சங்கப்பலகை: பெண்பாற் புலவர்களின் சமுதாய ஆளுமை!
பண்டைத் தமிழக மகளிர் சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருந்துள்ளனர் என்பதை சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியலாம்.
பண்டைத் தமிழக மகளிர் சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருந்துள்ளனர் என்பதை சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். சங்க இலக்கியங்களில் 42 பெண்பாற் புலவர்கள் பாடிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அக்காலத்தே மகளிர் கல்வி கேள்வியில் சிறந்து விளங்கினர். பெண் கல்வியில் சிறந்த நாடாக சங்ககாலத் தமிழகம் விளங்கியது.
ஒளவையார், பொன்முடியார், ஆதிமந்தியார், காக்கைப்பாடினியார், வெள்ளிவீதியார் முதலானோர் புலவர்களாக இருந்து இலக்கியத் தொண்டாற்றியுள்ளனர். அவர்களுள் ஒüவையார், பொன்முடியார் ஆகிய இருவரின் சமுதாய ஆளுமைகளைக் காண்போம்.
"பாணர்' குடியில் பிறந்த ஒüவையார் அரசியல் ஆலோசகராகவும், தூது செல்பவராகவும் இருந்திருக்கிறார். ஆண் - பெண் நட்பிற்கு ஒரு முன்னோடியாக இருந்ததையும் காணமுடிகிறது.
Advertisement
Advertisement
ஒரு சமயம், தகடூர் மன்னன் அதியமானுக்கும், காஞ்சி மன்னன் தொண்டைமானுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாகத் தொண்டைமான் அதியனின் மீது போர் தொடுக்க விழைந்தான். ஓயாது போரில் ஈடுபட்டால் மக்கள் துன்புறுவர்; இதனால் உள்நாட்டுக் குழப்பம், வறுமை ஏற்படும். இதனைத் தவிர்க்க அதியமான், ஒüவையைத் தொண்டைமானிடம் தூது அனுப்பினான்.
தொண்டைமான், ஒüவையை அன்புடன் வரவேற்று, உபசரித்துத் தன் படைக்கலன்களைக் காண அழைத்துச் செல்கிறான். அவனது ஆணவத்தையும் அகங்காரத்தையும் உணர்ந்து கொண்ட ஒüவை,
""இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய் யணிந்து,
கடியுடை வியன் நகர் அவ்வே; அவ்வே
பகைவர்க் குத்தி கோடுநுதி சிதைந்து,
கொல்துறைக் குற்றில மாதோ - என்றும்
உண்டாயின் பதம் கொடுத்து
இல்லாயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல் எங்கோமான் வைந்நுதி வேலே'' (புறநா.95)
என்கிறார். "அரசே! உன்னுடைய படைக்கருவிகள் எல்லாமே புத்தம் புதிதாகச் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றன. அழகாக அலங்கரிக்கப்பட்டு மயிற்பீலி சூடி கண்ணுக்கு நிறைவாக இருக்கின்றன. ஆனால், அதியனின் வேற்படைகள் பழைய கருவிகளாக அன்றோ காட்சியளிக்கின்றன! வேல் முனைவேறு மழுங்கிக் காணப்படுகிறது. உன் கருவிகள் எல்லாம் எத்தனை அழகாய் வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அதியனது படைக்கருவிகள் பாதிநேரம் கொல்லன் பட்டறையில் பழுதுபார்க்கச் சென்றுவிடுகின்றன' என்று புகழ்வதுபோல அவனைப் பழித்தார். மேலும், "செல்வம் உள்ளபோது பலருக்குக் கொடுத்தும், செல்வம் இல்லாதபோது உள்ளதைப் பலரோடு உண்ணும் வறியவர்களின் சுற்றத்திற்குத் தலைவன் அதியன்' என்றும் கூறுகிறார்.
இதனைக் கேட்ட தொண்டைமான் தன் முடிவை மாற்றிக்கொண்டான். இரு மன்னர்களுக்கிடையே போர் மூளக்கூடிய நேரத்தில், தூது சென்று போரைத் தடுப்பது என்பது எளிதான செயல் அன்று. அச்செயலைத் திறம்படச் செய்து முடித்த பெண்பாற் புலவரான ஒüவை போற்றுதற்குரிய பெண்மணி ஆவார். முதல் பெண் தூதுவர் என்ற சிறப்புக்கும் உரியவர்!
""பால் கொண்டு மடுப்பவும் உண்ணா னாகலிற்
செறாஅ தோச்சிய சிறுகோ லஞ்சியொடு
உயவொடு வருந்து மன்னே இனியே
புகர்நிறங் கொண்ட களிறட் டானான்
முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே
உன்னில னென்னும் புண்ணொன் றம்பு
மானுளை யன்ன குடுமித்
தோன்மிசைக் கிடந்த புல்லண லோனே'' (புறநா.310)
போர் நடக்கிறது. போரில் எதிரி ஒருவனால் தன் படைக்கருவிகளை இழந்த நிலையில் ஒருவன் காணப்படுகிறான். நிராயுதபாணியாய் நிற்கும் அவன் தன் எதிரிகளை வீழ்த்தத் துடிக்கிறான். அப்போது அவன் மார்பில் பாய்ந்த வேல்களைப் பார்க்கிறான். இறக்கும் தருவாயில் இருக்கும் அவ்வீரன், ""நான் இறப்பதற்கு முன் இவ்வேல்களைப் பார்த்திருக்கக் கூடாதா! அவற்றைக் கொண்டு எதிரிகளை வதைத்திருப்பேனே'' என்று எண்ணி மருகுகிறான். இவ்வீரன் தன்னுடைய இளம் பருவத்தில் எப்படியிருந்தான் என்றால், அவனுடைய தாயார் கிண்ணத்தில் பாலூற்றி எடுத்து வரும்போது அதை உண்ணாமல் அடம்பிடித்து நிற்கும்போது, தாயார் அவனை அடிப்பதற்குக் கொம்பை ஓங்கும்போது அஞ்சி நடுங்கியவனாம். ஆனால் இப்போதோ, போர்க்களத்தில் நின்று தன் உயிரை விடும்போதும் எதிர்த்துப் போரிடத் துணிகிறான். இவ்வாறு நாட்டுப்பற்றுடைய வீரம் செறிந்த கருத்துகள் நிறைந்த பாடல்களைப் பாடியுள்ளார் பொன்முடியார்.
சங்ககாலப் பெண்பாற் புலவர்கள் அக்காலச் சமுதாயத்தைத் தங்கள் பாடல்களில் படம்பிடித்துக் காட்டியுள்ளனர். அரசனுக்கு ஆலோசனைகள் கூறும் மந்திரியாகவும், தூது சென்று வெற்றியுடன் திரும்பும் மதிநுட்பம் கொண்ட தூதுவராகவும், புலமையுடன், சமுதாயத்தைத் திருத்தும் ஆளுமைத்திறன் கொண்டவராகவும் இருந்துள்ளனர் என்பதை சங்க இலக்கியம் தெளிவாக எடுத்துரைக்கிறது.