முகப்பு
தமிழ்மணி

தமிழ்ச் செல்வங்கள்: மண் - 1

கையில் எடுக்கிறான்; துகள் துகளான புழுதி; பூழ்தியும் அது பூதியும் அது. பூ எனவும் ஆம். இவையெல்லாம் சொல்லியல் நெறிமுறைகள். துகள் - தூள் ஆவது எப்படி?

பகிர்:

கையில் எடுக்கிறான்; துகள் துகளான புழுதி; பூழ்தியும் அது பூதியும் அது. பூ எனவும் ஆம். இவையெல்லாம் சொல்லியல் நெறிமுறைகள். துகள் - தூள் ஆவது எப்படி?

இரு குறில் ஒரு நெடில் ஆகியது; பொருள் மாறவில்லை. விழுது - வீழ்து ஆவது எப்படி? இரு குறில் நெடிலானது; ஆனால், இரண்டாம் எழுத்தின் ஒற்று நீங்காமல் நின்றது. அதனால், வீழ்து ஆயது. புழுதி பூழ்தி ஆனது அப்படித்தான்.

பொழுது "போழ்து' ஆகிப் "போதும்' ஆகிவிடவில்லையா? எப்பொழுது வந்தார்? எப்போழ்து வந்தார்? எப்போது வந்தார்? ஒரு பொழுது மூவடிவாகிவிட்டதே!

Advertisement

"எப்போதும் வென்றான்' ஒருவன் வீறு; அவன் ஊர்ப் பெயராய் நிலைத்துள்ளதே! புழுதிக்கு மீண்டும் வருவோம். புழுதியில் மழை பெய்கிறது; அல்லது தண்ணீர் விடுகிறோம். புழுதி ஒன்று சேர்ந்து மண்ணாகப் படிகிறதே! மண்ணைக் குழைவாக்கி விடுகிறோம். மண்ணைக் குழைவாக்கி வெயிலில் காய்ந்து - நன்றாகக் காய்ந்தால் கட்டியாகிவிடுகிறதா? குழைந்த மண்ணைக் கலம் வனைவார் பானை, குடம், சட்டி, மூடி என வனைந்து உலர வைத்ததுடன் விட்டுவிடுகிறார்களா? சூளையில் இட்டுச் சுட்டுப் பொசுக்கிக் கட்டமைப்புச் செய்ததுடன் நின்றார்களா?

பச்சை அல்லது ஈரமண்ணாக வனையும் போதே, எத்தனை வரி? எத்தனை கோலம்? எத்தனை ஓவியம்? எத்தனை எழுத்து? -

என நெஞ்சப் பதிவை நிலைப்பதிப்பு ஆக்கிவிடுகிறார்களே! மண்கலப் பெயர் "மண்டை'யாயிற்றே இதே உத்திதானே, செங்கல் கட்டளை! மண்ணைக் குழைக்க - கட்டளையில் வைத்து அழுத்திச் செறிக்க - வெயிலில் காயவிட - சூளையில் வேகவைக்க - அம்மண் கல்லாகிவிட்டதே! அதன் வண்ணச் சிறப்பால் "செங்கல்' ஆகிவிட்டதே! சுடுமண்ணாம் செங்கல்தானே, ""சுடுமண் ஓங்கிய நெடுநிலை மாடம்''

சுடுமண்தானே கலங்கள்! சுடுமண்தானே சுவர்! சுடுமண்தானே தெய்வ உருக்கள்! சுடுமண்தானே கோட்டை கொத்தளம்! புழுதியா இது? செறிவின் - திண்மையின் - கட்டமைவின் - மூலம் அல்லவோ! அதனால்தானே, ""மண் திணிந்த நிலன்'' என்று நம் புறநாநூற்றுப் பாட்டன் கூறினான்.

மண் செறிவு - மட்செறிவு; மண் பானை - மட்பாணை; மண் தாழி - மட்டாழி; மண் குடம் - மட்குடம் என வல்லினம் வர, மெல்லினத்தையும் வல்லினம் ஆக்கும் புணர்ச்சியிலும் புலப்படுத்தினானே! புழுதி மண்ணா இந்த மண்? பொன் மண் அல்லவா!

தொடர்வோம்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments