முகப்பு
தமிழ்மணி

பொன்னையா பிள்ளையின் பதிப்பும்! கணேசையரின் பண்பும்!

"தொல்காப்பிய எழுத்ததிகார மூலமும் மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் உரையும்' என்னும் தலைப்பிட்ட தொல்காப்பிய எழுத்ததிகாரப்

Updated On : 17 ஆகஸ்ட், 2014 at 12:20 AM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 12:00 PM

"தொல்காப்பிய எழுத்ததிகார மூலமும் மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் உரையும்' என்னும் தலைப்பிட்ட தொல்காப்பிய எழுத்ததிகாரப் பதிப்பு நூலை நா. பொன்னையா என்பவர் முதற்பதிப்பாக 1.1.1937-ஆம் ஆண்டிலும், இரண்டாம் பதிப்பாக 1.1.1952-ஆம் ஆண்டில் பொன்னையாபிள்ளை மீனாட்சியும் பதிப்பித்து வெளியிட்டுள்ளனர். இலங்கையில் உள்ள சுன்னாகம் திருமகள் அழுத்தகம் இப்பதிப்பை அச்சிட்டுள்ளது.

பதிப்பாசிரியர் நா. பொன்னையா, சி. கணேசையரிடம் சென்று, ""தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரையைப் பதிப்பிக்க உள்ளதாகவும், ஆதலால் தாங்கள் விரிவான ஒரு விளக்கவுரை எழுதி உதவினால் அதனை நச்சினார்க்கினியர் உரையோடு சேர்த்து யாம் பதிப்பிப்போம்'' என்றும் கூறினார். அதற்கு சி. கணேசையர், ""உடம்பு நலமில்லாமையால் தாங்கள் விரும்பியவாறு புதிதாகவும் விரிவாகவும் ஒரு விளக்கவுரை எழுதுதல் எமக்கு முடியாது. நச்சினார்க்கினியர் உரையில் விளங்காதவற்றிற்கு யாம் முன் எழுதி வைத்த சில குறிப்புக்களிருக்கின்றன; அவற்றைத் தருகின்றோம். தாங்கள் கொண்டுபோய் அவ்வுரையோடு அச்சிட்டு வெளிப்படுத்தித் தமிழ் மக்களுக்குப் பயன்படுத்துக'' என்று கூறி அவற்றை நா. பொன்னையா பிள்ளையிடம் தந்தாராம்.

 சி. கணேசையர் குறித்துவைத்த குறிப்புகள் அவருக்கு எப்படி உருவாயின என்பதை அவரே, "யாம் படித்த காலத்தும், படிப்பித்த காலத்தும் குறித்துவைத்த குறிப்புகள்' என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, சி. கணேசையர் படித்த காலத்து அவருக்கு ஆசிரியர்களாக விளங்கியவர்கள் வித்துவ சிரோமணி ந.ச. பொன்னம்பல பிள்ளையும், சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவரும் ஆவர். இவ்வாறு ஆசிரியர்களிடம் தொல்காப்பியம் பயின்ற காலத்துக் கிடைத்த குறிப்புகளை சி. கணேசையர் படித்த காலத்து கிடைத்த குறிப்பு என்று குறிப்பிட்டுள்ளார். படிப்பித்த காலத்துக் குறிப்பு என்பதற்கு அவரே, "யாம் படிப்பிக்கும் காலத்தில் பலமுறை ஆராய்ந்து குறித்து வைத்தனவாகும்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

மேலும் இப்பதிப்பில் சி. கணேசையர்,

""யாமெழுதிய இக்குறிப்புக்களெல்லாந் திருத்தமுடையன வென்று எம்மாற் சொல்லுதல் கூடாது. ஏனெனில், முற்கணத்து எமக்குச் சரியாகத் தோன்றியதே பிற்கணத்துப் பிழையாகத் தோன்றுகின்றதாகலின், ஆதலால் இவற்றுள் வரும் பிழையைப் பேரறிஞர் திருத்திக் கொள்வார்களாக. அன்றியும் இவற்றுள் தாங்கண்ட பிழைகளை நேரே எமக்கு அறிவிப்பின், அவற்றை நோக்கி உண்மையென்று கண்டவற்றை அவர்கள் பெயருடனே இரண்டாவது பதிப்பில் வெளியிடுவோம். அதற்கு ஒருபோதும் நாணமாட்டோம். ஏனெனில், சிற்றறிவையே இயற்கையாகவுடைய மக்களுள் யாமும் ஒருவேமாதலின்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம், அக்கால அறிஞர்களின் தமிழ்ப்பற்றும் அவர்களது நேர்மையும், பதிப்பு நெறியின் அறமும் விளங்குகிறது. மேலும்,  தற்காலத்தார் குறிப்பிடும் அச்சகம் என்பது அழுத்தகம் என்ற காரணச் சொல்லால் குறிப்பிடப்பட்டுள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.