தமிழ்ச் செல்வங்கள்: உலகம் - 5
""பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி!நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி!தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி!வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி!வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி!''
மணிவாசகர் பாடிய நான்காம் அகவல் போற்றித் திரு அகவல். அதில்,
""பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி!
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி!
Advertisement
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி!
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி!
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி!''
(437-141) என்கிறார்.
ஐம்பொறிகளின் வழியாக ஏற்படும் ஐம்புலன்களை, ""கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐந்தும்'' என்பார் வள்ளுவர். அப்பொய்யா மொழியாரே, "உலகத்து இயற்கை'யைப் பேரா இயற்கை என்றார்.
நிலம் நாம் நிலைபெற நிலையமாம்! நீர், பள்ளம் நோக்கி ஓடும். தீ, மேல் நோக்கி எழும். வளி, வலமாகச் சுழலும். வெளி, விண் என ஒலிக்கும். இஃதியற்கை இவற்றுக்கு! ஆனால், இவ்வியற்கை ஆக்கமும் ஆக்கும்; அழிவும் ஆக்கும்! இருவேறு உலகத்து இயற்கை; இவை மாறா இயற்கை.
எந்த மண் நிலையாக வைத்ததோ, அதுவே நடுங்கி அழிக்கும். எந்த நீர் பருக வாய்த்ததோ, அது வெள்ளமாய் - ஆழிப் பேரலையாய் அள்ளிப் போகும்.
எந்தத் தீ ஒளியும் ஆக்கமும் தந்ததோ, அந்தத் தீ எரிமலையாய்க் கக்கும். எந்தக் காற்று இல்லாமல் உயிர்க்க முடியாதோ, அந்தக் காற்று சுழலாய் மலையையும் சுருட்டும். எந்த விண் அண்டஞ் சுழல வாய்த்ததோ, அது வெடித்துச் சிதறிப் பேரழிவு செய்யும். இவ் விருவேறு இயற்கையை வான் சிறப்பில்,
""கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை''
என்றார். உள்வாங்கு மண் கேட்டை "மட்பகை' என்றே உட்பகைக் கேட்டுக்கு உவமை காட்டினார். உரைக்காரர் ஏறத்தாழ முன்னவர் பின்னவர் என எல்லவரும், உண்மை உரைகாணத் தவறினர். மக்களுக்கு அன்றி ஆள்பவர்க்கும் இவ்வறிவு வேண்டும் கட்டாயம் என்பதால்,
""செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்''
என்று அறிவுறுத்தினார் வள்ளுவர். எங்கே? "அமைப்பு' அதிகாரத்தில். இவ்வாறு கூறினால் போதாது என்று கருதி, அறத்துப் பாலுக்கும் பொருட்பாலுக்கும் ஊடாக அரிமா நோக்கில் (முன்னும் பின்னும் திரும்பிப் பார்க்கும் வகையில்) ஊழ் என ஓர் அதிகாரம் வகுத்தார். அதில் "ஆகூழ்' "போகூழ்' எனவும் வெளிப்படக் காட்டினார். "ஊழ்த்தும்' "ஊழி' என்றும் உலகத்தியற்கையைச் சுட்டினார்.
தொல்காப்பியம், பாட்டு, தொகை, திருக்குறள் ஆகிய இருபது நூல்களிலும், ஊழ், ஊழ்ஊழ், ஊழ்ப்ப, ஊழ்க்கும், ஊழி என வந்ததை அல்லாமல் "ஊழ்வினை' ஓரிடத்தும் வரவில்லை. தொண்ணூற்றாறு இடங்களில் ஊழ் முதலியவை வந்தும், ஓரிடத்தும் ஊழ்வினை வாராதிருக்கக் கண்டும், சிலப்பதிகாரத்து வரும் "ஊழ்வினை'யை "ஊழ்' அதிகாரப் பொருளாகக் காட்டி மெய்ம்மை அறிவியலுக்கு மாறாக்கிவிட்டனர். சமய வாணர்கள் ஊதி ஊதித் தலைவிதி ஆக்கிவிட்டனர்.
இன்று புயல்மூட்டம், புயல் வெளியேற்றம், அலை உள்வாங்கல், அலை மேலேறல், மழைக்குறி என வானொலி, தொலைக்காட்சிகள், செய்தித்தாள்கள் முதலாம் ஊடகங்கள் கூறும் வானிலை அறிக்கையே "ஊழ்' என என்று உலகம் உணருமோ புரியவில்லை!
ஆடும், எறும்பும், கீரியும் பறவையும் முன்னரே அறிந்துகொண்டு இயங்குவது கண்டும் தெளிவு பெறாரை என் சொல்வது? உலகத்தியற்கை இயங்கியல் விளக்கமே "ஊழ்' எனத் தெளிவோம்.
தொடர்வோம்...