தமிழ்ச் செல்வங்கள் - அம்மா 3
அம்' என்பதில் இருந்து அம்மம், அம்மா உண்டாயதையும் அறிந்தோம். அம்மம் ஆகிய பாலின் சுவையும் பயனும் எவரையும் கவர்ந்தது. உயர்ந்ததாகவும், உயிர் வளம் பெருக்குவதாகவும் புலப்பட்டது. அதனால், அமுது, அமிர்து, அமிழ்து, அவிழ்து என்பவை தோன்றின. அவை, அமுதம், அமிர்தம், அமிழ்தம், அவிழ்தம் எனவும் விரிந்தன. புலமையாளர்களையும் இச்சொற்கள் ஈர்த்தன.
அம்' என்பதில் இருந்து அம்மம், அம்மா உண்டாயதையும் அறிந்தோம். அம்மம் ஆகிய பாலின் சுவையும் பயனும் எவரையும் கவர்ந்தது. உயர்ந்ததாகவும், உயிர் வளம் பெருக்குவதாகவும் புலப்பட்டது. அதனால், அமுது, அமிர்து, அமிழ்து, அவிழ்து என்பவை தோன்றின. அவை, அமுதம், அமிர்தம், அமிழ்தம், அவிழ்தம் எனவும் விரிந்தன. புலமையாளர்களையும் இச்சொற்கள் ஈர்த்தன.
அமிழ்து தந்தவளை, தருபவளை அமிழ்தாகவே கண்டார் திருவள்ளுவர்.
""உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
Advertisement
அமிழ்தின் இயன்றன தோள்'' (1106)
என்றார். அமிழ்து தந்த குழந்தையை, "அமிழ்து' என்றார். குழலையும் யாழையும் வெல்லும் குழந்தையின் மழலை என்ற அவர், அக்குழந்தை தொட்ட உணவு, அமிழ்தினும் மிகச் சிறந்தது என்றார்.
""அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்'' (64)
என்பது அது. இளங்கோவடிகள் மழலைச் சொல்லை, ""குழலும் யாழும் அமிழ்தும் குழைத்த மழலை'' என்றார்.
பாரதிதாசனார், ""தமிழுக்கு அமுதென்று பேர் - அந்தத் தமிழெங்கள் உயிருக்கு நேர்'' என்று தமிழையே அமிழ்தாக்கினார்.
"தமிழ் தமிழ்' என்று பலமுறை அடுக்கிச் சொன்னால் "அமிழ்து அமிழ்து' என்று வருவதை நாம் அறியலாம்! உணர்ந்து சுவைத்துப் போற்றலாம்! தமிழ் அமிழ்து ஆயதால், அதன் சுவையை எண்ணிய நிகண்டு ஆசிரியர், ""தமிழென்ப இனிமை முத்தி'' என்றார்.
தமிழ், தொல்காப்பியரால் "செந்தமிழ்' எனப்பட்டது. செம்மையாவது கலப்படமற்றது - தூயது - என்பதாம். அதனால் தூய மழை நீரைத் திருவள்ளுவர் "வானமிழ்து' என்றார்.
""வானின் றுலகம் வழங்கி வருதலால்
தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று'' (11)
என்பது அது. தாய் தரும் பால் "அமிர்தப் பால்' எனப்படுகிறது. காதற் குழந்தையொடு காதற்ற
லைவி சொல், ""அமிழ்து பொதி கிளவி'' எனப்படுகிறது. கிளவி - சொல்.
பெருமாள் கோயில் திருவுணவுகளைப் பார்த்தால் பாலமுது, சாற்றமுது, சோற்றமுது, நீரமுது என நீளும். கடல் தரும் அமுது உப்பு. "உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. ஆதலால், உப்பு என்பதற்குச் சுவை, இன்பம் ஆகிய பொருள்கள் உண்டாயின.
""உப்பமைந்தற்றால் புலவி'',
""நின் மெய் வாழ் உப்பு'' என்று புலமையர்
கூறினர்.
நோய் துன்பம் தருவது; துன்பம் நீக்கி இன்பம் ஆக்கும் மருந்து அவிழ்து, "அவிழ்தம்' எனப்பட்டது. நோய்க்குப் "பிணி' என்பது ஒரு பெயர். பிணி என்பது கட்டு. கட்டை அவிழ்த்து உலவ விடுவது அவிழ்து எனவும் அவிழ்தம் எனவும் ஆயது. ஆதலால் "சாவா மருந்து' என்பதற்கு அமிழ்து, அமுது என்றனர். அதனைக் கண்ட புனைவாளர்
அமிழ்தம் (அமிர்தம்) உண்டவர் அமரர் எனப் புனைந்தனர்.
தொடர்வோம்...