சுச் சொல்லாகிய ஃபோனீம் (phoneme) என்ற சொல்லின் ஒலி வடிவத்தின் அடிப்படையில் morphemeஎன்ற சொல்லாக, மொழியியலில் சொல்லின் இலக்கணக்கூறு என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டது. ஒரு சொல்லின் மிகச்சிறிய அணுக்கூற்றின் வடிவத்தைக் குறிப்பதற்காக மொழியியலில் உருவாக்கப்பட்ட ம்ர்ழ்ல்ட்ங்ம்ங் என்ற சொல், பின்னாளில், பல்வேறு அறிவியல் துறைகளிலும், மொழியியலிலும் பல்வேறு உருமாற்றங்களையும், பொருள் மாற்றங்களையும் பெற்றது. சொல் இலக்கணக் கூறுகளின் வடிவத்தையும், அவற்றின் வேறுபாடுகளையும் ஆராயும் ஒரு துறையாக மொழியியலில் வளர்ந்த Morphology என்னும் சொல், உயிரியலில் Biology உயிர்ப்பொருளின் வடிவத்தையும், படிமானத்தையும் ஆராயும் ஒரு துறையாகவும், தொல்லியல் துறையில் கலை வேலைப்பாட்டுப் பொருள்களின் வடிவத்தைக் கற்கும் துறையாகவும், வானியலில், கோள்களின் வடிவத்தை ஆராயும் துறையாகவும், பழங்குடியின மக்களைப் பற்றிய ஆராய்ச்சியில் அவர்களது கலைகளின் வடிவத்தைக் கற்கும் துறையாகவும் பயன்பாட்டிற்கு வந்தது. இவை தவிர, இன்னும் பல்வேறு துறைகளில் அந்தந்தத் துறை சார்ந்த பொருள்களின் வடிவங்களை ஆராயும் இயலாக
morphology என்ற சொல் தற்போது பயன்படுத்தப்படுகிறது.
புகைப்படக்கலையும் அதைத்தொடர்ந்து, திரைப்படக்கலையும் வளர்ச்சியுற்ற பின்னால், படங்களில் அனிமேஷன் Animation என்று சொல்லப்படும் உயிரியக்கக் கலையில் இத்தொழில்நுட்பம் பொது மக்களுக்குப் புரியும் இயலாக உருவெடுத்தது. ஒரு விலங்கின் உருவத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி மனித உருவுக்குக் கொண்டுவந்து, மீண்டும் அதே விலங்கு உருவாக மாற்றும் தொழில்நுட்பத்தை 1986-இல் தி கோல்டன் சைல்டு என்ற திரைப்படத்தில் முதன்முதலில் பயன்படுத்தினார்கள். ஆனால், 1988-இல் "வில்லோ' என்ற திரைப்படத்தில் இது பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு, அதற்குப் பின்னால், "இண்டியானா ஜோன்ஸ் அண்டு தி லாஸ்டு க்ருசேடு' என்ற படத்தில் இத்தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டபோது, அது பிரபலம் அடைந்தது.
அதன் பின்னர், கணினித்துறையில் தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்ட பின், திரையில் தோன்றும் உருவங்களை படிப்படியாக மாற்றம் செய்துதரும் தொழில்நுட்பம் morphing என்று தற்போது அறியப்படுகிறது. திரையில் தோன்றும் ஓர் உருவத்தை, இன்னொரு உருவமாக மாற்றிக் காட்டும் சாத்தியக் கூறு அதிகரித்து விட்டதால், தவறு செய்யும்போது பிடிபடுபவர்கள் கூட, திரையில் உள்ள உருவம் தன்னுடையது அல்ல என்று வாதிடும் வாய்ப்பும் அதிகரித்து விட்டது. இவற்றை மனதிற்கொண்டு, இவ்வாரக் கடிதங்களைப் பார்ப்போம்.
ஹரணி, மார்ஃப் என்ற சொல்லுக்கு மொழியியலில் உருபு, உருபன் என்ற பொருள்கள் உள்ளன என்றும், மார்ஃபாலஜி என்பது உருபனியல் என்று அறியப்படும் என்றும், ஓர் உருபனுக்குப் பதில் இன்னொரு உருபன் பயன்படுத்தப்படுவது அலோமார்ஃப் என்று அழைக்கப்படும் என்றும், தற்போது இச்சொல் வடிவமாற்றத்தைக் குறிக்கவே பெருமளவில் பயன்படுத்தப் படுவதால், இச்சொல்லுக்கு வடிவுருமாற்றம், வேற்றுவடிவுரு, வேற்றுரு, மாற்றுரு வடிவு, முகமாற்று, பல்லுரு வடிவு, பல்வடிவு மாற்று, முகமாற்றுரு, வடிவமாற்று, நகலுருமாற்று, பிரதியுரு, ஆளுருமாற்று, மெய்மாற்று, மெய்முகமாற்று, போலியுரு, அசலுருமாற்று, அசல்மாற்று, அசல்வடிவுருமாற்று, உண்மையறு வடிவு, இயல்பிலா உருவடிவு, மாறுமுகவடிவு, மாற்றுமுகவடிவு, பல்மாற்றுரு, பல்மாற்று வடிவு, மாற்றறியாவடிவு, வேற்றுணரா வடிவு, மாற்றுருநிலை, புதிர்முகவுரு, நகல்வடிவு, மூலமாற்றுரு, மூலப்பிரதியுரு, மூலமுகமாற்று, மூலவடிவு மாற்றுநிலை ஆகிய 33 சொற்களைப் பரிந்துரைத்துள்ளார்.
ப.இரா.இராச அம்சன், உரு எனப் பொருள் கொள்ளலாம் என்றும், பொதுவாக இதனை வடிவம் என்னும் பொருளைத் தரக்கூடிய சொல்லாகக் கொள்ளலாம் என்றும், எனவே இச்சொல்லுக்கு உருமாற்றம், வேறுருவாக்கம் ஆகிய சொற்கள் பொருத்தமாக அமைந்தாலும், உரு, உருபு, தோற்றம், வடிவம், மாற்றுரு, வேறுரு, உருத்திரிபு, வடிவமாற்றம் ஆகிய சொற்கள் பொருத்தமாக அமையும் என்றும் கூறுகிறார்.
சிவ.தணிகாசலம், உருத்திரிபு, உருத்திரித்தல், உருத்திரிதல் ஆகிய சொற்களை ஒட்டிப்பிறக்கும் சொற்களை,
இடம், பொருள், ஏவல் அறிந்து பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிறார்.
வெ.ஆனந்தகிருஷ்ணன், இலக்கணக்கூறு மொழியியல்படி, உருவியல் (மாற்றுரு) அல்லது வடிவ அமைப்பியல் (சிறிது வேறுபட்ட வடிவம்) ஆகிய சொற்களில் ஏதேனும் ஒன்றினைக் கொள்ளலாம் என்கிறார்.
கோ.மன்றவாணன், உருத்திரிபு, உருமாற்றம், உருப்புனைவு, உருமாற்றாட்டம், உருவேடம், உருமூடி (முகமூடி என்பது போல), பொய்க்கோலம், திரிபுரு, புனையுரு, பொய்யுரு, வேடவுரு, உருமாறுவேடம், உருப்போர்வை, உருப்போர்த்தல் ஆகிய சொற்களையும், வினைச்சொல்லாக வரும்போது, உருத்திரி, உருமாற்று எனத் தேவையான மாற்றங்களைச் செய்துகொள்ளலாம் என்கிறார்.
பா.ஜம்புலிங்கம், விலங்கு-தாவர-சொல்வடிவ அமைப்பு, சொல்லின் வடிவம், உருபனியல், உருமாற்றம், வடிவமாற்றம், திரித்து மாற்றல், சொல்மாற்றல், புகைப்பட வடிவை மாற்றல் ஆகிய சொற்களைப் பரிந்துரைத்துள்ளார்.
செ.சத்தியசீலன், வேர்ச்சொல், சொல்லின் இலக்கணக்கூறு, பகுதி, அடிக்கூறு, உருமாறும்உரு என்றும், இரா.பொ.வீரையன், உருவாக்கம், மாற்றுருவாக்கம் என்னும் சொற்களையும், டி.வி.கிருஷ்ணசாமி, மாற்றம், மாற்றுருபு, மாற்றுச்சொல், சொல்வடிவம், சொற்றுரு என்றும் கூறியுள்ளனர்.
இவை அனைத்தையும் பரிசீலிக்கும்போது, மார்ஃப் என்ற சொல்லுக்கு நாம் உருவாக்கும் இணைச்சொல், மொழியியலில் சொற்கூறுகளைக் குறிப்பதாகவும், அறிவியலில் வடிவத்தைச் சுட்டுவதாகவும், புகைப்படம், திரைப்படம், உயிரியக்கக் கலை (ஹய்ண்ம்ஹற்ண்ர்ய்) மற்றும் கணினித் தொழில் நுட்பத்தில் உருவமாற்றத்தைச் சுட்டிக் காட்டுவதாகவும் அமைந்தால் மிகப் பொருத்தமாக இருக்கும். அப்படிப் பார்க்கும்போது, மார்ஃப் என்ற சொல்லுக்கு உருப்புனைவு என்ற சொல்லும், மார்ஃபாலஜி என்ற சொல்லுக்கு உருப்புனைவியல் என்ற சொல்லும் ஓரளவிற்குப் பொருந்தும் என்று எண்ணுகிறேன். எனவே, மார்ஃப் என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் உருப்புனைவு.