முகப்பு
தமிழ்மணி

தமிழ்ச் செல்வங்கள்: கொக்கு - 2

கொக்கின் சொற் கொடையொடு பொருட் கொடையும் பெருகியது. கொக்கு இரவில் தங்கும் இடம் தென்னை மடல், பனைமடல் என அமைந்தன. அதனால், அவற்றுக்குக் "கொக்குறை' எனப் பெயரிட்டான். மாமரத்தில் கொக்கு தங்குவதால் மாமரத்திற்கு "கொக்கு' எனப் பெயர் உண்டாயிற்று. கொக்கு உறையும் குளம் கொக்குக்குளம், கொக்குறை குளம் என வழங்கப்பட்டு அவற்றைச் சார்ந்த ஊர்ப் பெயர்களும் ஆயின.

பகிர்:

கொக்கின் சொற் கொடையொடு பொருட் கொடையும் பெருகியது. கொக்கு இரவில் தங்கும் இடம் தென்னை மடல், பனைமடல் என அமைந்தன. அதனால், அவற்றுக்குக் "கொக்குறை' எனப் பெயரிட்டான். மாமரத்தில் கொக்கு தங்குவதால் மாமரத்திற்கு "கொக்கு' எனப் பெயர் உண்டாயிற்று. கொக்கு உறையும் குளம் கொக்குக்குளம், கொக்குறை குளம் என வழங்கப்பட்டு அவற்றைச் சார்ந்த ஊர்ப் பெயர்களும் ஆயின.

ஒரு முதியவள் தலையில் நரைமுடியைக் கண்ட பாவலன் பார்வையில் கொக்கின் வெண்ணிறம் தோன்றியது. அதனால்,

""மீனுண் கொக்கின் தூவி யன்ன

Advertisement

வால்நரை கூந்தல் முதியோர்''

என்றான். இன்னொரு பாவலன் அவனினும் நுண்ணிய நோக்கினன் போலும்! அவன் கரும்பின் பூவைக் கண்டான். கொக்கின் சிறகை நினைத்தான். ஒத்ததாகத் தோன்றினும் ஏதோ வண்ணத்தில் சிறு வேறுபாடு உள்ளதாகத் தோன்றியது. ஆதலால், மேலும் ஆய்ந்தான். ஒரு நாள் மழையில் நனைந்த கொக்கு ஒன்றைக் கண்டான். வியந்து நின்றான்! அப்படி ஒத்துத் தோன்றியது. அதனால், நனைந்த கொக்கின் இறகு போன்ற கரும்பின் பூ என்றான்.

மூலமாகிய விண்மீன் கொக்கின் வளைந்த அமைவுடையது. குதிரையோ வளைந்து வளைந்து ஓடும். இவற்றைக் கண்ட சொற்றொகுப்புடன் பொருளும் தந்த நிகண்டு நூல்கள்,

""கொக்கு மா மரமே குரண்டமே குதியே மூலம்''

என்றன. கொக்கின் இருப்பும் அமைவும் செயல்திறமும் திருவள்ளுவர் உள்ளம் கவர்ந்தது. அதனால், ஒரு செயலைச் செய்வார் செயல் நிறைவேறத்தக்க நிலை வரும் அளவும் அமைந்து காத்திருக்க வேண்டும். நிறைவேறத்தக்க நேரம் வாய்த்தால் உடனே நிறைவேற்றிவிட வேண்டும் என்பதைச் "சொல்லாமல் சொல்லல்' என்னும் அணி (பிறிது மொழிதல், பிறிது நவிற்சி) முறையில்,

""கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த விடத்து''

என்றார். கூம்பும் பருவம் - செயல் நிறைவேற வாய்ப்பிலாப்பொழுது.

ககர எழுத்துக்கொண்டே ஒரு பாட்டைப் பாட வேண்டும் என ஒருவர் எண்ணினார். ககர வருக்கப்பாட்டு என்பது அது:

""காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை

காக்கைக்குக் கொக்கொக்க ரீகா''

பிரித்துப் படித்தால் பொருள் தானே தெளிவாகிவிடும்.

காக்குக்கு ஆகா கூகை;

கூகைக்கு ஆகா காக்கை;

காக்கைக்கு கொக்கு ஒக்க கோ

காக்கைக்கு - காப்பதற்கு; கோ-அரசு. பழம்பாடல் ஒன்றின் தழுவல்பா இது. அது சிந்தியல் வெண்பா. இது குறள் வெண்பா.

தொடர்வோம்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments