சொல் வேட்டை- 46
'டிஜிட்' என்ற சொல் விரல்களைக் குறிக்கும் "டிஜிட்டி' என்னும் இலத்தீன் சொல்லிலிருந்து பிறந்தது.
'டிஜிட்' என்ற சொல் விரல்களைக் குறிக்கும் "டிஜிட்டி' என்னும் இலத்தீன் சொல்லிலிருந்து பிறந்தது. இது எண்களையும், எண்ணிக்கையையும் சுட்டும் குறியீட்டைக் குறிக்கும் சொல். சுன்ன முதல் ஒன்பது வரையிலான பத்து எண்களைக் கைகளில் உள்ள பத்து விரல்களால் குறிக்க முடியும் என்னும் அடிப்படையில் "டிஜிட்' என்ற சொல் பயனாக்கத்திற்கு வந்தது.
"டிஜிட்டல்' என்ற சொல் "டிஜிட்' என்ற வேர்ச்சொல்லிலிருந்து உருவாக்கப்பட்டாலும், பின்னாளில் பண்பலைகளிலிருந்து ஒலியைப் புள்ளிகளின் வடிவத்தில் "டிஸ்க்' என்னும் வட்டத்தகட்டில் பதிவு செய்யும் முறை உருவாக்கப்பட்ட பிறகு, மின்னணுத்துறையில் இச்சொல் வேறுவிதமான பொருளைத் தரத்தொடங்கியது. தற்போது ஒலிஒளிக் காட்சிகளில், எல்லாவற்றையும் புள்ளிகளின் கூட்டமாக மாற்றி டிஜிட்டல் பிக்சர், டிஜிட்டல் சவுண்டு என்றெல்லாம் மின்னணுத் தொழில்நுட்பம் டிஜிட்டல் டெக்னாலஜியாக வளர்ச்சி பெற்ற காரணத்தால், விரல்கள், எண்ணிக்கை என்ற பொருள்களைத்தாண்டி, டிஜிட்டல் என்ற சொல் வெகுதூரம் வந்துவிட்டது.
டிஜிட்டல் என்ற சொல் analog என்ற சொல்லுக்கு எதிர்ச்சொல்லாகும். வீட்டிலுள்ள முட்கடிகாரத்தையும், கைக் கடிகாரமான டிஜிட்டல் கடிகாரத்தையும் நாம் பார்ப்பதன் மூலம் இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்ளலாம். சுவரில் மாட்டியுள்ள முட்கடிகாரம் அனலாக் (analog) வடிவம் பெற்றது. அது ஒரு நாளில் வரக்கூடிய அனைத்து நேரத்தையும் ஒருங்கே காட்டக்கூடியது. ஆனால், டிஜிட்டல் கடிகாரம் புள்ளிகளின் சேர்க்கையாக இருப்பதால், அது ஒரு குறிப்பிட்ட சமயத்தில் ஒரே ஒரு நேரத்தை மட்டுமே காட்டும். முதன்முதலில், இவ்வுலகில் உருவாக்கப்பட்ட கணினியே அனலாக் கம்ப்யூடர் தான். இதை 1930-இல் அமெரிக்க மின் பொறியாளராகிய வன்னெவர் புஷ் உருவாக்கினார். அதைத் தொடர்ந்து, 1939-இல் அமெரிக்க கணிதமேதை மற்றும் இயற்பியல் அறிஞரான ஜான்
அதனசாஃப் ஒரு மின்னணு டிஜிட்டல் கம்ப்யூடரை உருவாக்கினார். இவற்றைக் கருத்திற்கொண்டு, இவ்வாரக் கடிதங்களைப் பார்ப்போம்.
வே.ப.பாலசுப்ரமணியன், digit என்பது பெயர்ச்சொல் என்றும், ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில், இச்சொல்லுக்குக் கைவிரல், கட்டைவிரல், கால்விரல் ஆகிய பொருள்களுடன், ஒளி உமிழும் "டையோடு' என்ற பொருளின் உதவியால் 0-9 ஆகிய எண்களை அடையாளம் காண்பது என்ற பொருளும் தரப்பட்டுள்ளது என்றும், மேலும் குறியீடு மூலம் எண்களை அறிவதால் இச்சொல்லுக்கு "எண்குறியீடு' என்ற பொருள் பொருந்தும் என்கிறார்.
டி.வி.கிருஷ்ணசாமி, எண்முறை, இலக்கமுறை, எண்களின் வரிசையில் இயங்குபவை, எண்கருவி, இலக்க வரிசை என்று கூறியுள்ளார். வெ.ஆனந்தகிருஷ்ணன், ஆகஸ்ட் 2010-இல் வெளிவந்த மஞ்சரி மாத இதழை மேற்கோள்காட்டி, மின்னணு சம்பந்தப்பட்ட இச்சொல்லுக்கு "துடிமம்' என்ற சொல்லை இணைச்சொல்லாகக் கொள்ளலாம் என்கிறார்.
என்.ஆர்.ஸத்யமூர்த்தி, எண்ணிம, எண்ணிம முறை, எண்ணியல், துளிசேர்க்கை, தொடரில் மின்னலை, மின் இடைவெளி என்றும், சோலை கருப்பையா, எண்ணியல் மென்பொருள், எண்சார் தொழில்நுட்பம் என்றும், கோ.மன்றவாணன், எண்ணியல், எண்மம், எண்முறை, எண்ணிமம், எண்குறிமம், இலக்கமுறை, எண்ணூட்டல், எண்சைகை, எண்செய்கை, எண்குறியீடு, எண்முறைக் குறியாக்கம் முதலிய சொற்களையும் பரிந்துரைத்துள்ளனர்.
அ.கு. மான்விழி, விரல்கூறியல், அளவையியல், ஓரிலக்க எண், மின்னியல் செய்தி, மின்னியல் குறியீடு, மின்னணு ஒலிஒளி, மின்னணுக் குறியீட்டுச்செய்தி முதலிய சொற்களையும், ஹரணி, எண்ணுருக்கூறு, எண்ணிலக்கக்கூறு, எண்ணிலக்கம், எண்ணிலக்க உரு, விரலிடை அளவுக்கூறு, அங்குலக்கூறு, இலக்க வரிக்கூறு, சிற்றிலக்கம் முதலிய சொற்களையும் பரிந்துரைத்துள்ளனர்.
சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியத்தில், "டிஜிட்' என்ற சொல்லுக்கு விரல், விரலகலம், இலக்கம், எண்ணின் வரிவடிவக் கூறு, சுன்னமுதல் ஒன்பது வரையுள்ள எண்மான உரு, கதிரவன் அல்லது திங்களின் விட்டவடிவில் 12-இல் ஒரு கூறு ஆகிய பொருள்களும், "டிஜிட்டல்' என்ற சொல்லுக்கு, விரல், இசைக்கருவி வகையின் முறுக்காணி, விரல்சார்ந்த ஆகிய பொருள்களும் தரப்பட்டுள்ளன.
வாசகர்கள் கொடுத்துள்ள சொற்களுள், எண்ணியல் என்ற சொல் எண்களைக் குறித்த ஓர் இயல் என்று பொருள் தரவும் வாய்ப்புண்டு. எண்ணிலக்கம் என்ற சொல்லில் டிஜிட்டல் என்ற பொருளைவிட டிஜிட் என்ற பொருளுக்கே குறிப்பதிகம் (உதாரணமாக 4 digit numbers என்பது 4 இலக்க எண்கள் ஆகும்). எனவே, நாம் கொள்ளும் பொருள், எண்கள் மற்றும் தொழில்நுட்பத்தில் எண்களின் வடிவாகக் (digital form) குறிப்புரைத்தல் ஆகியவற்றை உணர்த்த வேண்டும். அப்படிப் பார்த்தால், டிஜிட்டல் என்ற சொல்லுக்கு மிகப் பொருத்தமான இணைச்சொல் "எண்ணுருக் கூறு' என்றே எண்ணுகிறேன்.