தமிழ்மணி

சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு!

காதலையும் வீரத்தையும் இரு கண்களெனப் போற்றி வருதல் தமிழ் மரபு.

முனைவர் க. சிவமணி

காதலையும் வீரத்தையும் இரு கண்களெனப் போற்றி வருதல் தமிழ் மரபு. இவ்விரு பண்புகளுக்கும் சற்றும் குறையாத விருந்தோம்பற் பண்பைத் தம் உடைமைகளில் ஒன்றாகக் கருதி வந்தவர்கள் நம் சங்ககால வேந்தர்கள். மூவேந்தர்களுள் ஒருவரான சேர அரசர்களின் விருந்தோம்பற் சிறப்பைக் காண்போம்.

கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனைக் கபிலர், "மேகம் பயன் கருதாது உரிய நேரத்தில் பெய்து மண்ணை வளப்படுத்துவதைப் போல நாட்டு மக்களைத் தனது மக்களாகக் கருதிய மன்னன் தனக்கென எதையும் காத்து வைத்துக்கொள்ள எண்ணாமல், தன்னை நாடி வந்தவர்களுக்குத் தாயுள்ளத்தோடு அளித்துத் தானும் உண்டு மகிழும் இயல்புடையவன்' என்னும் பொருள்பட,

""ஆர்கலி வானம் தளி சொரிந்தாங்கு

உறுவர் ஆர ஓம்பாது உண்டு'' (43, 18-19)

என்று பாடி சேரனின் விருந்தோம்பல் சிறப்பை வியந்துரைக்கிறார்.

வளங்கள் மலிந்து கிடக்கும் சேரநாட்டில் தமக்கு எவ்வித வறுமையும் இல்லாமையால் மன்னனிடம் சென்று பொருள் பெற்று வாழும் நிலை இரவலர்க்கு இல்லை. இருப்பினும் மன்னன் ஆட்கோட்பாட்டுச் சேரலாதனுக்கு இரவலர்க்கு அளித்தலை நிறுத்த மனமில்லை. எனவே, மக்கள் நலனில் கொண்ட அக்கறை மிகுதியால் அரண்மனைத் தேரை அனுப்பி இரவலரைத் தேரில் அரண்மனைக்கு வரவழைத்து உணவளித்து மகிழ்கிறான் என்பதை,

""வாரார் ஆயினும் இரவலர் வேண்டி

தேரின் தந்து அவர்க்கு ஆர் பதன் நல்கும்

நகைசால் வாய்மொழி இசைசால் தோன்றல்'' (55,10-12)

என வியந்து போற்றும் காக்கைப்பாடினியார் நச்செள்ளையார், வறுமை நீங்கி தாம் வாழும் காலத்தும் தம் அரவணைப்பிலேயே நாட்டு மக்களை இமைபோல் காத்து மகிழ எண்ணும் வேந்தனின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

பின்வரும் குமட்டூர்க்கண்ணனாரின் பாடல் பசிப்பிணி மருத்துவராய்த் திகழ்ந்த இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் ஈகைச் சிறப்பை எடுத்துரைக்கிறது.

பசிப்பிணியால் ஆட்கொள்ளப்பட்டு சேரலாதனின் அரண்மனையை நோக்கி இரவலர் கூட்டம் வருகிறது. தன்னை நாடிப் பசியோடு வந்த இரவலர் கூட்டத்தைக் கண்ணுற்ற சேரன் பசிப்பிணியை வேரறுக்கும் பொருட்டு ஆட்டிறைச்சியுடன் தும்பைப் பூப் போன்ற சோற்றுடன் கள்ளையும் உண்ணத் தருகிறான். பருந்தின் சிறகைப் போன்ற கந்தையான உடைகளுக்கு மாற்றாக பட்டாடைகளை வழங்கி மகிழ்கிறான். அத்துடன் ஒளி பொருந்திய ஆபரணங்களை இரவலர் பெண்டிர் அணிந்து இன்புறச் செய்தானாம். இதனை,

""தொல்பசி உழந்த பழங்கண் வீழ

எஃகு போழ்ந்து அறுத்த வால் நிணக் கொழுங்குறை

மை ஊன் பெய்த வெண்ணெல் வெண்சோறு

நனை அமை கள்ளின் தேறலொடு மாந்தி

ஈர்ப்படு பருந்தின் இருஞ்சிறகு அன்ன,

நிலம்தின் சிதாஅர் களைந்த பின்றை

நூலாக் கலிங்கம் வால் அரைக் கொளீஇ

வணர் இருங் கதுப்பின் வாங்கு அமை மென் தோள்

வசை இல் மகளிர் வயங்கு இழை அணிய'' (12,15-23)

என்ற அடிகளில் எடுத்துரைத்தல் சேர மன்னர்தம் விருந்தோம்பல் சிறப்பைத் தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

ஆந்திரம்: மது வாங்க ரூ.10 கொடுக்க மறுத்த நபரைக் கொன்ற இளைஞர்

பழைய செய்திகளைப் படித்துவிட்டு குற்றச்சாட்டு வைக்கிறார் விஜய்: அமைச்சர் அன்பில் மகேஸ்

பிஎம்டபிள்யூ மோட்டராட் இந்தியா விலை உயர்வு அறிவிப்பு!

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது

SCROLL FOR NEXT